இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி!- வினோதினி வைத்தியநாதன்!

இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி!- வினோதினி வைத்தியநாதன்!
Published on

நடிகை வினோதினி வைத்தியநாதன் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ஓகே கண்மணி, அப்பா , ஜிகிர்தண்டா, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன். சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்யா ராயின் தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு பயணம் சென்னையில் உள்ள கூத்துப் பட்டறையின் மூலமாக தொடங்கியது.

சமீபகாலமாக ட்விட்டர் சமூக வலைதளங்களில் வினோதினி அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரது பல்வேறு அரசியல் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பேசுபொருளாகின.

இந்த நிலையில், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் வினோதினி. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?

அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?

அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?

அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?

அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.

கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?

அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.

கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டுகூட இல்லையே?

அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி… சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்…

கடவுள்: போதும் போதும்… சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.

அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி. ஆரம்பிக்கலாங்களா?... மய்ய அரசியல…” என பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com