பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

பிசாசு 2 திரைப்படம்
பிசாசு 2 திரைப்படம்
Published on

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஒப்பந்தப்படி, 4 கோடியே 85 லட்சம் ரூபாயில் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது.

இந்தத் தொகையை திருப்பிக் கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி ஆக 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்க ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் படி பணத்தை செலுத்தாமல் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், அந்தப் படத்தை வெளியிட தயாராக உள்ளதாகக் கூறி, படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com