அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைக் கைகுலுக்கல்களோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 2017 -ல் நிறைய தைரியமான தயாரிப்பாளர்களை திரையுலகம் பெறவும், மாஸ் ஹீரோக்கள் கதைத் தேர்வில் சிறந்து ரசிகனை மகிழ்விக்கவும், தரமான சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவும், தியேட்டர் கிடைத்தாலும் நான்கு ஷோக்களாவது அதற்குக் கிடைக்கவும், நல்ல படங்களை திரையரங்கில் பார்க்கும் பழக்கம் அதிகரிக்கவும், திரையரங்கில் பார்க்கும் அளவுக்கு நல்ல படங்கள் பெருகவும், திரையரங்குகள் தரமான இருக்கைகள், தரமான தின்பண்டங்கள், பிற வசதிகளுடன் விளங்கவும், ரசிகனுக்கு ‘நியாயமான’ விலையில் டிக்கெட் கிடைக்கவும், நேர்மையான விமர்சகர்களும், விமர்சனங்களும் பெருகவும் இன்னபிற சுபிட்சங்களையும் தமிழ்த் திரையுலகத்திற்கு வழங்கட்டும் என்று எல்லாம் வல்ல தாமஸ் ஆல்வா எடிசனை நோக்கிக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வருடத்துப் பட விமர்சனங்களைத் தொடும் முன், சென்ற வருடம் 30ம் தேதி வெளியான ‘துருவங்கள் 16’ திரைப்படம் குறித்து ஒருசில வார்த்தைகள்.
த்ரில்லர் வகைக் கதைகளில், ஆரம்பம் முதலே ஒருவித பதற்றத்தைப் பார்வையாளனுக்குக் கடத்தி அதை படம் நெடுகக் கொண்டு செல்லும் வித்தை மிகமிக அவசியம். அதை நேர்த்தியாகக் கையாண்டிருந்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். மணிரத்னம், கௌதம் வாசுதேவ் -இவர்களது ரசிகரென்பது மேக்கிங் மற்றும் காட்சிப்படுத்துதலில் தெரிந்தது. போதாக்குறைக்கு முக்கியக் கதாபாத்திரத்தின் பெயர் கௌதம். அவரது ரிங்டோன் தள்ளிப் போகாதே. வெல்கம் டு த ஃபர்ஸ்ட் ஹிட் க்ளப் நரேன்!
படத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது, இன்னும் தெளிவாக படமாக்கப்பட்டிருக்கலாம் என்ற குறை தெரிந்தது. படம் முடிந்து வெளியே வரும்போது பெரும்பாலானவர்கள் ‘அப்ப அது யாரு? இங்க ஓடினது யாரு? அந்த கொலை செய்யப்பட்டவன் யாரு.. அவ என்னானா?’ என்று கேட்டுக் கொண்டே நகர்ந்ததைக் காண / கேட்க முடிந்தது.
ஆனாலும், சொன்னதுமே ‘அட... ஆமால்ல.. செம’ என்று ஆமோதித்து வியந்தார்கள். படம் முடிந்ததும் பரவலாக அங்கங்கே கைதட்டல்கள் இந்த இளைஞனிடமிருந்து இன்னும் நிறைய தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கிறது என்று உணர்த்தியது.
ஜனவரி 12ல் வெளியானது பைரவா. அழகிய தமிழ்மகன் கொடுத்த பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சாமுராய் படத்தில் விக்ரம் தட்டிக்கேட்ட பிரச்னையை, இதில் விஜய் தட்டோ தட்டென்று தட்ட்டிக் கேட்டிருக்கிறார். கண்டதும் காதல் உருவாக, காதலி கீர்த்தி சுரேஷுக்காக திருநெல்வேலி வந்து இறங்கி வில்லன் ஜெகபதிபாபுவை மிரட்டுகிறார்.
