திரைவலம்

நடுவக்குறிச்சி முத்து!

காதம்பரி

செப்டம்பர் மாதப் படங்களுக்குப் போகும் முன், ஆகஸ்ட் இறுதியில் வெளிவந்த இரண்டு முக்கியமான படங்களைப் பார்த்துவிடலாம்:

கோப்ரா.

சர்வதேச அளவில் தொடர்கொலைகள் செய்யும் ஒரு கணித வாத்தியாராக வருகிறார் விக்ரம். கொலைகாரனைத் தேடும் இன்டர்போல் அதிகாரியாக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான். அவரை இவர் கண்டுபிடித்து நெருங்கும் கதைதான் கோப்ரா.

விக்ரம் சொல்லவே வேண்டாம். பல்வேறு வேடங்களில் நடித்துத் தள்ளியிருக்கிறார். அவற்றில் பாதி தேவையில்லாத ஆணி ரகம் என்பதுதான் சோகம். திரைக்கு நல்வரவான இர்ஃபான் பதான், நடிப்பில் சோபிக்கிறார். மூன்று கதாநாயகிகள் வந்து போகிறார்கள். இஷ்டத்துக்கு பறந்து பறந்து கொலை செய்யும் விக்ரம் ‘இந்த லாஜிக் லாஜிக்ம்பாங்களே... அப்டின்னா என்னா?' என்று கேட்கிறார். வில்லன் ரோஷன் மேத்யூ கவர்கிறார்.

அட்டகத்தியிலிருந்து சர்ப்பட்டா வரை பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளை செய்து வந்த பா. இரஞ்சித், இதுவரை யாரும் அவரிடம் எதிர்பார்க்காத ஒரு படமாக்கலை நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கொடுத்திருந்தார். காதலும் காதல் சார்ந்த பார்வைகளுமே படம் பேசும்போருள்.

காதலும் காதல் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், காதலர்களை சமூகம் பார்க்கும் கோணமும் அதை காதலர்கள் எதிர்கொள்ளும் விதமும் என வெவ்வேறு விதமான காதல்களை வைத்து உரையாடல் வழி ஒரு திரைப்படத்தை நகர்த்தியுள்ளார் இரஞ்சித். ஒரு நாடகக்குழுவின் நாடகத்திற்கான கருப்பொருளாக அதை ஆக்கி, அந்த கதாபத்திரங்களின் குரல் என்ன பிரதிபலிக்க வேண்டும் என்று நடிப்பவர்களுக்குள் நடக்கும் விவாதம் மூலம் நமக்கு முன்னும் எடுத்து வைக்கிறார் இயக்குநர்.

தென்மாவின் இசை பெரும்பலம் அளித்திருக்கிறது. காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் என நடித்திருந்த அனைவரும் அசலாகத் தெரிந்தனர். காட்சி ஊடகத்தில் இப்படிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி என்ற விமர்சனங்கள் வந்தன எனினும், தன்னைப் பின்பற்றும் இளம் சமூகத்துக்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தை பேசுபொருளாக வைத்து விவாதத்தை தூண்டியதற்காக இரஞ்சித் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

செப்டம்பரில் வெளியான சில படங்களைப் பார்க்கலாம்.

வடகிழக்கு மாநில எல்லையின் காட்டுக்குள் செல்லும் ராணுவ குழு ஒன்று அசம்பாவிதமொன்றைச் சந்திக்கிறது. அதற்கான காரணம் என்ன என ஆராயும் படமே கேப்டன். ஆர்யா, சிம்ரன் நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இயக்குநர் பிரிடேட்டர், ஏலியன் என்று புதியவகை களத்தைக் கையிலெடுத்திருக்கிறார். அது புதிதுதானென்றாலும் காட்சிகளில் வாவ் தன்மை இல்லாமலிருந்தது படத்தை ஒட்டாமல் செய்துவிட்டது. இன்னும் அழுத்தமான திரைக்கதை, காட்சிகளைக் கோரும் இந்தக் களத்தை ஜஸ்ட் லைக் தட் ஹேண்டில் செய்து விட்டார்களே என்று தோன்ற வைத்த ஒரு படம் கேப்டன்.

