வெள்ளப் பாதிப்புகளில் மெல்ல, மெல்ல சென்னை மீண்டு வரும் வேளையில் அந்தப் பாதிப்புகளை மிக அதிகமாகத் தாங்கியிருந்த சென்னை ராமாபுரம் பகுதியில் இருக்கும் நடிகர் டெல்லி கணேஷை பார்க்கச் சென்றோம்.
2 கிலோ மீட்டர் தள்ளி தள்ளுவண்டியில் காய் விற்பவர்கூட மிகச் சரியாக அடையாளம் காட்டுகிறார் டெல்லி கணேஷின் வீட்டை. தனது நீண்ட நெடிய திரையுலக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் டெல்லி கணேஷ்.
“அப்போது நான் காஷ்மீரில் இந்திய விமானப் படையில் கார்ப்பரேலாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்ப ஒரு ஆர்வத்தில் நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். பின்னாடி நானே டெல்லியில் தமிழ் நாடகங்களை போட ஆரம்பிச்சேன். சில தனியார் நாடகக் குழுக்கள் அவங்க குரூப்ல யாராவது ஒருத்தர் வரலைன்னாலும் என்னைய கூப்பிடுவாங்க. போய் நடிச்சுக் கொடுத்திட்டு வருவேன். இப்படியே தொடர்ந்து நடிச்சுக்கிட்டிருந்தேன்.
தமிழ்நாட்டுல இருந்து மேஜர்சுந்தர்ராஜன், பூர்ணம் விசுவநாதன்னு நிறைய பேர் டெல்லில நாடகம் போட வருவாங்க. அவங்ககிட்ட ஸ்கிரிப்ட்டையெல்லாம் வாங்கி நான் போட்டிருக்கேன். மெட்ராஸ்ல சக்கைப்போடு போட்ட நாடகங்களை யெல்லாம் டில்லில நான்தான் போட்டேன். கே.பாலசந்தரின் நாடகங்களையும் போட ஆரம்பித்த பின்புதான் அவரது தொடர்பு கிடைத்தது.
சினிமாவில் நுழைந்தவிதம்?
திடீர்ன்னு எனக்கு கல்யாணம் நிச்சயமானது. எனது சொந்த அத்தைப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சேன். நீ டெல்லில இருக்குற வேலையெல்லாம் வேண்டாம். இங்க பக்கத்துல வந்திருன்னு வீட்ல எல்லாரும் சொன்னதால மிலிட்டரி வேலையை விட்டுட்டு இங்கேயே சென்னைக்கு வந்திட்டேன்.
வந்த இடத்துலதான் மேஜர் சுந்தர்ராஜனுடன் இணைந்து பல நாடங்களில் நடித்தேன். அதில் ஒரு நாடகத்தை கே.பி. பார்க்க வந்தார். வந்த இடத்தில் என்னை பிடித்துப் போக.. சொன்ன மாதிரியே பட்டினப்பிரவேசம் படத்துல என்னையும் அறிமுகப்படுத்தினாரு.
அப்போ வெறும் கணேசனா இருந்தேன். ஏதாவது பெயர் வைக்கணுமேடான்னார். டெல்லி கணேஷ்ன்னு நச்சுன்னு வைச்சாரு. அவர் தொட்டு ஆசீர்வதித்த நேரம்.. இன்றைக்கு இந்த 35 வருட காலமாக இந்த டெல்லி கணேஷின் பெயர் உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் வீடுகளில் பேசப்படுகிறது. இது நான் செய்த பெரும் பாக்கியம்.
முதல் படத்தில் அறிமுகப்படுத்திய பின்பு அடுத்த 7 ஆண்டுகளுக்கு கே.பி. உங்களை அழைக்கவில்லையே.. ஏன் என்று எனக்குத் தெரியலை. பட்டினப் பிரவேசம் படத்துக்கப்புறம் அவர் கூப்பிட்டது அச்சமில்லை அச்சமில்லை படத்துல ராஜேஷுக்கு அப்பாவா நடிக்கத் தான். முதல்ல வேற ஒரு நடிகரை வைச்சுத்தான் படமாக்கியிருக்காரு. ஆனால் அவரால திருநெல்வேலி தமிழ் பேச முடியல. என்னைக் கூப்பிட்டாரு. அந்த திருநெல்வேலி தமிழையே தென்காசில ஒரு மாதிரி, கன்னியாகுமரில ஒரு மாதிரின்னு பேசுவாங்க. நான் விதம்விதமான பேசிக் காட்டினேன். சரி.. நீயே நடின்னுட்டாரு..
