"ஹீரோ வாய்ப்பைத் தவிர்த்துட்டேன்!''

லொள்ளு சபா சுவாமிநாதன்
லொள்ளு சபா சுவாமிநாதன்
Published on

திரைப்படக் கல்லூரியில் படிச்சப்பவே ஹீரோ வாய்ப்பு வந்துச்சு. நான்தான் தவிர்த்துட்டேன். ஏன்னா, ஹீரோ ஆகிட்டா படங்கள் ஹிட் ஆகணும். அதற்குப் பிறகு ஹீரோ இமேஜிலிருந்து இறங்கி வர முடியாது. சினிமாவுல பாரதிராஜா, பாலச்சந்தர் மூலமா அறிமுகமாகணும்னு ஆசப்பட்டேன். கொட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் கொட்டுப் படணும் சொல்லுவாங்க இல்லையா…!” என கலகலப்பாக பேசத் தொடங்கினார் லொள்ளு சபா சுவாமிநாதன். மலையாளப்பட இயக்குநர் பரதன் எடுத்த ‘ரதிநிர்வேதம்’ படத்தில் நடிக்க இவரை அப்போதே அழைத்திருக்கிறார். மொழி பிரச்னை இருக்கும் என்பதாலும் பரதன் பற்றித் தெரிந்திராததாலும் அப்போது போகவில்லை என்று போகிறபோக்கில் குறிப்பிடுகிறார்.

காமெடி நடிகராகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நன்கு அறியப்பட்டவர் சுவாமிநாதன். தமிழில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

 ‘கும்பகோணத்தில் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து சினிமா மீது அப்படியொரு மோகம். தீபாவளி பொங்கலுக்கு அஞ்சு ஷோ போடுறாங்கனா நாலு ஷோவை நானும் எங்க தம்பியும் பார்த்துடுவோம் படிக்கும்போதே படிப்பை விட்டு நடிக்க வரணும்னு ஆசை. ஆனா அதுக்கு என்ன பண்ணனும்னு தெரியல!

வேப்பத்தூர் கிட்டுனு எங்க தாத்தா. அவரு ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பாத்தாரு. ஒருமுறை அவரு ஊருக்கு வந்தப்போ, டிராமா போட்டோம். அதை பார்த்தவர், ‘நீ நடிக்க போகலாமே’னு சொன்னார். யாரிடமாவது சிபாரிசு பண்ணுங்களேனு கேட்டேன். முடியாதுனு சொல்லிட்டார்.

வேண்டும்னா நடிப்பை சொல்லித்தரும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சுட்டு வா… யாரிடமாவது சொல்லிவிடுறேன்னாரு. அட்மிஷனுக்காக ஃபிலிம் இன்ஸ்டிடியூட் போனப்போ பயந்துட்டேன். அங்கே ஆயிரம் பேர் அட்மிஷனுக்கு வந்திருந்தாங்க. நமக்கெல்லாம் எங்கே சீட் கிடைக்கப்போகுதுனு ஒரு பதட்டம் இருந்தாலும், வாய்ப்பை விட்றகூடாது என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். என் பெயரைச் சொல்லி கூப்பிட, தயக்கத்தோடு உள்ளே போனேன். அங்கே நடிகை பானுமதி, புட்டண்ணா,   ீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ராமண்ணானு பத்து மிகப்பெரிய கலைஞர்கள் செலக்‌ஷன் கமிட்டியில் இருந்தாங்க.

நான் அவங்ககிட்ட சிவாஜி பேசிய வசனத்தைப் பேசிக்காட்டினேன். 'யாரையும் இமிடேட் பண்ணாம, காமெடியா பண்ணு'னு சொன்னாங்க. உடனே நானும் அப்படிப் பேசிக்காட்டினேன். கைதட்டினாங்க. பிறகு, ஒருவழியா எனக்கு அட்மிஷன் கிடைச்சது.

அப்போ நாசரும் அட்மிஷனுக்கு வந்திருந்தார். அவர் செலக்ட் ஆகல. நான் சேர்ந்த அடுத்த வருஷம்தான் அவருக்கு சீட் கிடைச்சது. ஃபிலிம் சேம்பர்ல படிச்சு முடிச்சுட்டு இங்கே வந்து படிச்சார். ‘நீதான் படிச்சு முடிச்சிட்டியே. எதுக்கு மறுபடியும் படிக்கிற'னு கேட்டேன். ‘இன்னும் நிறைய கத்துக்கணும். அதான், இங்கே சேர்ந்தேன்’னு சொன்னார். அதுதான் நாசரிடம் எனக்குப் பிடிச்ச விஷயம். கலைமீது தீராத தாகம்கொண்டவர் நாசர். தினமும் செங்கல்பட்டிலிருந்து டிராவல் பண்ணி வருவாரு மனுஷன். செம்ம ஹார்ட் வொர்க்கர், அதேசமயம் ஜாலியான ஆளு.

