‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை படத்தின் தயாரிப்பாளர் தனுஷின் அனுமதி இல்லாமல் தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா சேர்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா குறித்த ஆவணப்படத்தில் டிரெய்லரில், 'நானும் ரவுடி தான்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சி இடம்பிடித்து இருந்தது. அந்த படத்தின் மூலம்தான் காதல் மலர்ந்ததால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் அந்த படத்தின் காட்சி, பாடலை பயன்படுத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. அதோடு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
இதனால் நடிகை நயன்தாரா நேற்று நடிகர் தனுஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சிகளை நயன்தாரா நீக்குவாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்து வந்தது.
இந்த நிலையில், ஆவணப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அந்த 3 வினாடி வீடியோ சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இரு தரப்பினரிடையேயான மோதல் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் குறித்து தனுஷ்தான் தன்னிடம் சொன்னதாக, நடிகை ராதிகா பேசும் காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.