முதல் நாள் ஷாட் பிரேக்ல அவர்கிட்ட கேட்டேன்.. ஏன் ஸார்.. 7 வருஷமா என்னைய கூப்பிடலைன்னு.. அதான் இப்ப கூப்பிட்டனேன்னாரு. அது சரி ஸார்.. இதுக்கு முந்தின படங்கள்ல நான் இல்லையேன்னேன்.. அவர் கண்ணு சட்டுன்னு கலங்கியிருச்சு.. இல்லடா.. இனிமே இருப்படா.. எப்பவும் என் படத்துல நீ இருப்பன்னு சொல்லி என்னை அணைச்சுக்கிட்டாரு.. கடைசிவரைக்கும் அந்த அணைப்பை அவர் விடலை..
ஷூட்டிங்கின்போது வசனத்தில், காட்சியில் நடிகர்கள் திருத்தம் சொல்வது சில இயக்குநர்களுக்கு பிடிக்காது. இது போன்ற அனுபவங்கள்..?
அது ஒரு சில பேருக்கு பிடிக்கும். பல பேருக்கு பிடிக்காது. உதாரணமா ஆனந்தம் படத்துல ஒரு சீன் வரும். தம்பியா நடிச்ச அப்பாஸ் வேலை கிடைச்ச சந்தோஷத்துல மம்முட்டி கால்ல வந்து விழுவாரு. அப்போ அதே ஷாட்ல நான் அம்மாவா நடிச்ச ஸ்ரீவித்யாவும் இருக்கோம். அப்போ நான் இயக்குநர் லிங்குசாமிகிட்ட சொன்னேன்.. அம்மா, அப்பா இங்கதான் உக்காந்திருக்கோம். எங்க கால்ல விழுகாமல் அண்ணன் கால்ல விழுந்தால் எப்படி.. நல்லாயில்லையேன்னேன். லிங்குசாமி இல்ல ஸார். இப்படியே இருக்கட்டும்னாரு. நானும் பதில் பேச.. அவரும் பதில் பேச.. இதுக்கு இடைல மம்முட்டியும் சூடாயிட்டாரு.. இப்போ என்ன.. உங்க கால்ல விழுகணும், அவ்ளோதான என்றார். இல்ல ஸார்.. நீங்க இப்போ மம்மூட்டியா பாக்குறீங்க.. பேசுறீங்க. நான் அப்பா ஸ்தானத்துல இருக்கேன். அதுனால பேசுறேன்னேன்.. லிங்குசாமியும் பிடிவாதமா முடியாதுன்னாரு. சரின்னு ஓய்ஞ்சு போய் விட்டுட்டேன். ஆனாலும் வேறொரு பாடல் காட்சில என் கால்லேயும் ஸ்ரீவித்யா கால்லேயும் விழுகுற மாதிரி ஒரு ஷாட் எடுத்து இடைல சேர்த்திட்டாரு லிங்குசாமி. இப்படியும் சில இயக்குநர்கள் தங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்தே ஆகணும்னு ஒத்தக் கால்ல நிப்பாங்க.
கே.பி.யும் முதல்ல ஒத்துக்க மாட்டார். அப்புறம் நாம நல்லா பெர்பார்மென்ஸ் பண்ணிட்டோம்னா விட்ருவார். புன்னகை மன்னன்ல நானும் கமலும் பேசிக்கிட்டே இருக்கோம். போய்க்கிட்டேயிருக்கு.. ஸ்கிரிப்ட்ல இல்லாததெல்லாம் பேசினோம். டென்ஷனாயிட்டாரு கே.பி. டேய் போதும்டா விடுங்கடான்னாரு. இல்ல ஸார்.. இது நல்லாயிருக்கே ஸார்ன்னோம். நல்லாத்தாண்டா இருக்கு. எனக்கு புட்டேஜ் போயிக்கிட்டேயிருக்குல்ல. நான் எவ்ளோதான் கட் செய்றது..? விடுங்கடாம்பாரு..
