தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமாகி 14 வருடங்களில் 50 படங்களில் நடித்திருப்பவர் விஜய்சேதுபதி. இவரின் 50ஆவது படமான மஹாராஜா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், தான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் வாங்கிய சம்பளம் பற்றியும், சீரியலில் நடிக்க விருப்பம் இருந்தது குறித்தும் விஜய்சேதுபதி பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
“நான் இரண்டாயிரத்தில் துபாயில் வேலை பார்த்தபோது முதலில் வாங்கிய சம்பளம் 1,000 திர்ஹாம்கள். அதன்பிறகு மற்றொரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு 2000 திர்ஹாம்கள் சம்பளம் வாங்கினேன். அதற்காக என்னுடைய முதலாளிக்கு நான் நன்றி தெரிவித்தபோது, அவருடைய எல்லா தேவைகளையும் கடவுள் பூர்த்தி செய்துவிட்டதாகவும், அதை நிறைவேற்றியவர்களில் நானும் ஒருவர் என்றார். அந்த நேரத்தில் நான் ஒரு தீவிர கடவுள் பக்தன். இப்போது இல்லை.
நமக்கு எது தேவையோ அது நம் முன்னேதான் இருக்கிறது. இது எனக்கு முன்பு தெரியவில்லை; ஆனால் இப்போது தெரிகிறது. நாம் என்ன தேடுகிறோமோ அது நம்மை சுற்றியே இருக்கும்.”என மோட்டிவேஷனாக பேசும் விஜய் சேதுபதி,
“குறைந்தபட்சம் சீரியல் நடிகராவது ஆகிவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இப்படிச் சொல்வதால் சீரியலை குறைத்து மதிப்பிடுகிறேன் என்பதில்லை. அப்போது டிவி சீரியல்களில் நடிக்க எளிதாக வாங்கிட முடியும் என்பதுதான்.
திடீரென ஒருநாள் என்னை ஹீரோ என அழைத்தார்கள். அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. காலப்போக்கில் அந்த பிரம்மை நீங்கிவிட்டது. நம்மாலும் ஒரு ஹீரோவாக இருக்க முடியும் என்பதை படிப்படியாக நம்பத் தொடங்கினேன். நான் நடிக்கத் தொடங்கியபோது யாராவது என்னை ஹீரோ என அழைத்திருந்தால் பைத்தியமாகியிருப்பேன்.” என்கிறார் விஜய்சேதுபதி.