திரைவலம்

ஆச்சர்யப்படுத்திய அறிமுக இயக்குநர்!

காதம்பரி

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில், 'மரகதநாணயம்' புகழ் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஜூன் முதல்வாரத்தில் வெளியானது வீரன். வீரனூர் கிராமத்தில் மின்னல் தாக்கி, சூப்பர் பவர் ஒன்றை அடையும் நாயகன். சில வருடங்கள் கழித்து அந்த கிராமத்து சிறுதெய்வக் கோயிலை இடிக்க கார்ப்பரேட் ஒன்று முற்படும்போது அதைக் காக்கும் கதை.

சூப்பர்  ஹீரோ என்கிற கருவுக்கு ஸ்கிரிப்டில் நியாயம் சேர்த்திருக்கிறார் சரவணன். ஆதியின் நடிப்பும் காட்சியமைப்புகளுக்கும் லாஜிக்கை மீறி (சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்ல எதுக்குப்பா லாஜிக்கு!) படத்தோடு ஒன்ற வைக்கின்றன. சிறு சிறு கதாபாத்திர சித்தரிப்பும் அதில் நடித்தவர்களும் படத்துக்கு பலம். இன்னும் கொஞ்சம் 'வாவ்' காட்சிகள் இருந்திருந்தால் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருப்பான் வீரன்.

அடுத்த வாரத்தில் வெளியானது டக்கர். இதில் சித்தார்த், திவ்யான்ஷா நடிக்க கார்த்திக் ஜி கிருஷ் இயக்கியிருந்தார். கடத்தப்பட்ட நாயகியும் அவரைக் காப்பாற்றும் கால் டாக்ஸி ஓட்டும் நாயகனும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு பயணத்தின் ஈகோ மோதல்களும் அதையொட்டிய ஆக்‌ஷன்களுமே கதைக்களம்.

கொஞ்சம் நல்லாத்தான் இருக்குல்ல என்று நினைக்கும்போதே ஒட்டவே ஒட்டாத காட்சியமைப்பு-களும், சுவாரசியமற்ற திரைக்கதையும் படத்தை பின்னோக்கி இழுக்கின்றன. படத்தை கொஞ்சமாவது காப்பாற்றுவது சித்தார்த் நடிப்பும், ஆக்‌ஷன் கட்சிகளும்தான்.  ஸ்டண்ட் இயக்குநர் தினேஷ் காசிக்கு ஸ்பெஷல் நன்றி!  

ஜூனில் வெளியான இன்னொரு படம் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் பொம்மை. தாயின் இழப்பிலிருந்து நாயகனை மீட்கிறாள் அவனது பள்ளிப் பருவ தோழி. சில வருடங்களுக்குப் பிறகு இளைஞரான நாயகன் ஜவுளிக்கடைகளுக்கான ‘டம்மி' பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஓவியராகப் பணியில் சேர்கிறான். அங்கே வரும் பொம்மை ஒன்றில் நாயகியின் சாயலைக் கண்ட நாயகன், அதனோடே பேசி, அதனுடனேயே கற்பனையில் வாழ்கிறான். இதன் காரணமாக அவன் சந்திக்கும் சிக்கல்களும் அதிலிருந்து மீள்கிறானா என்பதுமே பொம்மை.

தன் வழக்கமான ‘ஃபீல் குட்' ஜானரிலிருந்து வேறுபட்டு ஃபேண்டஸி + க்ரைம் ஜானரை கையிலெடுத்துள்ளார் ராதா மோகன். ஆனால் ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர வேறெதிலும் பார்வையாளர் மனம் ஒன்றிப் பார்க்கும் வண்ணம் காட்சியமைப்புகள் இல்லை. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மட்டுமே பலம்.

சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகள் பலரும் நடித்திருந்த  ‘எறும்பு' இயக்குநர் சுரேஷ்.ஜியின் இயக்கத்தில் வெளியானது. ஒரு தங்க மோதிரம் தொலைந்துவிட அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கும் அக்கா - தம்பி, கடனை அடைக்கப் பாடுபடும் அப்பா என்ற எளிய ஆனால் வலிமையான கதை.

ஆனால், ஆர்ட் ஃபிலிம்களுக்கேயுரிய செயற்கை காட்சிகளும், வலிந்து திணிக்கப்பட்ட வசனங்களும் படத்தின் வேகத்துக்கு தொய்வையே தருகின்றது. குட்டீஸில் நடிப்பும் அவர்கள் வரும் காட்சிகளும் பரவாயில்லை. சார்லி உள்ளிட்ட அனைவரின் நடிப்பிலும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் ‘நடிக்கறேன்ப்பா' கொஞ்சம் ‘ஓவர் டோஸ்.'

ரோகிணி, பசுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் ஜூன் மாதம் வெளியான ‘தண்டட்டி' ‘அட!' சொல்ல வைத்தது. இறந்த அம்மாவின் தண்டட்டியை கைக்கொள்ள நினைக்கும் வாரிசுகளும் அதன் பின்னான களேபர காட்சிகளுமே படம். கொஞ்சம் நம்பகத்தன்மை குறைந்திருந்தாலும், படம் பார்க்கும்போது அவ்வளவாக குறையாகத் தெரியவில்லை. பசுபதி, ரோகிணி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பெரும் பலம். துக்க வீடு, ஒப்பாரி வைக்கும் பாட்டிகள், ‘குடி' மகன்கள் அலப்பறைகள் என்று கிராமத்து லூட்டிகள் படத்தை ரசிக்க வைக்கின்றன.

ஜூனின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ‘போர் தொழில்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அஷோக் செல்வன், சரத் நடிப்பில் (ஆமாம் சரத் மட்டும்தான் சொல்ல முடியும்.. முழுப்பெயர் சொல்ல மாட்டேன்!) வெளியானது போர் தொழில். ஆரம்பம் முதலே தொய்வின்றி நகரும் திரைக்கதையும் அதற்கேற்ற வசனங்களும் நடிகர்களின் தேர்வும் என்று ஒரு அறிமுக இயக்குநராக ஆச்சர்யப்படுத்தியிருந்தார் விக்னேஷ் ராஜா.

தொடர் கொலைகள், அவற்றைச் செய்யும் குற்றவாளியை புலன் விசாரணை செய்யும் சீனியர் - ஜூனியர் இணை. இந்த ஜானரில் பல படங்கள் வந்தாலும், இந்தப் படத்தை தங்கள் எழுத்தால் தனித்துவமாகத் தெரியவைத்திருக்கின்றனர் விக்னேஷ் ராஜா - ஆல்ஃப்ரட் பிரகாஷ். சினிமாவுக்கேயுரிய லாஜிக் மீறல்கள் சிலவற்றையும் கவனமாகக் கையாண்ட விதம் சிறப்பு! 

இம்மாதத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘மாமன்னன்.' இந்த இதழ் அச்சுக்குப் போக வேண்டி இருப்பதால் அதன் விமர்சனத்தை அடுத்த மாதம் பார்க்கலாம்.