'அரசியல் கேள்வி கேட்காதீர்கள்’- சூடான ரஜினி!

Rajinikanth
ரஜினி
Published on

‘என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு இன்று காலை நடிகர் ரஜினி வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்த கருத்தை செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு, அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று ரஜினி கோபமாக பதிலளித்தார்.

மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இசைவெளியீட்டு விழாவில் யார்யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்து சென்றார்.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com