தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல், சுரண்டல் குறித்து விசாரிக்க நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் விஷால் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவை அதிரச் செய்திருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை. இது தொடர்பான விவாதம் மேலெழுந்துள்ள நிலையில், தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒன்று அமைக்கப்படும் என நடிகர் விஷால் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விஷால், கீழ்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. அவர்களே பாதுகாவலர்களை வைத்துள்ளனர். அவர்கள் எந்த படத்தில் நடிக்கிறார்களோ அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களில் 20 சதவீதம் பேருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கின்றது. 80 சதவீதம் பேர் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த விஷயங்களில் அவர்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல் இருக்கிறது.
மலையாள சினிமாவில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டேன். எவனோ ஒருவன் பெண்ணை மதிக்காமல் பைத்தியக்காரத்தனமாக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவான். இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கு மன தைரியம் வேண்டும். அப்படி கூப்பிடுபவனை அந்தப் பெண் செருப்பால் அடிக்க வேண்டும். தங்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என பெண்கள் நினைக்க வேண்டும். உப்பு கம்பெனிகள் இப்படி பெண்களை ஏமாற்றுகிறார்கள். புகார்கள் வந்தால் நடிகர் சங்கம் சார்பாக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
ஹேமா கமிட்டி போன்று தமிழ்நாட்டிலும் நடிகர் சங்கம் சார்பாக பத்து பேர் கொண்ட கமிட்டியை அமைக்க இருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. அறிவிப்பு கூடிய விரைவில் வரும். அது எங்களது கடமை. நடிகர் சங்கம் ஆண்களுக்கானது மட்டுமில்லை. பெண்களுக்குமானதுதான்.” என்றார்.