ஓவியமா புகைப்படமா என்று மக்கள் வியந்து பாராட்டும் ஓவியர் இளையராஜா. கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ‘‘பத்தாம் வகுப்பு முடித்தபின் என்னை படிக்க வைத்த என் அண்ணன், பிளஸ் ஒன் படிக்கச் சொல்கிறார். பள்ளியின் ஓவிய ஆசிரியரோ என்னை ஓவியக்கல்லூரியில் சேரச் சொல்கிறார். இரண்டிலும் குழம்பி, ஒவிய ஆசிரியரின் குரலைக் கேட்க முடிவு செய்தேன். அவர் என்னை கும்பகோணம் கவின் கலைக் கல்லூரி ஓவியப் பேராசியர் மனோகரிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து தொடங்கியதுதான் என் ஓவியப் பயணம்,'' என்கிறார். இந்திய கலாச்சார அமைச்சகத்தின் தேசிய பெல்லோஷிப், சிறந்த ஓவியருக்குக்கான தமிழக அரசின் விருது, புதிய தலைமுறை ஓவியர் விருது, லலித்கலா அகாடமி விருது,விஜய் டிவி வழங்கிய சிறந்த பத்திரிகை ஓவியர் விருது, கர்நாடக அரசு வழங்கிய தேசிய விருது உட்பட பல்வேறு கௌரவங்களை இன்று பெற்றுள்ளார்.
‘‘கல்லூரியில் படிக்கும்போது நீர்வண்ண ஓவியங்களை வரைவேன். படிப்பு முடித்ததும் எனக்கென தனிப்பட்ட அடையாளமாக திராவிடப் பெண்கள் என்ற தலைப்பில் வரைய முடிவு செய்தேன். அப்படித்தான் தைல வண்ண ஓவியங்களை உருவாக்கினேன். அவற்றுக் கிடைத்த வரவேற்பு என்னைத் தொடர்ந்து அவற்றையே வரையவைத்துவிட்டது. என் ஓவியங்களை விகடன் குழுமம் தொடர்ந்து வெளியிட்டதும் படைப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. இன்று உலகெங்கும் என் ஓவியங்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன,‘' என்கிற இளையராஜா, ஓவியத்தை நம்பி வாழ்வில் முன்னேற முடியும் என்பதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இவரது ஓவியம் ஒன்று, சிறப்புத் திறன் கொண்ட ஒரு சிறுவனுக்கு புலன்கள் சிறப்பாக மேம்பட மருத்துவரீதியில் உதவியிருக்கிறது. ‘கலையின் திறன் அது,' என அத்தகவலை நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார் இளையராஜா.
மார்ச், 2020.