திரைவலம்

மாவீரமன்னன்!

காதம்பரி

சென்ற மாத இறுதியில் வெளியான மாமன்னன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒரு முக்கியமான பிரச்னையை அழுத்தமாக முன்வைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

பட்டியலின சமூக மக்களுக்கான தனித்தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அத்தொகுதியில் உள்ள சாதி ரீதியான செல்வாக்குப் பெற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கைதான் பெரும்பாலும் ஓங்கி இருக்கிறதென்பதே கதையின் மையக்கரு.

வடிவேலு ஒரு கட்சியின் அடிப்படை உறுப்பினராக கட்சிக்கெனவே உழைக்கும் தொண்டன்.  பின்னாளில் எம்.எல்.ஏ ஆகிறார். மகன்  உதயநிதிக்கு ஒரு பிரச்னை வரும்போது கேள்வி கேட்கச் சென்ற வடிவேலு, பகத் ஃபாசிலால் அவமானத்துக்குள்ளாகிறார். இருவருமாக இணைந்து அதை எதிர்கொண்டு சமாளித்து என்ன ஆகிறார்கள் என்பதே கதை.

உதயநிதிக்கு சொல்லிக்கொள்ளும் படியான படம். கீர்த்தி சுரேஷ் படம் நெடுக அமைதியான நடிப்பில் தன் பங்கை நியாயப்படுத்தியிருக்கிறார். ஃபகத் ஃபாசில்... ப்பா.. மனுசனாய்யா நீயி என்று கேட்க வைத்தால் 'நீயெல்லாம் மனுசனே இல்லய்யா!‘ என்று சொல்ல வைக்கிறார் வடிவேலு. இருவரும் நடிப்பில் கடும் போட்டி போட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள். மலைமீது கலங்கும் அந்த ஒரு காட்சியே போதும் வடிவேலு எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதற்கு!

ஜூலை முதல்வாரத்தில் 'பம்பர்' வெளியானது. செல்வகுமார் வெற்றி, ஷிவானி, ஹரீஷ் பேரடி நடிப்பில் புதுமுக இயக்குநர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் வெளியானது.

பணமில்லாததால் எதிர்கொண்ட அவமானங்கள் கொடுத்த பாடத்தால் 'பணம்தான் வாழ்க்கை. அதை சம்பாதிக்க என்னவும் செய்வேன்' என்று சின்னத் திருட்டு, பெரிய திருட்டு என்று போய் கொலை வரைக்கும் போகத் துணியும் நாயகன். ஒரு தலையாட்டலில் பத்து கோடி கிடைக்கும் வாய்ப்பிருந்தும் அது என்னுடையதில்லை என்று அதற்குரியவனைத் தேடி அலையும் ஒரு லாட்டரி விற்பனைக்காரர். இவர்களிருவரும் சந்திப்பதும், அதற்குப் பின்னான 'தெளிவான குழப்பங்களும்'தான் கதை.

நாயகன் வெற்றி என்பதை விட, ஹரீஷ் பேரடி என்றே சொல்லலாம். மையக்கருவான அறம் பிறழாமைக்கு ஏற்ற உடல்மொழியை படம் முழுதும் கொண்டு வந்து தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார். ஏட்டையாவாக வரும் கவிதா பாரதிக்கு நல்ல வேடம். அவரது போலீஸ்காரர்களுக்கேயுரிய திமிர்த்தனத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். படமாக்கலில் டெக்னிக்கலாக சில சிக்கல்கள் இருந்தாலும், மோசமில்லை என்று சொல்லலாம்.

அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் பல யூ ட்யூப் ஸ்டார்கள் நடித்த படம் 'பாபா ப்ளாக் ஷீப்' ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியானது. தற்கொலை குறித்து பேசும் படம். விக்னேஷ் காந்த் உள்ளிட்ட யூ ட்யூப் ஸ்டார்களுக்கென்றே எழுதப்பட்ட காட்சிகளும் வசனங்களும் பெரிய திரைக்கு தீனியாக இல்லை. ஆனாலும் சொல்ல வந்த கருத்து, நடிகர்களின் பங்களிப்பும் ஓகே ரகம்!

அதேவாரத்தில் வெளியானது மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, யோகிபாபு, மிஷ்கின் நடிக்க  ‘மண்டேலா' இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார். தரமற்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குடியமர்த்தப்படும் மக்கள். எந்தப் பிர்சனை வந்தாலும் ‘அட்ஜஸ்ட்' செய்து கொள்ளும் நாயகன். ஒரு கட்டத்தில் குரலொன்றின் மூலம் அவருக்கு சில கட்டளைகள் வர, தன்னையுமறியாமல் அதற்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார். அதனால் வரும் சாதக பாதகங்கள் என்ன, குரலைத் தாண்டி தன்னிச்சையாக குற்றங்களைத் தட்டிக்கேட்டாரா என்பதே கதை.

சிவகார்த்திகேயனுக்கெனவே தைக்கப்பட்ட சட்டையாகப் பொருந்தியிருக்கிறது கதை. கதைக்கு அவரது நடிப்பு மேலும் மெருகூட்டுகிறது. சரிதா.. வாவ்! மிஷ்கினுக்கும் நல்லதொரு வில்லன் வேடம். வெகுநாட்களுக்குப் பிறகு படம் முழுவதும் வந்து கலகலப்பூட்டுகிறார் யோகிபாபு. நிறைவானதொரு படம்!

மூன்றாவது வாரத்தில் வசந்த பாலனின் அநீதி வெளியானது. அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் நடித்திருந்தினர். டெலிவரி பாயாக வரும் நாயகன், வீட்டு வேலை செய்யும் நாயகி. இருவருமாக தங்களுக்கெதிரான அநீதிகளை எப்படி எதிர்கொண்டு தடுத்தனர் என்பதே கதை. வர்க்க ரீதியாக அடக்குமுறைகளைப் பேசும்படமாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தில் உள்ள பணக்காரர்கள் யாவருமே கெட்டவர்கள் என்று வலிந்து திணிக்கப்பட்ட படமாக மாறி, சொல்ல வந்ததை சரியாகச் சொல்லாமல் தடம் மாறி பெரும் குழப்பத்தோடு முடித்துவைக்கப்பட்ட க்ளைமாக்ஸாக மாறிவிட்டிருக்கிறது அநீதி.