திரைவலம்

க்யா ரே... டிரைலர்தான் கிடைச்சுதா?

Staff Writer

மார்ச் மாசம்  திரையுலக ஸ்ட்ரைக்கால் பெரிசா விமர்சனம் பண்ற மாதிரி ஒரு படமும் வர்ல. ஆனா ஒண்ணு... சரி.. அதப் பார்க்கறதுக்கு முன்னால கொஞ்சம் ஃப்ளாஷ் பேக் போய்ட்டு வரலாம்.  

அந்தக் காலத்துல எல்லாம்  படம் வந்தாலே, வந்து ஒரு மாசம்லாம் ஆனப்பறம்தான், பல ஊர்களுக்கு இப்படி ஒரு படம் வந்திருக்குன்னே தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு விவரம் தெரிஞ்சு கூட, பட ரிலீஸ் ஆனா, போஸ்டர்லாம் பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான். அதுக்கு முன்னால பாடல்கள் ரிலீஸ் ஆகும். ஆனாலும் அதை வெச்சுட்டு எப்ப படம் ரிலீஸ்னெல்லாம் சொல்ல முடியாது.  அப்பறம்தான் என்னென்ன மாற்றங்கள்! டிரெய்லர்னு ஒண்ணு வந்தது. படம் என்ன சொல்லுதுன்றதை 3 நிமிஷத்துல சுருக்கி ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டுவந்தாங்க. அப்பறமா, பாடல் ரிலீஸை பிரம்மாண்டமாக் கொண்டாடினாங்க. 

அதுக்கப்பறம் டிரெய்லருக்கு முந்தி, டீசர். அதுக்கப்பறம் மோஷன் போஸ்டர். போஸ்டர். (ஃபர்ஸ்ட் லுக்!), டைட்டில் அறிவிப்பு, காஸ்டிங் அறிவிப்பு. இப்படி எக்கச்சக்க எகிற வைக்கிற எதிர்பார்ப்புகள்!

மார்ச் மாசம் ரெண்டு மூணு அப்படி நடந்தது. 

1. காலா டீசர்.

சொல்லி அடிச்சார் ரஞ்சித். எதிர்பார்க்காம, ஒருநாள் முன்னமே இணையத்துல லீக் ஆச்சு. ப்ச்.. அதுனால என்னனு தனுஷ் அவரும் ரிலீஸ் செய்ய... வேங்கையன் மவன், பேசுபொருளானார்.

நானா படேகரோட ஸ்டைலிஷ் பாடி லேங்க்வேஜ்ல ‘காலா.. கெய்சே நாம்ஹே.. ரே'னு ஆரம்பிச்சு ‘கரிகாலனோட மொத்த ரௌடித்தனத்தையும் பார்த்ததில்லைல்ல... பார்ப்பீங்க'னு ரஜினி சொல்றதுல முடியுது ஒண்ணேகால் நிமிஷ டீசர். 

கச்சிதம். ‘வேங்கையன் மவன் ஒத்தைல நிக்கேன்' கிட்டத்தட்ட எல்லா வெர்ஷன்களிலும் இணையத்தைக் கலங்கடித்தது.  ‘உன்னையும் மண்ணையும் வென்றுவா'  - யோகி பி குரலில் சந்தோஷ் நாராயணனின் பாடல் ரஜினி ரசிகர்களை முறுக்கேற்றியது. நிச்சயம், பா.இரஞ்சித் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா ரசிகர்களுக்குமான ஒரு விருந்து படைப்பார் என்று நம்புகிறேன்.

2. வடசென்னை ஃபர்ஸ்ட் லுக்

வெகுநாட்களாக வெற்றிமாறனின் வடசென்னைக்காகக் காத்திருக்கும் ரசிகைகளில் நானும்  ஒருத்தி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தனுஷ்ஷின் ரஃப் லுக்கே, கலக்கலாக இருந்தது. போஸ்டரில்  ‘வடசென்னை' என்ற எழுத்துகள்தான் அரதப்பழைய டிசைனாக இருந்தது.  சிலபல பாகங்களாக வரும் என்றுவேறு சொல்லி, எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள். வெய்ட்டிங் வெற்றி சார்!

3. சிவகார்த்திகேயன்  - ஆர். ரவிக்குமார்

‘இன்று நேற்று நாளை' வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது படமே சிவகார்த்திகேயனோடு என்றதுமே ஆர்.ரவிக்குமார் மீது வெளிச்சம் பாய்ந்தது. Sci - Fi மூவி என்பதால், ஒருபடி அதிக ஆவல். முதல் படத்திலேயே நம்ப முடியாத விஷயத்தை கன்வின்சிங்காகக் கொடுத்திருந்தார் ரவி. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று இன்ப அதிர்ச்சியளித்தது 24 AM ஸ்டூடியோ. தொடர்ந்து படத்தின் குழுவை ட்விட்டரில் அறிவித் தது. நாயகி ரகுல் ப்ரீத் சிங், கேமரா - நீரவ் ஷா, எடிட்டிங் - லியோ ஜான்பால், ஆக்‌ஷன் & அன்பறிவ் என்று சகலத்தையும் அறிவித்து சர்ப்ரைஸைக் கூட்டியிருக்கிறார்கள்.

மார்ச் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளாக இவற்றைச் சொல்லலாம். சொல்லாமல் விட்ட ஒன்று 2.0 டீசர் ரிலீஸ்.  யாரோ அந்தப் படத்தின் பின்னுள்ள உழைப்போ, முக்கியத்துவமோ தெரியாமல் எங்கோ ஒளிபரப்பப்பட்டபோது திருட்டுத்தனமாக மொபைலில் எடுத்து வெளியிட்டுவிட்டார்கள். ஆகவே... ஒரிஜினல் டீசர் ரிலீஸ் லேட் ஆகியிருக்கிறது.  2.0 டீசருக்கே வெர்ஷன் 2.0 வர வெச்சுட்டீங்களேய்யா!

ஏப்ரல், 2018.