சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தெரிவித்த புகாருக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் அண்மையில் தனது ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தைத் தணிக்கைசெய்ய தணிக்கை வாரிய அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதைத் திரையிட ரூ.3.5 லட்சம், சென்சார் சான்றிதழுக்கு ரூ.3 லட்சம் என இரு தவணைகளாக ராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் விஷாலின் இந்தப் புகாருக்கு மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை தன் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், “சென்சார் போர்டு ஊழல் என நடிகர் விஷால் முன்வைத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசாங்கம் ஊழலை சற்றும் பொறுத்துக் கொள்ளாது. இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார். jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்சார் வாரியத்தால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.