விஜய் எப்போதும்போல மாஸ். லுக்கும், டான்ஸும் பொங்கல் விருந்து. கொஞ்சம் இழுத்து இழுத்துப் பேசும் மாடுலேஷன் சிலருக்குப் பிடித்திருக்கிறது. கதைத் தேர்வில் இன்னும் களமாடணும் தளபதியாரே. கீர்த்தி சுரேஷ் அச்சுப் பிச்சு நாயகியாக அவரது வேலையை சிறப்புடனே செய்திருக்கிறார். அவரது ரசிகர் களுக்காகவே இதிலும் ஒரு உதட்டுக் கோணல் விருந்துண்டு. சதீஷ் கிட்டத்தட்ட எல்லா கதாநாயகர்களுடனும் நடித்து, தன் இடத்தை கெட்டியாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் திறமையை முழுக்க பயன்படுத்தும் அளவுக்கு அவருக்கு ஏன் போர்ஷன்கள் இல்லை என்று தெரியவில்லை.
இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி.. வாவ் ரகம். பாடல்களில் வர்லாம் வர்லாம் வா என்ற தீம் சாங்கிலும், நில்லாயோ பாடலிலும் சந்தோஷ் ராஜ்ஜியம். இன்னும் எண்டெர்டெய்னராக இருந்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை.
அதே தினத்தில் வெளியான இன்னொரு படம்: கோடிட்ட இடங்களை நிரப்புக. நல்ல தலைப்பு. டைட்டிலின் பின்னணியில் உதட்டைக் காண்பித்து உதட்டு வரிகளைத் தான் கோடிட்ட இடமாக உருவகப்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறார். எதற்காக நிரப்ப வேண்டும் என்று படத்தில் பார்த்தால்..
தமிழ்நாட்டில் ஒரு இடம் வாங்க வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் சாந்தனுவை, தனது நடவடிக்கைகளால், நம்பிக்கை காட்டி, கைக்குள் போட்டுக் கொள்கிறார் பார்த்திபன். பார்த்திபன் சொல்லும் கெஸ்ட் ஹவுஸில் தங்கும் சாந்தனுவை வசீகரிக்கிறார் பார்வதி நாயர். இவர் பார்த்திபன் மனைவி என்று அறிந்தும், சஞ்சலப்படுகிறார் சாந்தனு. ஒரு மெல்லிய இழையைத் தாண்டினால் பி கிரேடு படமாகிவிடுகிற ரிஸ்க்கான திரைக்கதையை தனது டிரேட் மார்க் ஒன்லைனர்கள், மாடுலேஷன்களில் தாங்கிப் பிடித்து கொண்டு சென்றிருக்கிறார் பார்த்திபன்.
முந்தைய படமான கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நான்கிலும் கவர்ந்தவர், இதில் கதையில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. நடிப்பில் பார்த்திபன் குறைவைக்கவே இல்லை. தம்பி ராமையா கதாபாத்திரம் நமக்கு பூச்சாண்டி காட்டத்தான் என்று ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதால்... சுவாரஸ்யம் கூட்டவில்லை.
குடியரசு தினத்தில் வெளியான ஷாருக்கின் படம் ரயீஸ். 1980களுக்குப் பிறகான அரசியலை அறிந்து கொள்ள இந்தப் படத்தைப் பார்க்கலாம். தாவூத் இப்ராஹிம் குழுவில் இருந்த அப்துல் லத்தீப் என்பவரின் கதைதான். சின்னச் சின்ன வேலைகள் செய்து சாராய சாம்ராஜ்யத்தை ஆளும் ஷாருக், அவரை துரத்தும் அதிகாரத்தின் குரலாக, போலீஸ் அதிகாரி நவாசுதீன் சித்திக் இருவருக்கும் இடையேயான பகடையாட்டம்தான் ரயீஸ். படத்தை இருவருமாக சேர்ந்து தாங்கிப் பிடிக்கிறார்கள். அழகாகவே திரையில் வரும் ஷாருக் இதில் ரஃப் லுக் கொடுத்திருக்கிறார். ரொமாண்டிக் காட்சிகள் எடுபடவில்லை. பாகிஸ்தான் நடிகை மஹிரா கானின் கண்கள் கதை பேசுகிறது.
நவாசுதீன் சித்திக்.. சொல்லவே வேண்டாம்.
அப்புறம்.. முக்கியமாக லைலா மே லைலா பாடலும், அதற்கு சன்னி லியோனியின் ஆட்டமும் தியேட்டரைக் கலகலப்பாக்குகிறது!
பிப்ரவரி, 2017.