திரைவலம்

மசாலா பொங்கல்!

கே.கே.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தினத்தந்தியில் ‘லயனம்’ என்கிற படத்தின் விளம்பரம் ஒன்று கண்ணில் சிக்கியது. இந்தப்பெயர் நமக்கு ரொம்ப பரிச்சயமானதாச்சே... என்னபடம் அது... என்று கூகுளில் போட்டுத்தேடினேன்.  1989ல் மறைந்த நடிகை

சில்க்ஸ்மிதா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அக்கால பிட்டுப்பட ரசிகர்களின் க்ளாசிக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அக்காலத்தில் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்றும் கூட யூடியூபில் மிக அதிகம் பேரால் பார்க்கப்படும் பிட்டுப்படங்களில் ஒன்றாக இதுவே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு மல்லுவுட்டில் ஸ்வேதா மேனனை வைத்து ஜெயபாரதி நடித்த ‘’ரதிநிர்வேதம்” படத்தை ரீமேக்கியதைப்போல லயனம் படத்தையும் ரீமேக் பண்ணியிருப்பார்கள் போல என்று நினைத்து படம் எங்கே ஓடுகிறதென்று தேடினேன். சென்னையின் மிகமிக மோசமான நிலையிலிருக்கிற திரையரங்குகளில் மட்டுமே இப்படம் திரையிடப்பட்டிருந்த்து. சென்று பார்த்தால் பழைய 1989

சில்க்ஸ்மிதா படமேதான் திரையிடப்பட்டது.

ஒரு பிட்டுபடத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இப்படத்தில் இருக்கிறது. ஒரு இளம்வயது பையன். அவனை விரட்டி விரட்டி உறவு கொள்ள நினைக்கும் அழகழகான பெண்கள்... செக்ஸ் என்பதையே அறியாமல் விரகதாபத்தில் வாடும் ஒரு விதவை என நிறையவே இப்படத்திலும் உண்டு. அதோடு படத்தின் காட்சிகளும் திரைக்கதையும் கூட பிட்டுகளை இணைப்பதற்கேற்பவே உருவாக்கப்பட்டிருந்தன. படத்தின் பெரும்பாலான காட்சிகளும்

சில்க் ஸ்மிதாவையும் அவருடைய உடலை எப்படியெல்லாம் உரித்துக்காட்டமுடியுமோ அதற்கேற்பவுமே நகர்த்தப்படுகிறது. ஒருவேளை அதுதான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

ஆனால் ஒரு திரைப்படமாக தொழில்நுட்ப ரீதியிலும் அனுபவமாகவும் எந்தவித பொறுப்புமின்றி எடுக்கப்பட்ட மிகச் சாதாரண திரைப்படம் இது. முன்னுக்குப்பின் தொடர்பில்லாத காட்சிகள், மோசமான நடிப்பு, லாஜிக்கே இல்லாத, புதுமையான விஷயங்கள் எதுவுமற்ற திரைக்கதை என ஒரு நல்ல அல்லது வெற்றிபெறக்கூடிய சினிமாவில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ எதுவுமே இப்படத்தில் இல்லை! எல்லா குறைகளையும்

சில்க்கையும் அவருடைய கவர்ச்சியையும் கொண்டே பவுடர்பூசி மூடி மறைக்கின்றனர். இவ்வளவு மோசமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தும் இப்படம் பலமொழிகளில் வெளியாகி சக்கைபோடு போட்டிருக்கிறது.

ஆச்சர்யம்தான் இல்லையா...

ஆனால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இந்த லயனத்தைவிடவும் மகாமட்டமான இரண்டு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகி முதல் வாரத்திலேயே நூறுகோடியை

வசூலித்துள்ளதே!

இதில் விஜய் நடித்த ஜில்லா 60 ப்ளஸ் கோடிகளையும், ‘நரைச்ச தல’ அஜித் நடித்த வீரம் 45 ப்ளஸ் கோடிகளையும் வசூலித்துள்ளது. படம் பார்ப்பவர்களைப் பற்றியோ கதையை திரைக்கதையைப் பற்றியோ தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றியோ அட.. காசு கொடுத்து படம் பார்க்கிற ரசிகனுக்கு ஒரு நல்ல சினிமா அனுபவம் தரவேண்டும் என்கிற எந்தக் கவலையுமில்லாமல் விஜய், அஜித் என்கிற இரண்டு நட்சத்திரங்களையும் அவர்களுடைய ரசிகர்களை திருப்தி படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தோடும் எடுக்கப்பட்டிருக்கிற குப்பைகள் இந்த இரண்டு படங்களும்.

