பாடகி சுசித்ரா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து சூசகமாகப் பதிலளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”வைரமுத்துவின் டார்கெட்டே பாடகிகள் தான். அவர்களிடம் நெருங்க வைரமுத்து கையாளும் வார்த்தைகள் என்னவென்றால் உன்னுடைய குரலில் காமம் இருக்கிறது. உன்னுடைய சிரிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது .இப்படி எல்லாம் பேசித்தான் தன்னுடைய வலையில் விழ வைப்பார் வைரமுத்து.
அப்படி என்னிடமும் சொல்லி, உனக்கு ஒரு பரிசு தருகிறேன் என அவர் வீட்டிற்கு அழைத்தார். நான் என் பாட்டியுடன் சென்றிருந்தேன். அது அவருக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. என் பாட்டி வைரமுத்துவிடம் பரிசு எங்கே எனக் கேட்டபோது, அவர் வாங்கி வைத்திருந்தால் தானே கொடுக்க முடியும். அவருடைய நோக்கம் வேற. இருந்தாலும் என் பாட்டி கேட்டார் என்பதற்காக அவர் வீட்டில் இருந்த ஷாம்பு பாட்டிலை எடுத்து வந்து எனக்கு பரிசாக கொடுத்தார்.” என சுசித்ரா கூறியிருந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து வைரமுத்துவை பலரும் இணையத்தில் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர்.
பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர்; தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர். இந்த நோய்க்கு 'Messianic Delusional Disorder'என்று பெயர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள். உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.”என கூறியுள்ளார்.