திரைவலம்

கோபம் வராப்ல காமெடி பண்ணாதீங்க

வினோ

சென்ற ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டு. விஜய் தன்னுடைய பழைய அரசியல் ஆசைகளை துறந்து, அவருடைய உடலுக்கும் வயதுக்கும் பிஞ்சு முகத்துக்கும் ஏற்ற பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்திருந்தார். நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்து எளிய பாத்திரங்களில் ஆச்சர்யப்படுத்தினார்.

யார் கண்ணு பட்டதோ? மீண்டும் ‘தலைவா’ வழியே தன்னுடைய பழைய பாணிக்கே திரும்பியிருக்கிறார். ஆசை யாரை விட்டது!  அதென்ன பழைய பாணி? ஒரே பாடலில் ஊருக்கே தாதாவாகிவிடுவது. பின்னால் நாலு குண்டர்களோடு சாலைகளில் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக விருக் விருக் என்று டெனிம் கோட்டு போட்டுக்கொண்டு நடப்பது. மக்கள் கூட்டத்துக்கு முன்னால் நின்று அவ்வப்போது கையை ஆட்டுவது. இருட்டு அறையில் அமர்ந்தபடி யார் யாரோடோ பேசுவது.

தலைவாவில் இது அனைத்துமே இருந்தாலும், டெனிம் கோட்டு மாத்திரம் கிடையாது.  படத்தில் சாதா  “விஸ்வா” வாக இருக்கிற விஜய் ‘விஸ்வா பாயா’க மாறியதும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதால் அதுவரை முழுக்கை சட்டை போட்டுக்கொண்டிருந்தவர் அரைக்கை சட்டை போட்டுக்கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான  ‘தமிழ்ப்படம்’ தமிழ்சினிமா நாயகர்களை வெகுவாக கிண்டலடித்து எடுக்கப்பட்ட முழுநீள நகைச்சுவைப்படம். அதில் சில விஷயங்களை தவறவிட்டிருந்தார்கள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வருத்தமிருந்தது. அப்படித் தவறி விட்ட சகல க்ளிஷேவான ஹீரோயிச விஷயங்களையும் திரட்டி தலைவாவை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

இதுவரை ஆங்கிலப்படங்களிலிருந்தே சீன்களை உருவி படமெடுத்து வந்தவர் முதன்முறையாக தமிழ்  சினிமாவை போற்றும் வகையில் தமிழ்ப்படங்க ளிலிருந்தே காட்சிகளை சுட்டு படமெடுத்தமைக்காக நம்முடைய பாராட்டுகள்! இது எந்தப்படம் என்று தேட சிரமப்படவேண்டாமில்லையா..  பார்த்ததும் ஏ இது நாயகன், அட இது படையப்பா, இது புதியபறவைய்யா என என்ன படத்திலிருந்து காட்சிகளை சுட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விளையாட ஜாலியாக இருந்தது.

ஒரே ஒரு வருத்தம்தான். படத்தின் முதல் அரைமணிநேரம் உலகப்புகழ்பெற்ற ‘நாய்சேகர்’ காமெடியையே யூடியூப் புகழ் சாம்ஆண்டர்சனை வைத்து ஒப்பேற்றியதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதோடு அமலா பாலை வைத்து பண்ணியிருக்கிற ட்விஸ்ட்டும் அவருக்கு கொடுத்திருக்கிற அதீத முக்கியத்துவமும் ஏனோ வலிந்து திணிக்கப்பட்டதாக தோன்றியது. படத்தில் அமலாபால்தான் விஜயை பிரச்சனையில் சிக்க வைக்கிறார், அவரேதான் அவரை இக்கட்டான சூழலிலிருந்து காப்பாற்றுகிறார்; வாழ்வளிக்கிறார் என்பதுதான் தலைவா பட வெளியீட்டின் போது நிகழ்ந்த சம்பவங்களோடு எவ்வளவு அழகாக பொருந்திப்போகிறது!

ஆமா... படம் வெளியானால் வெடிகுண்டு வைப்போம்னு எச்சரிக்கை கொடுத்தாங்களே அவிங்க என்ன ஆனாய்ங்க?

கொஞ்சம் சிரிங்க பாஸ்

சத்தியமா இது சிரிப்பு படம்தான் நம்புங்க என்று வெளியான தேசிங்குராஜா ஏனோ அவ்வளவு சீரியஸாக இருந்தது. கடைசி இருபது நிமிடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் இடம்பெற்ற காமெடிகள் புன்னகைக்க வைத்தாலும் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. விமல் வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார். சூரி பின்னி எடுக்கிறார். அந்த முத்தக் காட்சியில் முகபாவங்கள் எல்லாரையும் சிரிக்க வைக்கின்றன.

