மூத்த கவிஞரை தாக்கும் சத்தியசோதனை!

சத்திய சோதனை
சத்திய சோதனை
Published on

மக்கள் மற்ற கலைப்படைப்புகளை விட சினிமாவை உன்னிப்பாகக் கவனிக்க தொடங்கிவிட்டனர். படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், இசை, வசனங்கள் என எல்லாவற்றையும் அலசி ஆராய்கின்றனர். அதனால், திரைப்படங்கள் சர்ச்சைக்கு உள்ளாவதும் கொண்டாடப்படுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இதில் ஏதேனும் ஒன்றுக்கு உள்ளாகலாம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் ‘சத்திய சோதனை’திரைப்படம்.

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள சத்திய சோதனை படத்தை, நேற்று சிறப்பு திரையிடலில் படத்தைப் பார்த்த பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கர் உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டி எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களுக்கு படம் திரையிடப்பட்டது. ஒரு கொலையை சுற்றி நடக்கும் காவல் துறை விசாரணையை, வட்டார வழக்கின் பின்னணியில், படத்தை கலகலப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர். படம் பார்த்த மூத்த சினிமா பத்திரிகையாளர் உண்மைத் தமிழன் தனது முகநூல் பக்கத்தில், “படம் துவங்கியது முதல் கடைசி வரையிலும் செல்போனை கையில் எடுக்கவே தோணவில்லை. இயல்பான கதை.. சுவையான திரைக்கதை.. அதிலும் சுவையான வட்டார வழக்கு வசனங்கள்.. மிகைப்படுத்தாத நடிப்பு.. சிறந்த இயக்கம் என்று நகைச்சுவை ததும்ப.. சிரிப்பலையில் கட்டிப்போட்டுவிட்டார் இயக்குநர்.

முதல் படம் போலவே இந்தப் படமும் வெற்றி பெற வேண்டும். காணத் தவறாதீர்கள்..!” என பதிவிட்டுள்ளார்.

இப்படி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், சர்ச்சைக்குள்ளாக கூடிய சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. படத்தின் ஒரு காட்சியில், ‘உன் பேரு என்னப்பா’ என போலீஸ் கேட்க. ‘வைரமுத்து’ என கொலையாளி சொல்ல, ‘பேரு நல்லாதான் இருக்கு. ஆனா, உன் நடவடிக்கை தான் சரியில்லயே’ என போலீஸ் சொல்லும் போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.

“மொத்தத் தியேட்டரும் கை தட்டலில் அதிர்ந்த தருணம் இந்த ஒரு வசனத்தின்போதுதான்” என பத்திரிகையாளர் உண்மைத் தமிழன் பதிவிட்டுள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து
பாடலாசிரியர் வைரமுத்து

கொலையாளிக்கு வைரமுத்து என பெயர் வைத்ததற்கான காரணத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையாவிடம் கேட்டபோது, “கண்டிப்பாக அது கிடையாது. எந்த உள்நோக்கமும் இல்லை. எங்க கூட வைரமுத்து என்பவர் இருக்கிறார். டப்பிங் பேசும் போது அவரின் பெயரைத்தான் பயன்படுத்தினேன். அவர் (கவிஞர் வைரமுத்து) மீது எனக்கு மரியதை இருக்கிறது. கவிஞர் வைரமுத்து போட்டோவுடன் அப்படி பயன்படுத்தியிருந்தால் தான் தவறு. பெயரை வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை.” என்றார்.

அதேபோல், படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்படும் நபர், கிலோ கணக்கில் நகை அணிந்திருப்பார். தென்மாவட்ட பின்னணியில் கதை நடப்பதால், அது பனங்காட்டு படை கட்சியை சேர்ந்த ஹரி நாடாரை பிரதிபலிப்பதாக சில பேச்சுகள் எழுந்தன.

அதேபோல், படத்தின் டைட்டிலில் பச்சை, காவி நிறம் பயன்படுத்தி உள்ளனர். இது பாஜகவின் கொடி நிறத்தை பிரதிபலிப்பதாக பத்திரிகையாளர்கள் பேசத் தொடங்கினர். இப்படி பல்வேறு கோணங்களில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள சத்திய சோதனை, பொதுமக்களிடம் எப்படியான வரவேற்பைப் பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com