இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்! #RIPMarimuthu

மாரிமுத்து
மாரிமுத்து
Published on

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (வயது-57) இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தை சேர்ந்தவரான மாரிமுத்து திரைப்பட இயக்குநராக விரும்பி, 1990 ஆம் ஆண்டு சென்னை வந்தார். தொடக்கத்தில் உணவகங்களில் வேலைப்பார்த்தவர், ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர், பாடலாசிரியர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தார்.

மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். அவர் இயக்கிய இரண்டு படங்களுக்கும் பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இரவு டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பசுமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது திடீர் மறைவு திரை உலகத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com