‘நான் இந்தக் கதையை எழுதி முடித்திருந்தபோது, இதை நெல்சன் தயாரிப்பதாகவும் இல்லை, கவின் நாயகனாக நடிப்பதாகவும் இல்லை.’’ சுவாரசியமான ஓப்பனிங் கொடுத்து ‘அந்திமழை’க்காக பேசத்தொடங்குகிறார் சிவபாலன் முத்துகுமார்.
தீபாவளி ரேஸில் நான்கு படங்களில் ஒன்றாகக் களம் காணவிருக்கும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் அறிமுக இயக்குநர்.
“இந்தப்படம் உருவான கதையை ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்களாம் என்று ஆரம்பித்தாலும் தப்பில்லை. இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக உயர்ந்து வளர்ந்திருக்கிற நெல்சன் திலீப்குமாரும், நம்பிக்கை நட்சத்திரமாய் வளர்ந்து வந்துகொண்டிருக்கிற கவினும் நானும் திரைப்படத்துறைக்கு வருவதற்கும் முன்பே விஜய் டிவியின் கனா காணும் காலத்து நண்பர்கள்.
அப்போது விஜய் டி.வி அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் இருந்தது. பணி முடிந்ததும் டூவீலர்களை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து ஜெமினி பாலம் வழியாக தினமும் மெரினா பீச்சுக்கு நடந்தே செல்வோம். அங்கு நள்ளிரவு வரை எங்கள் பேச்சும் மூச்சும் அடுத்தகட்ட சினிமா நகர்வு குறித்தே இருக்கும்.
2010 ஆம் ஆண்டு அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தின் தயாரிப்பில் ‘வேட்டை மன்னன்’ பட வாய்ப்பு நெல்சனுக்கு வந்தது. அப்படத்தில் நானும் கவினும் உதவி இயக்குநர்கள். சிம்பு, ஹன்ஷிகா மோத்வானி ஜோடி நடிப்பில் யுவன் இசையமைக்க, ஒரு பெரும்பட்ஜெட்டில் தயாராக இருந்த அப்படம் பல மாத கடின உழைப்புக்குப் பின்னர் டிராப் ஆகிவிட்டது. நாங்கள் சந்தித்த பேரிடி. பின்னர் மூவருமே மறுபடியும் சின்னத்திரைக்கு வரவேண்டியதாகிவிட்டது.
நெல்சனுக்கு அடுத்தபடம் ‘கோலமாவு கோகிலா’ கிடைப்பதற்கு எட்டு ஆண்டுகளாகிவிட்டது. அந்த சமயம் கவின் ஓரளவு அறிமுகமான நடிகராகிவிட நான் நெல்சனுடன் ‘கோ.கோ’, ’டாக்டர்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு தனியாக வாய்ப்பு தேடத் தொடங்கியிருந்தேன்.
இப்படி மூவரும் வெவ்வேறு திசைகளில் பய ணித்தாலும் கூடடைவது ஒன்றாகத்தான். நான் தயார் செய்கிற கதைகளை நெல்சன், கவினுடன் எப்போதும் விவாதித்துக்கொண்டேயிருப்பேன். கவின் நடிகராக வளர்ந்துகொண்டிருந்தாலும் எங்களோடு சேர்ந்து நல்ல சினிமாக்கள் பார்ப்பதை தவறவிடுவதேயில்லை.
இந்த சந்தர்ப்பத்தில்தான் ‘ப்ளடி பெக்கர்’ கதையை எழுதி முடித்திருந்தேன்.
வாழ்க்கை குறித்து எந்த ஆசையும் எந்தக் கவலையும் இன்றி அனைவரையும் நக்கல் செய்து கொண்டு, திமிராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு ஆசை வருகிறது. அதை நோக்கிப் பயணப்படும்போது வரும் சிக்கல்கள் தான் கதை.
இந்தக்கதை நாங்கள் மூவரும் பேசத் ஆரம்பித்தபோது நெல்சன் தயாரிப்பதாகவோ கவின் நடிப்பதாகவோ எந்த திட்டமும் இல்லை. நெல்சன் சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொல்ல அனுப்ப, கவின் சில நடிகர்களின் பெயரை சஜஸ்ட் பண்ணவும் செய்தனர். அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது தெரியாத சஸ்பென்ஸ்தானே வாழ்க்கை?
திடீரென ஒரு கட்டத்தில் கவின் ‘நானே நடிக்கிறேனே’ என்று முன்வர, ‘நாமளே தயாரிச்சுடலாமே’ என்று நெல்சன் முன்வர இன்று ‘ப்ளடி பெக்கர்’ மக்கள் பார்வைக்குத் தயாராகிவிட்டது.
நெல்சன் தயாரித்திருப்பதால் இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி அல்லது பிளாக் காமெடி படமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக அப்படி இருக்காது. முழுக்க முழுக்க ஒரு டிராமாவாகவும், திரில்லர் ஜானரிலும் தான் படம் இருக்கும். சில இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும், ஆனால் ஒட்டுமொத்தப் படமாக பார்த்தால் இது நகைச்சுவைப் படம் இல்லை.
இதோ இந்த 15 ஆண்டுகால போராட்டத்தின் முடிவில் ஒரு படம் இயக்கி மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இனி அது என் படம் அல்ல. அதிலிருந்து விட்டு விடுதலையாகிவிட்டேன். அதுதான் சரியும் கூட. அதனால்தான் படம் குறித்து பேட்டிகள் கொடுக்கும்போது ரொம்பவும் சிலாகித்துப் பேசுவதில்லை. இப்படி அடக்கி வாசிக்க இன்னொரு வலுவான காரணம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு புண்ணிய ஆத்மாக்களான மீம் கிரியேட்டர்கள் இருக்கிறார்களே அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ? நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது” என்று முடிக்கிறார் சிவபாலன் முத்துகுமார்.
’ப்ளடி மீம் கிரியேட்டர்ஸ்’னு ஒரு படம் எடுங்க பாஸ்.