நான் சினிமாவுக்கு வந்தது பிடிக்காம எங்கண்ணன் பணம் அனுப்புவதை நிறுத்திட்டாரு. எங்கம்மா ஒரு மூவாயிரம் கொடுத்தாங்க. அந்த பணம் ரொம்ப உதவியா இருந்துச்சு. படிப்பு முடிச்சதும் கொஞ்ச நாள் ஆனந்த விகடனில் டெஸ்பாட்ச்ல வேலை பார்த்தேன். பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு பாம்பே போனேன். அங்கே வெளிமாநிலத்துக்காரர்களை யாரும் மதிக்கல. மீண்டும் சென்னை வந்தேன். மேடை நாடகத்திலும் நடிக்கத் தொடங்கினேன். ஆயிரம் நாடகத்தில் நடித்திருப்பேன். சினிமா வாய்ப்பு தேடி ஐந்தாறு வருஷம் நாயா பேயா அலைஞ்சேன். நடந்தே போய்தான் வாய்ப்பு கேட்பேன்.

நான் நடித்த முதல் படம் ‘நான் சிகப்பு மனிதன்'. அதுவே ஒரு சுவாரசியமான சம்பவம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருந்தவங்க எல்லாம் படக்குழுவினருக்குத் தெரிந்தவர்களா இருந்தாங்க. முன் வரிசையில உட்கார்ந்திருந்த என்னை ஒவ்வொருவராகப் பின்னுக்குத் தள்ளி கடைசி வரிசைக்கே அனுப்பிட்டாங்க. ஆனா, எனக்கு முன்னாடி போன ஒவ்வொருவரும் ரிஜெக்ட் ஆகித் திரும்பி வர, நான் உள்ளே போனேன். இயக்குநர் எஸ்.ஏ.சி சார் ஒரு வசனம் கொடுத்துப் பேசச் சொன்னார். நல்லபடியா பேசினேன். என்னையே செலக்ட் பண்ணிட்டாங்க. பிறகு, படிப்படியா பல படங்கள்ல தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரை 600 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன்.’ என்றவரிடம் லொள்ளு சபா அனுபவத்தைக் கேட்டோம்.

‘ஒருமுறை மாட்டுப் பொங்கலுக்கு விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒண்ணு பண்ணோம். மாட்டை இண்டர்வியூ எடுப்பது மாதிரி. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு ‘பாபா’ படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க. அப்ப விஜய் டியிலிருந்தும் கால் பண்ணாங்க. அப்படித்தான் லொள்ளு சபாவுக்குள்ள வந்தேன். எனக்கு பிறகுதான் பாலாஜி, மனோகர், சந்தானம் எல்லாம் வந்தாங்க. யோகி பாபுவுக்கான வாய்ப்பை நான்தான் வாங்கிக் கொடுத்தேன்.

அந்த நிகழ்ச்சிக்கு இயக்குநராக இருந்தவர் ராம்பாலா. லொள்ளு சபாவில் நிறைய படங்களை பகடி பண்ணோம். போக்கிரி படத்தை பேக்கரினு பகடி செஞ்சோம். எஸ்.ஏ. சந்திரசேகர் சண்டைக்கே வந்துட்டாரு. அதுக்காகவே விஜய் டிவி விஜய்க்காக பாராட்டு விழா ஒண்ணு நடத்தினாங்க. சிவாஜியின் தெய்வமகன் படத்தை பகடி செஞ்சதுக்காக பிரபுவும் ராம்குமாரும் விஜய் டிவி ஆபிஸுக்கு வந்துட்டாங்க. ரெண்டு முறை டெலிகாஸ்ட் பண்ண வேண்டிய தெய்வமகன் நிகழ்ச்சிய ஒரேமுறையோடு நிப்பாட்டிட்டாங்க. இந்துக் கடவுளை இழிவுப்படுத்தியதாக ராமகோபாலன் போராட்டம் நடத்தினார். இப்படி தொடக்கத்தில் எதிர்ப்பு இருந்தாலும் போகப்போக மக்கள் ரசிக்க தொடங்கிட்டாங்க. இப்போ வரைக்கும் என்னை பலபேருக்கு தெரியுதுனா அது லொள்ளு சபா மூலம்தான்.

 ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடிக்க சந்தானம் மூலமாக வாய்ப்பு கிடச்சது. ‘அரியர் ப்ரண்ட்’ காமெடி என்னை பெரிய அளவுக்கு தெரியப்படுத்தியது. அப்ப நடித்தபோது இவளோ பெரிய ஹிட்டாகும்னு தெரியாது.

என் வாழ்க்கையை மாத்தியது லொள்ளு சபாவும், பாஸ் என்கிற பாஸ்கரன் படம்தான். இப்போ வரும் இளம் இயக்குநர்கள் லொள்ளு சபாவை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால் என்னை ஈசியா அடையாளம் கண்டு எனக்காக வாய்ப்புகளை தர்றாங்க. இன்னைக்கு இருக்கும் இளைஞர்கள் ரொம்ப வேகமா முன்னேறி போறாங்க. இதனால அவங்க ஜெயிக்குறாங்க. நாங்களாம் அலை மாதிரி மோதி மோதி திரும்பிக் கொண்டிருக்கி-றோம்,’ என நேர்காணலை சீரியசாக முடித்தார் சுவாமி நாதன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com