தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை எழுப்பிய 21 கேள்விகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே வி.சாலையில் வருகிற 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான அனுமதி வேண்டி, கடந்த 28ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் முறையாக அனுமதி பெறப் பட்டுள்ளதா? மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? என்பது உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 5 நாட்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், காவல்துறை எழுப்பிய 21 கேள்விகளுக்கான பதிலை புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“காவல் துறை கேட்ட 21 கேள்விக்கான பதிலை இன்று வழங்கியுள்ளோம். இதற்கான பதிலை இரண்டு மூன்று நாள்களில் சொல்கிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே விஜய் மாநாட்டு தேதியை அறிவிப்பார்.”என்றார்.
மாநாட்டில் 50 ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்வார்கள் என்றும், சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.