இப்படிப்பட்ட கிராமங்களையும் கிராமத்து மனிதர்களையும் செவ்வாய் கிரகத்தில் கூட கண்டுபிடிக்க முடியாது. காமெடி படத்தில் லாஜிக் பார்ப்பது கொலைக்குற்றத்தை விட கொடுமையானதுதான் என்பதால் விட்டுவிடலாம். ஃபேஸ்புக்

ஸ்டேட்டஸ்களைப்போன்ற புன்முறுவலிட வைக்கும் வசனங்கள் படம் முழுக்க விரவிக்கிடக்கின்றன. விமலின் வீட்டுக்கு வரும் பிந்துமாதவி.. உன்னைக் கொல்லத்தான் வர்றேன் என்று சொல்ல... விமல் ஆல்தி பெஸ்ட் சொல்லி கல்யாணம் ஆன பின்னால் எல்லா பொண்ணுங்களும் புருசனைக் கொல்லத்தாம்பா பார்க்கிறாங்க என்று சொல்லும்போது கூட்டம் சிரிக்கிறது. கைத்தட்டல் வேறு. மனைவியோடு படம் பார்க்கிறவர்கள் இந்த இடத்தில் சிரித்து வெக்காதீங்கப்பா.... தொலைஞ்சீங்க.

பாசம் விளைந்த மலர்

மறுவெளியீட்டில் சூப்பர் ஹிட் ஆன கர்ணனைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மற்ற படங்களையும் அதுபோல வெளியிடுவார்கள் என சிவாஜி ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதும் அதிசயம் நடந்துவிடவில்லை. இத்தனை மாதங்களுக்கு பிறகு இதோ இப்போது பாசமலர் படத்தை மிகச்சிறிய அளவில் மீண்டும் வெளியிட்டுள்ளார்கள்.

சென்னையிலேயே நான்கைந்து தியேட்டர்களில் இரண்டு காட்சி என்கிற அளவில்தான் திரையிடப்பட்டிருந்தது.

ரக்சாபந்தன் நாளொன்றில் சகோதரத்துவத்தை போற்றுவோம்யா என பாசமலர் ஓடிய தியேட்டர் ஒன்றில் முற்றுகையிட்டோம். கொடுமை! மொத்தமாக எண்ணி நான்கே நான்கு பேர்தான் துணையாக இருந்தனர். அதில் இரண்டுபேர் தங்களுடைய அறுபது வயதை கடந்த தாத்தாக்கள். மீதி இரண்டுபேர் இளம்ஜோடிகள். அவர்களோடு நாமும் இணைந்து ஐவரானோம்.

ஏற்கெனவே பலமுறை தொலைக்காட்சியில் பார்த்தபடம் தான் என்றாலும் பெரிய திரையில் பார்க்கும்போதுதான் சாவித்திரியும், சிவாஜிகணேசனும் எவ்வளவு நுணுக்கமாக நடித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் இருவருமே சமகால நடிப்போடு ஒப்பிடும்போது மிகைதான். உண்மையில் படத்தில் வெகுயதார்த்தமாக நடித்தது ஜெமினிகணேசன்தான், ஏனோ இப்படத்தில் அவருடைய பெயரையோ அவருடைய நடிப்பையோ யாரும் புகழ்ந்ததாக தெரியவில்லை. இல்லை யான் போன்ற சிறுவனுக்குத்தான் அது ஞாபகம் இல்லையோ?

கர்ணன் அளவுக்கு ஏன் இப்படம் ஓடவில்லை என்று யோசித்துப்பார்த்தால், இப்போதெல்லாம் அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட்டெல்லாம் காமெடிக்கான விஷயங்களாகி காலாவதியாகிவிட்டன. அதோடு பாசமலர் படத்தில் கர்ணனின் பிரமாண்டமும் ஹீரோயிசமும் மிஸ்ஸிங். அதுபோக இப்போதெல்லாம் நாயகர்களுக்கு குடும்பமே இருப்பதில்லை (உ-ம் மங்காத்தா, நான்ஈ!). அதுதான் லேட்டஸ்ட் ட்ரென்ட். அப்படியிருக்கவே இன்றைய இளைஞர்களும் விரும்புகிறார்களோ என்னவோ. இப்படி ஒரு காலத்தில் பாசமலரெல்லாம் மணக்குமா?

செப்டம்பர், 2013