திரைவலம்

‘ரைட்’ட்டர்!

திரைவலம்

காதம்பரி

டிசம்பர் மாதம் சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான மாதம். நிறைய படங்கள். உலகெங்கும் நியூ இயர் கொண்டாட்டங்களுக்கு வாரக்கணக்கில் விடுமுறை என்பதால் ஓ.டி.டி தளங்களிலும் சீரிஸ் ரிலீஸ்கள் என்று களைகட்டியது.

தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இந்த மாதம் மட்டும் இரண்டு படங்கள். பேச்சிலர் - ஜெயில்.

அறிமுக இயக்குநர் சதிஷ் செல்லகுமாரின் பேச்சிலரில் ஜி.வி.பிக்கு அவருக்குப் பொருத்தமான டார்லிங் கதாபாத்திரம். பெங்களூரு லைஃபில் உடன் பணிபுரியும் பெண்ணுடன் காமம் பற்றிக்கொள்ள அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. மாடர்ன் இளைஞர்களுக்கான ஒன்லைன் சரியான திரைக்கதை இல்லாததால் திண்டாடுகிறது. இசை, ஒளிப்பதிவு எல்லாம் கைகொடுத்தும் வலுவான காட்சிகள் இல்லாததால் பேச்சிலர் எடுபடத்தவறுகிறது.

வசந்தபாலனின் ஜெயில். மறுகுடியமர்வு செய்யப்படும் சென்னையின் பூர்வகுடிகளின் நகர் ஒன்றில் நடைபெறும் போதைப் பரிமாற்றமும் அதற்கு யார் காரணகர்த்தா என்பதுமே கதை.

மிக அழுத்தமாக, எளியவர்களின் வலி சொல்லும் கதையாக இருந்திருக்க வேண்டியது தவறான காட்சிப்படுத்ததால் தடுமாறியிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்புகள் இழந்து அவதிப்படும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பேசப்படவே இல்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் வசந்தபாலன்!

‘எங்கள இவ்ளோ விமர்சிக்கிறயே.. நீ ஒரு படம் பண்ணிக் காட்டேன் பார்க்கலாம்!' என்ற விமர்சனத்துக்கு ‘ஆன்டி இந்தியன்‘ படத்தின்மூலம் பதில் சொல்ல முயன்றிருக்கிறார் ‘ப்ளூ சட்டை' மாறன். அதில் சொல்லிக்கொள்ளும அளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பதே கதை. அதை சமகால அரசியலுடன் சமரசமின்றி நக்கலும் நையாண்டியுமாகச் சொல்லியிருக்கிறார் இளமாறன். இசையும் அமைத்து எழுதி இயக்கியும் இறந்த பாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தும் பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார் மாறன். சட்டயர் என்ற ஜானரில் நிச்சயம் நல்ல எதிர்காலம் மாறனுக்கு உண்டு. படமாக்கலில் இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அடுத்து, அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி.' வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் பழிவாங்கல் கதை. ஆனால் அதை வழக்கமான பாணியில் அடக்கி வாசிக்காமல் ரத்தம் தெறிக்கத் தெறிக்கப் படமாக்கியிருக்கிறார். வசந்த் ரவி அடக்கி

வாசிக்க, அனுபவ நடிப்பில் க்ளாப்ஸ் அள்ளுகிறார் பாரதிராஜா. இளகிய மனதுடையவர்களுக்கு செரிக்க சிரமமாயிருக்கும் காட்சிகள் சில உண்டு. ஆனால் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய முயற்சி.

அடுத்ததும் அறிமுக இயக்குநர் படம்தான். ஃப்ராங்க்ளின் ஜேக்கப்பின் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்த ‘ரைட்டர்.' ஒரு ஸ்டேஷனின் ரைட்டர் தான் செய்த தவறை சரி செய்ய சில முடிவுகள் எடுக்கிறார். அதனால் அடுத்தடுத்து பல நிகழ்வுகள் அதிர்ச்சிகரமாய் நடக்கின்றன. அவற்றை ரைட்டர் கையாளும் விதம்தான் படம்.

சமுத்திரக்கனி மறைந்து படம் முழுவதும் ரைட்டர் தங்கராஜ்தான் தெரிகிறார். அவரது நடிப்பு படத்துக்குப் படம் மிளிர்கிறது. அதிகாரத்தின் கோரமுகமும் சாமான்ய மனதும் பல காட்சிகளில் மோதிக்கொள்கின்றன. தயாரித்த பா.இரஞ்சித்துக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

தமிழிலும் வெளிவந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா, அந்த ‘ஊ சொல்றியா மாமா' பாடலால் கடைசி நேர நெருப்பைப் பற்ற வைத்தது. செம்மரக்கடத்தல் சம்பந்தப்பட்ட கதையில் அல்லு அர்ஜுன் வழக்கமான மசாலா டைப் நடிப்பைக் கொடுத்திருந்தார். பாடல்களால் தேவி ஸ்ரீ பிரசாத் கட்டிப்போடுகிறார். இன்னொரு பக்கம் ‘83‘ தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளிக் கொண்டிருந்தது. இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை சம்பவத்தை பரபரப்பாக எடுத்திருந்தார்கள்.

பிறமொழிகளில் ஓடிடியில் வெளியான இந்திப்படமான ‘அட்ராங்கி ரே' (தமிழில் கலாட்டா கல்யாணம்!) மற்றும் மலையாளப் படமான ‘மின்னல் முரளி' இரண்டும் ரசிக்க வைத்தன.

அட்ராங்கி ரே. தனுஷுடன் கட்டாயக் கல்யாணம் செய்துவைக்கப்பட அதிலிருந்து மீள நினைக்கிறார் சாரா அலி கான். தனுஷுக்கும் விருப்பமில்லை என்பதால் அவரும் ஒத்துழைக்கிறார். சாரா அலிகானின் காதலன் அவ்வப்போது வந்து, அவளை அழைத்துக்கொண்டே இருக்கிறான். தொடர்ந்த காட்சிகளில் நமக்கும் நாயகனுக்கும் அதிர்ச்சி தந்து அதன்பின் கதையை நகர்த்துகிறார்கள்.

தனுஷ் நடிப்புப் பாடமே எடுத்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தன் பாடல்களாலும் பின்னணி இசையாலும் தனி சாம்ராஜ்யமே நடத்தியிருந்தார்.

மலையாளத்தின் ‘மின்னல் முரளி‘யில் டொவினோ தாமஸும் குரு சோமசுந்தரமும் மின்னல் இடி இடித்து ஆளுக்கொரு ஸ்பெஷல் பவரைப் பெறுகிறார்கள். அந்தச் சின்ன ஊரில் இரண்டு சூப்பர் மேன்களால் என்னென்ன நடக்கிறது என்ற கதை. கொஞ்சம் வழக்கமான கதை என்றாலும் வில்லனுக்கு அழுத்தமான ஒரு காதலைக் கொடுத்து நல்ல படமாக மாற்றியிருக்கிறார்கள்!

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள். இன்னும் புதிய நல்ல படங்களோடு சந்திப்போம்!

ஜனவரி - 2022