இதே மாதிரி கமல் ஸார் படங்கள் அத்தனையிலும், முக்கியமா அவ்வை சண்முகில எழுதி வைச்ச ஸ்கிரிப்ட்டைவிடவும் ஸ்பாட்ல நாங்க பேசி பேசி உருவாக்கி யவைகள்தான் அதிகம். நாயகன் படத்துல போலீஸ் என்னைக் கூட்டிட்டு போய் விசாரிச்சு விட்ருப்பாங்க. அப்போ என்னைப் பார்க்க கமல் வருவாரு. அப்போ நான் அவர்கிட்ட சொல்லலையே..? ஒண்ணுமே சொல்லலையே..? எப்படித்தான் தைரியம் வந்துச்சுன்னு தெரியல நாயக்கரே.. நான் ஒண்ணுமே சொல்லலைம்பேன். சரி.. பார்த்துக்கன்னு சொல்லிட்டு கமல் போகணும். இவ்ளோதான் டயலாக்.. அப்போ கமல் அப்படி சொல்லிட்டுப் போகும்போது நான் கூடுதலா நான் பார்த்து என்ன பண்ணப் போறேன் நாயக்கரே.. நீ நல்லா இருக்கணும்.. அதான் முக்கியம்னு சொல்லிட்டேன். கமல் அதைக் கேட்டுட்டு சட்டுன்னு திரும்பிப் பார்த்து கண் கலங்கிட்டாரு.. அந்தக் காட்சி அப்படியே ஒன்றிப் போச்சு. மத்த இயக்குநர்ன்னா ஏன் பேசுனீங்கன்னு கேட்டிருப்பாரு. மணிரத்னம் எதுவும் சொல்லலை. அதை அப்படியே வைச்சிருந்தாரு..
நீங்கள் நடித்ததிலேயே உங்களுக்குப் பிடித்தமான கேரக்டர்..?
நிறைய கேரக்டர்கள்.. முக்கியமா சிந்துபைரவில நான் நடிச்ச கேரக்டர். இதுல எனக்கு வாழ்வு கொடுத்தவர் இசைஞானிதான். படத்துல நடிக்கப் போகும்போது கே.பி. என்கிட்ட மிருதங்கம் வாசிக்கத் தெரியுமாடான்னு கேட்டார். சுத்தமா தெரியாது. ஆனா கொஞ்சம் தெரியும்னேன்..கொஞ்சம் வாசிச்சுக் காட்டினேன். இது போதுண்டா.. மிச்சத்தை இளையராஜா பாத்துக்குவாருன்னுட்டாரு.. இதே மாதிரி படத்துலேயும் இசைக்கேத்தாப்புல ஏற்ற இறக்கமான தாளத்துக்கேத்தாப்புல கைகளை உயர்த்தி, குறைத்து ஒரு மாதிரி நடிச்சு முடிச்சிட்டேன். ஒரு நாள் ஏவி.எம்.ல ஷூட்டிங்ல இருந்தப்போ யாரோ வந்து சொன்னாங்க.. சிந்துபைரவிக்கு ரீரிக்கார்டிங் நடக்குதுன்னு.. அற்புதமா நடிச்சிருக்கய்யா. முடிஞ்சா போய் பாருன்னாங்க. எனக்கு போய் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. வேகமாக ஓடினேன். பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டர்ல கண்ணாடிக்கு பின்னால நின்னு பார்த்தேன்.
என்னைய பார்த்திட்டு இளையராஜா என்னை உள்ள கூப்பிட்டாரு. போனேன்.. மிருதங்கம் தெரியுமான்னாரு. தெரியாதுன்னேன்.. சிரிச்சாரு.. உங்களுக்கு மிருதங்கம் தெரியாதுன்றது எனக்கு மட்டும் தெரியும். மத்தவங்களுக்குத் தெரியாது. பரவாயில்லை.. என்னோட இசைக்கு ஒத்து வர்ற மாதிரி நல்லாவே வாசிப்பைக் காட்டியிருக்கீங்கன்னு சொல்லிட்டு அந்தக் காட்சிகளை போட்டுக் காண்பிச்சாரு.. அதைப் பார்க்க பார்க்க எனக்குள்ள ஒரு பிரமிப்பு. அதுல இருக்குறது நான்தானான்னு.. ராஜாகிட்ட ரொம்ப நன்றி சொன்னேன். அவர் பெரிய இசைக் குடும்பத்துல இருந்து வரலை. அவர் கடவுள் அனுக்கிரகத்துல வந்தவரு.. அதுல இருந்து என்னை எங்க பார்த்தாலும் ராஜா ரொம்ப சந்தோஷமா கை கொடுப்பாரு.
படப்பிடிப்புத் தளத்தில் மிக ஜாலியான ஒரு சம்பவம்..?