இதே மாதத்தில் ‘எதிர்பாராத' விதமாக வெந்து தணிந்தது காடு ரிலீஸானது. எப்ப முடிச்சாங்க படத்தை என்று பலரும் யோசிக்கும் வண்ணம் சத்தமில்லாமல் படத்தை முடித்து வெளியிட்டார் கௌதம் வாசுதேவ்.

மும்பை பரோட்டா கடையில் பிழைப்புக்காக வேலை செய்யச் செல்கிறார் ‘நடுவக்குறிச்சி முத்து'வான சிம்பு. அங்கே ஓனர் தமிழர்களை அடியாட்களாகப் பயன்படுத்துகிறார் என்பது பிறகுதான் தெரியவருகிறது. அவர்களுடன் சிம்புவும் ஐக்கியமாகி, பிறகு கேங்க்ஸ்டராக மாறுவதே வெந்து தணிந்தது காடு சொல்லும் கதை.

ஸ்டைலிஷ் லொகேஷன்கள், இங்க்லீஷ் உச்சரிப்புகள், வாய்ஸ் ஓவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு புழுதியோடு ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்கியுள்ளார் கௌதம். ஜெயமோகனின் கதை பாத்திரமான முத்துவுக்காக தன்னை மெனக்கெட்டு செதுக்கிக் கொண்டிருக்கிறார் முத்து. 19 வயது சிறுவனாகவே காட்சியளிக்கும் வண்ணம் மெலிந்த தேகம், ஒடுக்கான கன்னம் என்று சிம்புவின் ‘சேஞ்ச் ஓவர்' சபாஷ் சொல்ல வைக்கிறது.

இடைவேளை வரை சீட்டின் நுனியில் உட்கார வைத்த படம், வழக்கமான கேங்க்ஸ்டர் பாதையை எடுத்ததும் சீட்டில் சாய வைத்துவிடுவதுதான் பெரும் மைனஸ். ஏ.ஆர்.ஆர் இசையில் பாடல்கள் தியேட்டரில் ரசிக்க வைத்து ஹிட்டாக்கிவிட்டது. இடைவேளை வரை இருக்கும் வேகமும் காட்சியமைப்புகளும் இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்திருந்தால் இன்னொரு ஜிவிஎம்-சிம்பு மேஜிக்காக இருந்திருக்கும்.

வைபவ், ஆத்தங்குடி இளையராஜா நடிப்பில் அடுத்த வாரம் வெளியான படம் பபூன். வெளிநாடு செல்ல ஆசைப்படும் இருவரும் பணம் சேர்க்க வேண்டி, லாரி டிரைவராக பணிக்குச் சேர்கிறார்கள். உப்பு லாரிக்குள் போதைப் பொருளிருக்க போலீஸ் இவர்களை கைது செய்கிறது. போதைப் பொருள் கடத்தலுக்குப் பின்னான காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்களா.. போலீஸ் என்ன செய்தது என்பதைக் கூறும் படமே பபூன். இயக்குநர் அசோக் வீரப்பன் படத்தில் கையாண்ட விஷயங்களை முடிந்த அளவு நேர்மையோடு காட்டியுள்ளார். வைபவும் ஆத்தங்குடி இளையராஜாவும் படத்தின் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தி நம்மைப் படத்துக்குள் இழுக்கிறார்கள். ஜோஜூ ஜார்ஜ் சர்ப்ரைஸ்! இத்தனை இருந்தும் படம் எங்கோ தடுமாறுவதை உணரமுடிகிறது. செயற்கையான சில காட்சிகள், முழுமையற்ற திரைக்கதை என்ற குறைகளைக் கடந்திருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும் பபூன்!

அக்டோபர், 2022