தமிழில் தான் தனது முதல் படத்தை தயாரித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள தோனி, “என்னை நீண்ட நாட்களுக்கு முன்பே சென்னை தத்தெடுத்துவிட்டதாக” தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரான தோனி ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ சார்பில் எல்.ஜி.எம் என்ற படத்தை தமிழில் தயாரித்துள்ளார். ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், எல்.ஜி.எம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றார்.
விழாவில் பேசிய தோனி, “எனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமப் போட்டி அரங்கேறியது சென்னை மண்ணில்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிக ரன்கள் பதிவு செய்யப்பட்டதும் சென்னையில் தான். இப்போது எனது முதல் படத்தயாரிப்பும் தமிழ் மொழியில் அமைந்துள்ளது. சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் இங்கு நீண்ட நாட்களுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டு விட்டேன்.
எங்களுடைய முதல் தயாரிப்பாக எல்.ஜி.எம் படத்தை எடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த குழுவும் ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை மிகக்குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடிக்க முடிந்தது. இதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சில அறிமுகங்களும் இருக்கிறார்கள். உங்களுக்குப் படத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும்.
நதியா கண்ணாலேயே நிறைய நடித்திருக்கிறார். நிறைய உணர்வுகளை அப்படியே தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கதை. இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். சாண்ட்விச்சுக்கு நடுவே சிக்கியதை போலத்தான் இருந்தது ஹரீஷின் நிலைமை.” என்றார்.