மிருகங்களோட நடிக்கிறதுதான் ரொம்ப ஜாலியான மேட்டர். சிவப்புச்சூரியன் படத்துல நான் ஒரு கொலையை நேரா பார்த்து கோர்ட்ல சாட்சி சொல்லிருவேன். வில்லன் கோஷ்டிக்கு தண்டனை கிடைச்சிரும். அதை முடிச்சிட்டு அவங்க வெளில வந்தவுடனேயே என்னைப் பழி வாங்கணும்னு சொல்லி என்னைத் தூக்கிட்டு வந்து நாயைவிட கேவலமா நடத்துறாங்கன்றது காட்சி. இதுக்காக என் ரெண்டு பக்கமும் ரெண்டு நாய்களை நிக்க வைச்சுட்டாங்க. அதுகளுக்கு மட்டும் பால். எனக்கு மட்டும் தட்டுல தண்ணி. கேமிராமேன் கர்ணன். எனக்கு பயம்னா பயம். அதுலேயும் ரெண்டு பக்கமும் இருக்குற நாய்களுக்கு இடைல சண்டை. ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு முறைச்சுக்கிட்டிருக்குதுக.. மூணு மணி நேரம் ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சு முடிச்சேன்..
இதே மாதிரி இன்னொரு படம். ஒரு பொண்ணை ரேப் பண்ணிருவேன். அந்தப் பொண்ணு வளர்த்த மாடு என்னை விரட்டிக்கிட்டு வருதுன்னாங்க. மாடு ஓடி வர்ற வேகத்தைப் பார்த்து எனக்கு பயமாகி பக்கத்துல இருந்த ஆத்துல குதிச்சிட்டேன். மாடு எங்கயோ ஓடிருச்சு. டைரக்டர் ஓடி வந்து என்ன ஸார்.. பாதில இப்படி பண்ணிட்டீங்கன்னாரு.. ஆமாங்க. மாடு முட்டி எனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது..? எடுத்தவரைக்கும் போதும் விடுங்கன்னுட்டேன்..
இதே மாதிரி இன்னொரு படத்துல ஒரு பாம்பு எனக்கு முத்தம் கொடுக்க பக்கத்துல வர்ற மாதிரி எடுத்தாங்க. அது முன்னாடி ஒரு கருப்பு துணியை காட்டினால் அது படமெடுக்கும். துணியை எடுத்திட்டா படுத்திரும். வாயைத் தைச்சுதான் வைச்சிருக்காங்கன்னாலும் நமக்கு பயமாயிருக்கு. ரொம்பக் கிட்டத்துல பாம்பு படமெடுத்து நிக்குற மாதிரி எடுத்தாச்சு. இதுக்கும் பக்கத்துல வரணும்னு ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் சொன்னாரு. நீ வந்து செஞ்சு காட்டு. நான் செய்றேன்னு சொல்லிட்டு எஸ்கேப்பானேன்.. இது போன்றதை இப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வருது..!
இப்போது தயாரிப்பாளரானதன் காரணம்..?
என் பையன் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு லண்டன்ல போய் எம்.எஸ்ஸும் முடிச்சிட்டு வந்தான். வந்திட்டு சினிமாவுக்குள்ள வரணும்னு நினைச்சான். என்னவாகணும்னு கேட்டேன். டைரக்டராகணும்னான். அதுக்கெல்லாம் நிறைய கஷ்டப்படணும். வயசும் ஆயிருச்சு. அதுனால மொதல்ல நடிகனாயிரு. அப்ப எல்லா இயக்குநர்களும் உனக்கு நண்பர்களாயிருவாங்க. அப்புறமா நீ டைரக்டராயிரலாம்னு சொன்னேன். ஓகேன்னு சொன்னான்.
ஏ.எல்.விஜய்கிட்ட அஸோஸியேட்டா இருந்த கிருஷ்ணான்றவர் என் பையனை பார்த்து கதை சொல்லியிருக்காரு. அந்தக் கதை பிடிச்சது. ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைக்கலை.. தேடித் தேடி பார்த்தோம். கடைசில நானே தயாரிக்கிறதா முடிவு செஞ்சு களத்துல குதிச்சிட்டேன்.
படத்துல நடிச்சவங்களும் இது என்னோட படம்ன்னு நிறைய ஹெல்ப் செஞ்சாங்க. குறைஞ்ச ஊதியத்துக்கே சிலர் நடிச்சுக் கொடுத்தாங்க. ஆனால் ஷூட்டிங்கில் அவங்களுக்கு நான் ஒரு குறையும் வைக்கலை. இப்போ படம் முடிஞ்சு சென்சாரும் ஆயிருச்சு. இப்போவரைக்கும் யாருக்கும் பைசா காசு பாக்கியில்லை. இந்த ஒரு திருப்தியோட படத்தை ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கேன்.
