‘ஓடிடி வருமானத்தில் ஒரு பங்கு தியேட்டர்களுக்கு அளிக்க வேண்டும்!’ - தியேட்டர் உரிமையாளர்கள்

‘ஓடிடி வருமானத்தில் ஒரு பங்கு தியேட்டர்களுக்கு அளிக்க வேண்டும்!’ - தியேட்டர் உரிமையாளர்கள்
Published on

“திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் திரையிடும்போது, அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்" என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த வாரம், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்!

1. புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் ஓ.டி.டி.யில் திரையிட வேண்டும்.

2. ஓ.டி.டி.யில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.

3. விளம்பர போஸ்டர்களுக்கு 1% சதவிகிதம் (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும்.

4. புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% சதவிகிதம் தான் பங்குத் தொகையைக் கேட்க வேண்டும்.

5. திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் திரையிடும் போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்.

அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகள்!

1) திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

2. திரையரங்குகள் வர்த்தக சம்மத்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

3. மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்குக் குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.

4. ஏற்கனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து இதுபோன்ற கோரிக்கைகளை வைத்து வந்தாலும், அவை தமிழக அரசாலோ, தயாரிப்பாளர்கள் சங்கத்தாலோ கண்டுகொள்ளப்படுவதில்லை என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com