திரைவலம்

இயக்குநர்களின் மாதம்!

காதம்பரி

மலையாளத்தில் வந்த ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' திரைப்படத்தின் ரீமேக்கான கூகுள் குட்டப்பா மே மாத ஆரம்பத்தில் வெளியானது. அந்தப் படத்தை வாங்கி, தானே தயாரித்து நடித்திருந்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இயக்குநர்கள் சபரி -சரவணன் இணை தமிழுக்கேற்ப சில மாற்றங்களோடு எழுதி, இயக்கியிருக்கிறார்கள்.

கிராமத்துப் ‘பெரிசு' கே.எஸ்.ரவிக்குமாரின் ‘ஹைஃபை' மகன் தர்ஷன். ரோபோடிக்ஸ் படித்த தன் மகன் தன்னுடன் கிராமத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிற அவருக்கு எதிர்மாறாக வேலை சம்பந்தமாக ஜெர்மனி செல்கிறார் தர்ஷன். இடையில் கே.எஸ்.ரவிக்குமாரின் உடல்நிலை சரியில்லாததால், தந்தையைப் பார்க்கவரும் தர்ஷன், ஒரு ரோபோவை தந்தையுடன் இருக்கவைத்துச் செல்கிறார். அதன்பிறகு ரோபோவுக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்குமிடையிலான மெக்கானிக்கல், பாச, விபரீதப் போராட்டங்கள்தான் கதை.

சுப்பிரமணியாக அச்சு அசலான நடிப்பைத் தந்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவரையிலான அவரது நடிப்புக் கரியரில் த பெஸ்ட் என்றே சொல்லலாம். தர்ஷனும் குறைவில்லாமல் செய்திருக்கிறார். மலையாள மூலத்தைப் பார்க்காதவர்களுக்கான படம் என்பதால் குறையொன்றுமில்லை. பார்த்தவர்கள் சில காட்சிகளின் திணிப்பை ரசிக்காமல் போகலாம். ஆனால் ரீமேக் என்ற பெயரில் பெரிதாக சொதப்பாமல், தன்னுடைய நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்திய கே.எஸ்.ரவிக்குமாருக்கு... செம சாரே!

அமேசான் ப்ரைமில் வெளியான சாணிக்காயிதம் இந்த மே மாதத்தில் பேசப்பட்ட இன்னொரு படம். ‘ராக்கி' படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியானது இந்தப் படம்.

சாதிய ஒடுக்குமுறையால் தன் கணவன், மகள் கொலை செய்யப்பட அதற்கு விரட்டி விரட்டிப் பழிவாங்கும் நாயகி என்ற ஒன்லைனரில் வன்முறை அதகளம் நிகழ்த்தியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். தங்கைக்கு உதவும் கதாபாத்திரத்தில் செல்வராகவன்.

இது இயக்குநர்கள் மாதம் என்பது போல, இதில் செல்வராகவனின் நடிப்பு. அநாயாசமாக நடித்துத் தள்ளியிருக்கிறார். பழிவாங்கும் படலத்தில் கண்கள், உடல்மொழி ஒவ்வொன்றிலும் பழியுணர்வு. அதேசமயம் தங்கை மகளுடனான உரையாடல்களில் பாசத்தை வெளிப்படுத்தியதிலும் மனிதர் பின்னிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ், சபாஷ் பெண்ணே! இறுகிய முகம், மனமெங்கும் பழிதீர்க்கும் வெறி என்று கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் வன்முறைகளை மட்டுமே வைத்துத்தான் படம் நகர்கிறது என்பதால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியானது டான். ‘ஜலபுல ஜங்கு' பாடல் கவனம் பெற்றாலும் அதன்பின், வேறு பாடல்களோ டிரைலரோ அவ்வளவாக பாஸிடிவாகப் பேசப்படவில்லை. படம் சுமாராகத்தான் இருக்குமென்று பேசப்பட்ட நிலையில் இரண்டு வாரங்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது டான்.

அப்பாவைப் புரிந்து கொள்ளாத ‘லாஸ்ட் பெஞ்ச்‘ மகன் என்ற புளித்த கான்செப்ட்தான். ஆனால் அதை, சரியாக கலவையான காட்சிகளோடு படமாக்கிய விதத்தில் ஜெயித்துவிட்டார் சிபி. ஸ்ட்ரிக்ட் டிசிப்ளின் ஹெட் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இன்னொரு சொல்லிக்கொள்ளும்படியான படம். மனிதர், ரகுவரனை ஆங்காங்கே நினைவுபடுத்துகிறார்.

அப்பாவாக சமுத்திரக்கனி. எம்டன் மகன் நாசரைப் பிரதியெடுத்த கதாபாத்திரம் என்றாலும் தன் நடிப்பில் வித்தியாசம் காட்டி மனதில் நிற்கிறார். இதுவரையில் பார்க்காத சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில்! காமெடி, ஃப்ரெண்ட்ஷிப், லாஸ்ட் பெஞ்ச் குறும்பு, காதல் என்று எல்லா நடிப்பிலும் செஞ்சுரி அடிப்பவர் சென்டிமெண்ட் நடிப்பில் கோல்ட் மெடலே வாங்கிவிட்டார்!

நெஞ்சுக்கு நீதி..! ஆர்ட்டிகிள் 15 என்ற இந்திப்படத்தின் ரீமேக். சாதியத்துக்குள் ஊறிப்போயிருக்கும் கிராமத்துக்கு மாற்றப்பட்டுகிறார் ஏ.எஸ்.பி. உதயநிதி. அந்த கிராமத்தில் மூன்று பெண்கள் காணாமல் போக, அதில் இருவர் பிணமாய்க் கிடைக்கிறார்கள். தொடரும் விசாரணைகளின் வழியே சாதிய அவலத்தை முகத்திலறைந்து சொல்லும் படம்தான் நெஞ்சுக்கு நீதி.

உதயநிதியின் நடிப்பில் இந்தப் படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, ஆரி, மயில்சாமி, ரமேஷ் திலக், அப்துல் லீ, சாயாஜி ஷிண்டே, சரவணன் என்று ஒவ்வொருவரின் கதாபாத்திரத் தேர்வும் அற்புதம். சுரேஷ் சக்கரவரத்தி, இளவரசு இருவருமே தங்கள் நடிப்பால் காட்சியை மெருகேற்றியிருக்கிறார்கள். இந்தியை, தமிழுக்கு மாற்றிய விதத்தில் தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலையும் சேர்த்தவிதத்திலும் கவனம் பெறுகிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

சிறு குறைகளைத் தாண்டி, இந்த நேரத்தின் தேவையாக வந்திருக்கும் இந்தப் படத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ஜூன், 2022