16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் காலமானார்!

16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் காலமானார்!
Published on

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட பிரபலமான படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல் நலக்குறைவால் காலமானார்.

பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கன்னிப் பருவத்திலே, மகாநதி போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் குளியல் அறையில் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது கை, காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் மருத்துவ செலவுக்கு திரையுலகினர் சிலர் பண உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று உயிரிழிந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் என்னை இயக்குநராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிச்சென்ற என் முதலாளி திரு ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்துக்கும் பேரிழப்பாகும் என்று ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராதிகா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு என் திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவர் மீது மிகுந்த மரியாதையும், அற்புதமான நினைவுகளும் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com