திரைவலம்

மண்டேலா எனும் மைல்கல்!

காதம்பரி

முதல் வாரத்தில் வந்தது சுல்தான். கார்த்தி நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.விவேக் மெர்வின் இசையில் ‘சண்டையில கிழியாத சட்டையெது குமாரு' பாடல் ஹிட்டாகியிருக்க படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

ரவுடிகள் ராஜ்யமாக இருக்கும் ஒரு வீட்டில் படித்த ஆளான கார்த்தி மும்பையிலிருந்து வந்திறங்குகிறார். தொடர்ந்து நடக்கும் சில நெகடிவான விஷயங்களால் ‘‘சண்டை சச்சரவே வேண்டாம்'' என்று ஒரு கிராமத்துக்கு அந்த நூறு ரவுடிகளோடு பயணமாகிறார். ஆனால் அங்கே அமைதி கிடைக்கவில்லை. அட்டூழியங்களே நடக்கிறது. இனியும் பொறுக்க முடியாது குருநாதா என்று வில்லன்களைப் பந்தாடி படத்தை முடிக்கிறார். இதுதான் சுல்தான்.

கார்த்திக்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட்டைக் கருத்தில் கொண்டு படமே கிட்டத்தட்ட தெலுங்குப் படம் போன்றே அத்தனை கதாபாத்திரங்கள். படத்தின் சுவாரஸ்யத்துக்கு காதல், கார்ப்பரேட், விவசாயம் என்று சிலபலவற்றைச் சேர்த்து பேக்கேஜாக மாற்றியிருக்கிறார்கள். பாதி படம் வரை அமைதியும் அதன்பின் ஆக்ரோஷமும் என தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் கார்த்தி. தமிழில் ராஷ்மிகாவுக்கு இது முதல்படம். இவர்களைத் தவிர ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவ்வளவு ஆர்ட்டிஸ்டுகள். படம் கலகலவெனப் போகும்போது திடீரென்று தொய்வாகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய ப்ளஸ்.

மசாலா படம் என்று முடிவெடுத்த பின் லாஜிக்கைத் தூக்கி ஆணியில் மாட்டிவிடவேண்டியதுதான். ஆனால் கொஞ்சமாவது ஏமாறுவது தெரியாமல் ஏமாற்றலாம். அது இதில் மிஸ்!

மண்டேலா என்றொரு படமும் இந்த மாதம் வெளியாகி கவனம் ஈர்த்தது. டிவி + ஓடிடியில் வந்தாலும் இரண்டொரு நாட்களில் பரவலாகப் பலரையும் பேசவைத்தது படம். புதுமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கும் படம்.

ஆயிரம் பேருக்குள் வசிக்கும்  சூரங்குடி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இரண்டு தரப்பினருக்குள் நடக்கும் நீயா நானா போட்டியால் கனஜோராக தேர்தல் வேலைகள் நடந்து ‘நமக்கு எவ்வளவு ஓட்டு விழும்' என்று கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். ஒரு ஓட்டுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில், அந்த ஊரில் சலூன் கடை நடத்தும் யோகிபாபுவிடம் போய் நிற்கிறது இரண்டு தரப்பும். அவர் போடும் ஓட்டுக்காக இவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை காமெடியும் சமூக நீதியும் கலந்த விருந்தாகப் படைத்திருக்கிறார் மடோன் அஸ்வின்.     

காமெடியனாக இல்லாமல் கதை நாயகனாக ஜொலிக்கிறார் யோகி பாபு. ஆரம்பத்தில் ஊரார்கள் முன் ஒடுக்கப்பட்டு அடங்கி இருக்கும்போது காட்டும் உடல்மொழியிலும், அதன்பின் ஊருக்குள் தனக்கு முக்கியத்துவம் வந்தபின் காட்டும் உடல்மொழியிலும் அத்தனை வேறுபாடு காட்டி நடித்திருக்கிறார்.  வெறுமனே வந்து போகும் நாயகியாக இல்லாமல், கதையோடு ஒட்டி நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமாரும் நிச்சயம் குறிப்பிடத் தகுந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

மூன்றாவதாக கர்ணன். பரியேறும் பெருமாள் மூலம் பரிவட்டம் கட்டிக்கொண்ட மாரி செல்வராஜ், கர்ணனை நமக்குக் கொடுத்து தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். தனுஷின் அசுரத்தனமான நடிப்புக்கு தீனி போட்டது மாரியா, மாரியின் அழுத்தமான கதைக் காட்சிகளுக்கு தீனிபோட்டது தனுஷா என்று விவாதமே நடத்தும் அளவுக்கு இருவரும் சமபலத்தில் படத்தின் வெற்றிக்கு பங்களித்திருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்தம் இல்லாத பொடியன்குளம் என்ற கிராமத்தில், பேருந்து வசதியில்லாததால் நடக்கும் சின்னச் சின்ன அதிர்வுகள் பல்கிப் பெருகி எப்படி வெடிக்கிறது என்பதே கதை. இது பேருந்து இல்லாத நிலையை மட்டும் பேசும் படமல்ல.. ஏன் பேருந்து நிறுத்தப்படவில்லை; அதன்பின் என்னென்ன சாதிய வன்மங்கள், இதனால் அவர்கள் இழப்பது எவையெவற்றை என்பதை ஓர் ஆவணம் போலப் பதிவு செய்திருக்கிறது படம்.

தனுஷின் கண்ணில் எப்போதும் தெறிக்கும் கோபக்கனல் ஒன்றே அவர் நடிப்புக்குச் சாட்சியாய் இருக்கிறது. ஏமரஜாவாக நடித்திருக்கும் லால், துரியோதனனாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார், அக்கா பத்மினியாக நடித்திருக்கும் லஷ்மிப்ரியா என்று ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். வில்லன் கண்ணபிரானாக நட்டி நட்ராஜ், அந்த வேடத்துக் குண்டான நியாயத்தைச் செய்திருக்கிறார்.

படத்தின் குறியீடுகள் பற்றி சாதாரணமாகவே பலரும் புரிந்து கொண்டு விவாதிப்பதைப் பார்க்கமுடிந்தது. அதுவே மாரி செல்வராஜின் வெற்றியாகப் பார்க்கிறேன். இன்னும் பல படங்களைக் கொடுக் கட்டும் இந்த இணை!

காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் படம் சேஸிங். பெண்  கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பலை கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார்.

முக்கிய தாதாவான மலேசிய வில்லன் ஜெரால்டை தூக்க தனது டீமுடன் மலேசியா செல்வது என்று போகிறது கதை. இது மாஸ் ஹீரோகளுக்கான கதைக்களம். இதில் வரலட்சுமி நடித்துள்ளதுதான் புதுமை! அவர்   வில்லன்களை பந்தாடும் காட்சிகள் இன்னும் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

 படத்தைப் பரபரப்பான சேஸிங் படமாக மாற்றியதற்குப் படத்தொகுப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் முக்கிய பங்குண்டு.

கொரோனா இரண்டாவது அலையால், மீண்டும் தியேட்டர் வெளியீடு கேள்விக்குறியாகிவிட இனி என்னாகும் என்று தவிக்கிறது திரைத்துறை.

மே 2021