சக கலைஞர்களுடனான நட்பு நீடிப்பது சாத்தியமா?
பசி துரைகூட ஒரு கசப்பான அனுபவம் இருந்தது. அவருடைய பொற்காலம் படத்துல நான் நடிக்க ஒப்பந்தமானபோதே நான் அவர்கிட்ட சொன்னேன்.. கமல்ஹாசனின் ராஜபார்வை படத்துல நடிக்க நான் ஏற்கெனவே ஒத்துக்கிட்டேன். அவங்க எப்பக் கூப்பிட்டாலும் நான் போயிருவேன்னு. அவரும் முதல்ல ஓகேன்னுட்டாரு. ஆனா பொற்காலம் ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கும்போது ராஜபார்வையும் ஆரம்பிச்சது. துரை விடமாட்டேன்னுட்டாரு. சண்டையாயிருச்சு. நான் உங்க படத்துக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டு ராஜபார்வைல நடிக்கப் போயிட்டேன். அது முடிஞ்ச பின்னாடிதான் பொற்காலத்துக்கு வந்து நடிச்சுக் கொடுத்தேன். இதுனால துரைக்கு என் மேல ரொம்பக் கோபம். ஒரு வழியா அந்தப் படத்தை முடிச்சுக் கொடுத்தேன். ஆனா சம்பளம் வரலை. நிறைய பாக்கியிருந்தது. கேட்டேன். இல்லைன்னுட்டாங்க. ரொம்ப கோபம் வந்திருச்சு. அப்போ அந்த படத்தோட புரொடெக்சன் மேனேஜரை கூப்பிட்டு கண்டிச்சேன். இப்போ நான் எம்.ஜி.ஆர்கிட்ட போய் புகார் சொல்லப் போறேன்னு கத்தினேன். இந்த நேரத்துல சினிமாலயா பத்திரிகை ஆசிரியர் எம்.ஜி.வல்லபன் என்னைப் பார்க்க வந்தாரு. அன்னிக்கு இருந்த சூழ்நிலைல நடந்ததையெல்லாம் அவர்கிட்ட சொல்ல.. அவர் அதை ஒரு பெரிய கட்டுரை போட்டுட்டாரு.. துரை நல்ல இயக்குநர். ஆனால் நல்ல மனிதரல்லன்ற தலைப்புல டெல்லி கணேஷ் பேட்டின்னே வந்திருச்சு. அதுக்கடுத்த வாரம் துரைகிட்ட பேட்டி வாங்கி போட்டுட்டாங்க. துரையோ வளர்த்த கடா மார்புல பாயுது. அவரை தொடர்ச்சியா மூணு படங்கள்ல நடிக்க வைச்சதுக்கு இதுதான் பரிசா.. நன்றி மறந்தவர் டெல்லி கணேஷ்.. இதனால்தான் அவரோட குரு கே.பாலசந்தர் அவரை இதுவரைக்கும் திரும்பவும் நடிக்கக் கூப்பிடலைன்னு பேட்டி கொடுத்திருந்தாரு.. இதுக்கு கொஞ்ச காலத்துக்கு பின்னாடி மறுபடியும் துரையும் நானும் பிரெண்ட்ஸாயிட்டோம். இப்போவரைக்கும் குடும்ப நண்பரா இருக்கார்..
இப்போ என் பையன் படத்தைகூட இத்தனை வருஷ சினிமா பழக்கத்தை வைச்சு ரிலீஸ் பண்ண முடியும். ஆனால் முடியலை. அதுதான் உண்மை. இசை வெளியீட்டு விழான்னு கூப்பிட்டால்கூட எல்லாரும் வருவாங்களான்னு தெரியாது.. கமல்கிட்டகூட சொன்னேன். அதுக்கென்ன கணேஷ், செஞ்சுட்டா போகுது. என் வீட்லயே வைச்சுக்கலாம். எல்லாரையும் கூட்டிட்டு வாங்க. இங்கயே ரிலீஸ் பண்ணிட்டு ஒரு போட்டோ எடுத்து கொடுத்திரலாம். காசும் மிச்சமாகும்னு சொன்னாரு. இப்படித்தான் போய்க்கிட்டிருக்கு..!
ஜனவரி, 2016.