பிட்டுப்பட இலக்கணப்படி எடுக்கப்பட்ட லயனம் போலவே, மசாலா பட இலக்கணத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களுக்கும் அனேக ஒற்றுமைகள் உண்டு. இரண்டு படங்களுமே மகா மொக்கை என்பது முதல் ஒற்றுமை. படம் முழுக்க இரண்டு பேருமாக

சேர்ந்து இரண்டாயிரத்து சொச்சம் பேரை அடித்து நொறுக்குகிறார்கள். தமன்னாவும் காஜல் அகர்வாலும் நிறைய தொப்புளும் மார்பும் காட்டி ஆடிப்பாடுகிறார்கள். சூரி ஒருபக்கம் சந்தானம் இன்னொரு பக்கம் என இரட்டை அர்த்த வசனங்களை கொட்டுகிறார்கள், விஜய் தன் பங்குக்கு அப்பா, தங்கச்சி, தம்பி சென்டிமென்ட் காட்டினால், அஜித் அவர் பங்குக்கு தம்பி, மாமனார், மச்சினிச்சி, கொழுந்தியா என

சென்டிமென்ட் போட்டியில் பகபகவென முன்னேறுகிறார். இவர்களிருவரும் இந்த

சென்டிமென்ட் போட்டியில் படம் பார்க்கிற

ரசிகர்கள் மேல் கொஞ்சமாவது கருணை காட்டியிருக்கலாம்... 

என்னதான் எடுப்பது மசாலா படமாகவே இருந்தாலும் அதை பார்க்கிறவர்கள் அடித்தட்டு மக்களாகவே இருந்தாலும் அதில் கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா... காட்சிகளில் புத்திசாலித்தனம், சீட்டு நுனிக்கே கொண்டு வருகிற திருப்பங்கள், கதையிலும் கொஞ்சம் புதுமை, ரசிக்கும்படியான வசனங்கள், குழந்தைகளும் ரசிக்கத்தக்க நகைச்சுவை, வேண்டாமா... ஆனானப்பட்ட ரஜினிகாந்தே எந்திரனாகவும், வேட்டையபுர மகாராஜாவாகவும் நடிக்க முனைகிறார்.

இவர்களிருவருமோ சிறந்த நடிகர்கள். ஆனால் நல்ல கதையை நாலு பேரிடம் கேட்டு அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து நடிக்கவும் கூட  தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. அவர்களைச் சொல்லியும் தப்பில்லை.. படம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து நூறுகோடியை கொட்டிக்கொடுக்கிற மக்கள் இருக்கிறவரை... அடுத்தபடத்தை இன்னும்கூட மோசமாக எடுத்து கூட வெளியிடும் வீரம் வரத்தானே செய்யும்!

நூறாண்டு இந்திய சினிமாவின் மகத்தான மசாலா படமென்றால் அது ‘’ஷோலே” வாகத் தான் இருக்கும். அந்தத் திரைப்படத்தை மீண்டும் டிஜிட்டலைஸ் செய்து 3டியில்

சென்றமாதம் வெளியிட்டனர். (இதை எதற்கு 3டி பண்ணினார்கள் என்று தெரியவில்லை.) இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியிடப்பட்ட அத்திரைப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் என்ன தெரியுமா? நான்கு கோடி!

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் படம் அதே பரபர உணர்வைத் தருகிறது. ‘கித்னே ஆத்மீதீ” என்று கேட்கிற அம்ஜத்கானை காணும்போதெல்லாம் குலை நடுங்குகிறது. அவர் வருகிற காட்களிலெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. தொனதொனவென பேசிக்கொண்டேயிருக்கிற பசந்தியை

ரசிக்கமுடிகிறது. ஜெய்க்கும் வீருக்குமான நட்பைக்கண்டு

உற்சாகமாகி கண்ணீர் சிந்த முடிகிறது! அமிதாப் பச்சனின் அலட்டலில்லாத ஹீரோயிசத்தை ரசிக்க முடிகிறது. படத்தில் வருகிற எல்லா பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் இருக்கிறது. வலிமையான வில்லன் இருக்கிறான்.

‘’ஏ தோஸுத்தி..” ‘’லைலா ஓ லைலா..” ‘’ஜப் தக் ஹை ஜான்” என சூப்பர் ஹிட் பாடல்களை கேட்கும்போதே உற்சாகம் பீறிடுகிறது... ஆல்மோஸ்ட் நான்கு மணி நேரம் ஓடினாலும் சலிப்பே இல்லாமல் பார்க்க முடிகிறது.

இதைத்தானே ஒரு கமர்ஷியல் திரைப்படம் செய்யவேண்டும். எத்தனை முறை பார்த்தாலும் இதே உணர்வைத் திரும்ப திரும்பத்தர வேண்டும். அப்படிப்பட்ட கமர்ஷியல் படங்களே ரசிகர்களுக்குத் தேவை. ஜில்லாக்களும் வீரங்களும் அல்ல. அவர்களுக்குத்தேவை உண்மையான கமர்ஷியல் சினிமா!

பிப்ரவரி, 2014.