திரைவலம்

அவ்வளவுதான் அதிரடி!

காதம்பரி

ஜூன் மாதத்தின் முதல்வாரத் திரைப்படம் காலா என்று ஆரம்பிக்கும்போதே மா.கா.பா ஆனந்த், லோவாய்ஸில் வந்து ‘ஏய்ய்ய்ய் காதம்பரி.. நானு?'' என்று மிரட்டுகிறார். அவரது பஞ்சுமிட்டாய் ஒன்றாம்தேதி ரிலீஸானது.

நிகிலா விமல், மா.கா.பா ஆனந்த் புதுமணத்தம்பதியர். சென்ராயனும், மா.கா.பா. ஆனந்தும் டிகிரி தோஸ்த் நண்பர்கள். புது ஜோடி, சென்றாயன் என்றாலே பயப்படும் அளவுக்கு அவரால் பிரச்னைகள். என்ன ஏதென்பதை காமெடியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மா.கா.பா நடிப்பில் நிறைய முன்னேற்றம். இரண்டு ஹிட் கொடுத்தால், எங்கெயோ போய்விடுவார்.  சென்ராயனுக்கும் ஆனந்துக்கு நண்பனாக, சொல்லிக்கொள்ளும்படியான வேடம். கதைக்கருவின் சுவாரஸ்யம், திரையில் முழுமையாகக் கடத்தப்படாதது மைனஸ்.

ஏழாம்தேதி அகில உலகெங்கும் ரிலீஸானது ரஞ்சித்தின் (அ) ரஜினியின் காலா. வாழும் நிலத்தைப் பிடுங்க நினைக்கும் BvUP சக்தியை எதிர்த்து தாராவி மக்கள் ஒன்று சேர்ந்து, காலா தலைமையில் போராடுகிறார்கள் என்கிற பழைய டெம்ப்ளேட்டை,  ஒரு பழைய காதல், அன்பைக் கொட்டும் அக்கறையான மனைவி, இரண்டு எதிரெதிர் துருவ மகன்கள் என்று கலகல கமர்ஷியல் பேக்கேஜில் கொடுத்திருக்கிறார் ரஞ்சித். ரஜினிக்கு வயதுக்கேற்ற வேடம். அவருக்கு இணையாக வந்து க்ளாப்ஸ் அள்ளிக்கொண்டு போகிறார், ஈஸ்வரி ராவ். ஹூமா குரேஷி, நாயகனின் முன்னாள் காதலி கண்ணம்மாவாக வந்து, ஒரு ஹிட் பாடலுக்கு லீடு கொடுக்கிறார்.

மாஸ் ஓபனிங், கமர்ஷியல் நாயகனை வைத்துக் கொண்டு சமகால அரசியலைச் சொல்வதெல்லாம் வேற லெவல் தில்லு. அதை கனகச்சிதமாகச் செய்திருக்கிறார் ரஞ்சித். ஆனால், நிஜத்தில் ரஜினியின் சில ஸ்டேட்மெண்டுகளால் படம் பிக்கப் ஆவதில் சிரமம் இருந்ததென்பதும் உண்மை.

அடுத்தவாரத்தில் விஜய் மில்டனின் கோலி சோடா 2. வாழ்வில் முன்னேறத்துடிக்கும் மூன்று இளைஞர்கள். அவர்களை முன்னேற விடாமல் துரத்தும் மூன்று வில்லன்கள். வில்லத்தனத்தை ஹீரோயிசம் ஒழிப்பதை தனது டிரேட்மார்க்கான க்ளீன் ஸ்கிரிப்ட்டில் சொல்லியிருக்கிறார் விஜய் மில்டன்.

நாயகர்களாக நடித்திருக்கும் பரத் சீனி, வினோத், இசக்கி பரத்தும் சரி, செம்பன் வினோத் ஜோஸ், ஷரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா, இவர்களும் சரி, சரியான பாத்திரத்தேர்வு. அதற்கு நேர்மையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் அனைவருமே. சமுத்திரக்கனியும் க்ளாஸ். இவர்களின் செம்பன் வினோத் ஜோஸ் அட்டகாசமான தேர்வு.

பரத் சீனி, வினோத், இசக்கி பரத் என்று மூன்று நாயகன்களும் ஆவேசத்திலும் ரொமான்ஸிலும் அசத்துகிறார்கள். சமுத்திரக்கனி வாழ்க்கையின் தத்துவங்களைப் பிட்டுப்பிட்டு வைக்கும் வழக்கமான கேரக்டர். கலக்கியிருக்கிறார். ஆனால் பணத்தையும் உடைமைகளையும் எடுத்துக்கொண்டு ஓடுவதைத் தவிர, வேறு எதற்கும் அவர் ஃபார்மசியைத் திறக்காதது ஏன் என்று தெரியவில்லை. கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக ஏதோ அதிரடி செய்யப்போகிறார் என்று நினைத்தால், முதல் காட்சியில் தாடியுடன் வந்து, கடைசிக் காட்சியில் மழித்த முகத்துடன் தோன்றுகிறார். அவ்ளோதான் அதிரடி ஷரவண சுப்பையாவும், சாதிச்சங்கத் தலைவர் சீமைராஜாவாக வரும் ஸ்டன்ட் சிவாவும் அசத்தல் வில்லன்கள். ரவுடியாக மலையாள இயக்குநர் செம்பன் வினோத் ஜோஸ் அட்டகாசமான தமிழ் வரவு. ரோகினி வரைந்து காட்டும் சித்திரக்கதை... ஹைகூ! சுபிக்ஷா,  கிரிஷா குரூப், ரக்ஷிதா என மூன்று ஹீரோயின்களில் துறுதுறுப்பாய் சுபிக்ஷா மனதில் அழுத்தமாய்ப் பதிகிறார்.   

அடுத்தவாரத்தில் டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி என இரண்டு படங்கள் போட்டி போட்டன.

பூமியைத் தாக்க வரும் விண்கல்லை இரண்டாக உடைக்க, 200 டன் எடையுள்ள மிசைல் தேவைப்படுகிறது. அது சைனாவிடன், விண்வெளியில் இருக்கிறது. அதைத் திறக்க, மேஜிக்மேன் + எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் ஜெயம் ரவி போகிறார். ஜெயிக்கிறார்.

சொன்னால் நம்பவே முடியாத கதையை, பார்த்தாலும் நம்ப முடியலையே என்கிற விதத்தில் எடுத்திருக்கிறார்கள். ஜெயம்ரவி, அவரது பாத்திரம் கேட்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார். மகனுக்கான பாசக்காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜுக்கோ, மற்ற எவருக்குமோ பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை. கிட்டத்தட்ட ஹாலிவுட் படங்களின் ஸ்பூஃப் போல இருந்தது என்பதே உண்மை.

டிராபிக் ராமசாமி பயோ பிக். அதுவும் பய - பிக்காக பயமுறுத்தியது. ஒரு பயோபிக் எடுப்பதில் பாலிவுட்டெல்லாம் நாலுகால் பாய்ச்சலில் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப்படம் எல்கேஜி லெவல்கூட இல்லையோ என்று நினைக்க வைக்கிற அளவு அமெச்சூராக இருந்தது.

நமக்கெல்லாம் தெரிந்த, அநீதிகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிற மனிதனின் கதைதான். ஆனால் எதார்த்தமோ, அழுத்தமோ இல்லாத காட்சிகள், காமெடியா சீரியஸா என்று குழப்புகிற வசனங்கள் என்று குறைகள் நிறைந்த படமாக அமைந்தது பெரிய வருத்தம். 

ஜூலை, 2018.