லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்கக் கோரி அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பட விளம்பரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, லியோ பட சிறப்புக் காட்சிகள் தொடர்பாக புதிய அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், லியோ பட முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கி, இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது. அதில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் காலை 9 மணிக்குப் பதிலாக காலை 7 மணிக்கே படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.