அஜீத் நடிக்க இருந்த படம் சேது!- அமீர் பகிரும் சுவாரசிய தகவல்

அமீர்
அமீர்
Published on

சென்னையில் நடைபெற்ற ‘யோலோ’ திரைப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில் கலந்துகொண்ட அமீர், பாலாவின் ‘சேது’ படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வில் அமீர் பேசியதாவது:

“1988 -1989 காலகட்டத்தில் பாலா சென்னைக்கு வந்துவிட்டார். நானும் அவரும்தான் வந்தோம். அவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

1993-ஆம் ஆண்டு அவரின் முதல் படமான அகிலன் பூஜை போடப்பட்டது. ஆனால், அன்றே படம் நின்றுவிட்டது. இந்திய சினிமா வரலாற்றிலேயே காலையில் பூஜை போட்டு மாலையில் நின்றுபோன படம் இதுவாகத்தான் இருக்கும்.

பாலா யார் என்றால்? பாலுமகேந்திரா என்ற மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பழம். அன்று விதைக்கப்பட்டது. ஆனால் அது முளைக்கவில்லை. கருகிவிட்டது என்றே சொல்லலாம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் தவிர்த்து அப்போதிருந்த எல்லா ஸ்டார் நடிகர்களும் அந்த கதைக்குள் வந்து சென்றார்கள். இதற்கிடையே, பல புதுமுகங்கள், பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம். பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் படத்தில் நடிக்க கம்மிட் ஆகியிருக்கிறார்கள். அஜித் கூட நடிக்க இருந்து. அது நடக்காமல் போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது.

1997இல் இயக்குநர் சசிகுமாரின் உறவினர் கந்தசாமி என்பவர் ஒருவர் மூலமாக மீண்டும் அந்தப் படம் தொடங்கப்பட்டது. அகிலன் என்ற தலைப்பு சேதுவாக மாறிவிட்டது. நாங்கள் காலையில் பிரசாத் ஸ்டுடியோவில் பூஜை போட்டோம், மாலையில் தொழிலாளர்கள் பிரச்சினையில் நின்று போனது.

12 வருடங்கள் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த விக்ரமை உள்ளே கொண்டு வருகிறோம், அபிதா என்ற பெண் நாயகியாக அறிமுகமாகிறார். இவ்வளவு இருந்தும் அந்த படம் நடக்கவில்லை.

ஒன்றரை வருட காத்திருப்புக்குப் பின் மீண்டும் படம் தொடங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியவில்லை. இறுதியாக இரண்டாயிரத்தில்தான் படத்தை முடித்தோம்.

இப்படி எடுக்கப்பட்ட படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். அப்போதிருந்த ஒரே நம்பிக்கை படம் நல்லா இருந்தது என்பதுமட்டும்தான். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார்.

சேது திரைப்படத்தில் விக்ரம்
சேது திரைப்படத்தில் விக்ரம்

ஒரு இயக்குநர் உருவாகிறார் என்றால், அது அவருக்கானது மட்டுமல்ல அவர் ஒரு தலைமுறையையே உருவாக்குகிறார். பாலாவிடம் இருந்துதான் நான் வந்தேன். சூர்யா உருவானார். விக்ரம் என்ற மிகப்பெரிய நடிகரை அவர் உருவாக்கினார். அந்த ஆலமரம் தான் பல புதிய கிளைகளை தந்துள்ளது.

படத்தின் வெளியீட்டுப் பணிக்காக நானும் சித்ரா லட்சுமணன் சாரும் பிரசாத் ஸ்டுடியோவில் நின்று கொண்டிருந்தோம். ஹேராம் பட வேலைக்காக அங்கு வந்திருந்த கமல்ஹாசன், சித்ரா சாரைப் பார்த்ததும் அழைத்துப் பேசினார்.

“நானும் கேள்விப்பட்டேன்…. நல்லாருக்குணு சொன்னாங்க” என கமல்ஹாசன் சேது படத்தை பற்றி சொன்னது சந்தோஷமாக இருந்தது.

படம் வெளியானபோது, வெறும் ஆறே ஆறு பிரிண்ட் எடுத்துக் கொண்டு திருச்சி, மதுரை, திண்டுக்கல் என போய் கொடுத்தேன். படம் நல்லாருந்ததால் அந்த விதை பெரிய ஆலமரமாகிப் பல கிளைகளைப் பரப்பி இருக்கிறது.

மனிதர்கள் எல்லாம் தன்னால் வளர்ந்தவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. சினிமாவில் கைதட்ட வேண்டுமானால் அப்படி சொல்வது உதவலாம்.” என்று உருக்கமாக அமீர் பேசி முடித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com