பொம்மை: திரைவிமர்சனம்!

பொம்மை திரைப்படம்
பொம்மை திரைப்படம்
Published on

எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் பொம்மை. எஸ்.ஜே. சூர்யாவே தயாரித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்!

சிறுவயதிலேயே தாயை இழந்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு (ராஜ்குமார்) தோழியாக வந்து சேர்கிறார் நாயகி ப்ரியா பவானி சங்கர் (நந்தினி). இருவருக்குமான நட்பு இடும்பு பிடியாக இருக்க, திடீரென ஒரு நாள் நந்தினி காணாமல் போகிறார். தன் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த பெண்ணை நினைத்து ஒரு வித மனநோயால் பாதிக்கப்படுகிறார் எஸ்.ஜே. சூர்யா. சில ஆண்டுகள் கழித்துத் தான் வேலைப் பார்க்கும் இடத்தில், நந்தினி போன்றே உள்ள ஒரு பொம்மையை பார்க்கிறார். அதைக் கற்பனையாகக் காதலிக்க தொடங்குகிறார். அவரின் கற்பனை காதல் என்ன விபரீதங்களைக் கொண்டு வந்தது, அவர் அதிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பது தான் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் ராதாமோகன் படம் என்றால், மென் உணர்களை அழுத்தமாக பேசும் என்ற பிம்பம் உண்டு. அதை அவரே இந்தப் படத்தின் மூலம் உடைத்திருக்கிறார். டூகே கிட்ஸ் காதல் கதைகள் கொண்டாடப்படும் காலத்தில், எழுபதுகளில் எடுத்திருக்க வேண்டிய கதையை இப்போது படமாக்கியுள்ளார் இயக்குநர். சுவாரஸ்யமற்ற திரைக்கதை, படத்தின் நீளம் போன்றவை நம்மை சோதித்துப் பார்கிறது.

எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரத்தை இன்னும் விரிவாகவும், அழுத்தமாகவும் எழுதியிருக்கலாம். கதாபாத்திரத்தின் பலவீனத்தை தன்னுடைய நடிப்பால் தாங்கி பிடிக்க நினைக்கிறார். அது ஒரு சில இடங்களில் மிகை நடிப்பாக தெரிகிறது. நாயகி ப்ரியா பவானி சங்கருக்கு படத்தில் நிறைய காட்சிகள் இருந்தாலும், அந்த கதாபாத்திரம் மனதில் நிற்கவில்லை.  இவர்கள் இருவரைத் தவிர படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வேலை இல்லை.

சிறு வயதில் காணாமல் போன நந்தினி என்ன ஆனார்? தொடக்கத்திலேயே எஸ்.ஜே. சூர்யாவிடம் நலம் விசாரிக்கும் அவரின் தங்கையும், குடும்பத்தினரும் என்ன ஆனார்கள்? எஸ்.ஜே. சூர்யா செய்யும் கொலைக்கு துப்பு கிடைக்காமல் காவல் துறை திணறுவது. இப்படி படம் முழுவதும் இருக்கும் சில பிழைகள், கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடுகிறது. ’இரண்டு நாளில் கதை எழுதி, பத்து நாளில் படம் பிடித்து, பதினைந்தாவது நாளில் படத்தை வெளியிட்டு விட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது!

யுவன் சங்கர் ராஜா இசை என்றால் எதாவது ஒரு பாடல் ஹிட்டடித்துவிடும், இந்தப் படத்தில் அதுவும் இல்லை. பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். காதல் காட்சிகளில் வரும் பின்னணி இசை மனதை உருக வைக்கிறது. படத்தின் கதைக்களம் மூன்று நான்கு இடங்களில் மட்டுமே சுற்றி சுற்றி நடப்பதால், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதனுக்கு அவ்வளவாக வேலை இல்லை. பொன். பார்த்திபன் வசனம், கதையின் ஓட்டத்திற்கு ஏற்றார் போல் உள்ளது.

மொத்தத்தில் பொம்மை எதிர்பார்ப்பை ஏமாற்றியது!

logo
Andhimazhai
www.andhimazhai.com