கோயிலில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு அர்ச்சகர் ஒருவர் கை கொடுக்க மறுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளதோடு, அந்த சம்பவத்தில் யோகிபாபு மீது தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதா என்று? பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியிருப்பவர் யோகிபாபு. வாரத்திற்கு நான்கு படம் வெளியாகிறது என்றால், அதில் மூன்று படங்களில் யோகி பாபு நடித்திருப்பார். அதேபோல், யோகிபாபு முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். இதனால், அவர் அடிக்கடி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் திருவள்ளூவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது, அங்கு வந்திருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
சாமி தரிசனம் முடிந்து, அங்குள்ள அர்ச்சகர் ஒருவரைப் பார்க்க செல்லும் யோகிபாபு, அவருக்கு கை கொடுக்கிறார், அர்ச்சகரோ கை கொடுக்க மறுத்து, வணக்கம் வைக்கிறார். பிறகு யோகிபாபு அந்த அர்ச்சகரிடம் சகஜமாக பேசுகிறார். இந்த வீடியோ பகிர்ந்துள்ள பலரும், தீண்டாமை ஒரு பாவச் செயல் என தலைப்பிட்டுள்ளனர்.
உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதுகுறித்து யோகிபாபுவோ அல்லது அங்கிருந்தவர்களோ சொன்னால் உண்மை என்னவென்று தெரியவரும்.