செய்திச்சாரல்

முடியால் முடியும்!

Staff Writer

தலை முடி கொட்டுதே என வருத்தப்படாத மகளிரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு கொத்துக்கொத்தாக தலைமுடியை சீவிப் பார்த்து உதிரும் முடியைக் கண்டு வருத்தப்படுவார்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க தலைமுடியை செயற்கையான முறையில் நீளமாகக் காட்டும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களைத் தயாரித்து விற்கத் தொடங்கி, மூன்றே ஆண்டுகளில் 27 கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள். ரிச்சா, ரைனா ஆகிய இவர்கள் இணைந்து உருவாக்கியது 1ஹேர் ஸ்டாப் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம். அதன் மூலமாக பெண்களின் தலைமுடியை நீளமாக்க, அல்லது விரும்பிய ஸ்டைலில் காண்பிக்க உதவும் தலைமுடி அழகுப் பொருட்களை விற்க ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் ஒன்று இரண்டு என ஆர்டர்கள் கிடைத்து, இப்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்தையும் தாண்டிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவர்களின் தந்தை முடியை சேகரித்து விற்கும் தொழிலில் இருக்கிறார். எனவே இந்த சகோதரிகளும் அதே துறையில் புதிதாக யோசித்துக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.! ‘தலைமுடி கொட்டிவிட்டால் தங்கள் சுய நம்பிக்கையை பெண்கள் இழக்கிறார்கள். அவர்களுக்காக உருவானதுதான் இந்த நிறுவனம்' என்கிறார் ரிச்சா. முடிதானே என்று யாரும் இனி சொல்லக்கூடாது!... மிகப் பிரமாதமான சந்தை வாய்ப்பு என்று சொல்லவேண்டும்!

குழந்தையிடம் மன்னிப்பு

 அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் 2022 மார்ச் மாதம் நடந்த சம்பவம் இது. அங்கு ஜிம்னாஸ்டிக் போட்டி முடிந்து சிறுமிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி. குழந்தைகள் வரிசையாக நிற்கிறார்கள். அதில் கறுப்பு நிற குழந்தை ஒன்றுக்கு மட்டும் பரிசு வழங்கப்படவில்லை. இந்த காணொலி வெளியாகி பலரையும் இனவாதத்துக்கு எதிராகப் பேச வைத்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜிம்னாஸ் டிக்ஸ் வீராங்கனை சிமோன் பில்ஸ்,' இந்த காணொலி என் இதயத்தை நொறுங்கச் செய்தது. விளையாட்டில் இனவாதத்துக்கு இடம்  இல்லை' என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது அயர்லாந்தின் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் பகிரங்கமாக இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இது பற்றி பெற்றோரின் புகாரின் பேரில் விசாரித்து பின்னர் மன்னிப்புக் கோரும் கடிதத்தை வழங்கியதுடன் பகிரங்கமாக இது பற்றி அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். இது தாமதம் தான் என்றாலும்  இனியாவது செய்யமாட்டார்கள் என நம்பலாம்!

ரயிலிலே ஆட்டம் போட்டால்..

 லண்டனுக்கு மலேசியாவில் இருந்து படிக்கச் சென்ற பெண் சபரினா பாஸுன். இவர் செய்தவேலையைப் பார்த்தீர்களா? தினமும் இரவில் வீட்டுக்கு ரயிலில் திரும்பும்போது ஒரு பாட்டைப் போட்டு ரயிலிலேயே ஆடி டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றினார். டிக்டாக்கில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு இந்த ஆட்டம் ரசிக்கப்பட்டது. பொதுப்போக்குவரத்தில் கூட இருப்பவர்களைப் பற்றி கவலையே படாமல் தன்னம்பிக்கையுடன் இவர் செய்த வீடியோக்கள் பெரும் புகழை ஈட்டியுள்ளன. பல பொருட்களுக்கு பிராண்டிங் செய்ய அழைக்கிறார்கள். ஆகவே இனி ராத்திரி வீட்டுக்குப் போகும்போது பக்கத்து சீட் பெண், ஆட்டம்போட்டு வீடியோ எடுத்தால் கவலைப்படாதீர்கள்! அவர் இந்த லண்டன் பெண்ணைக் காப்பி அடிக்கிறார் என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.

புலியான பூனை!

 ரஷ்யாவில் சாலையோரமாக ஒரு கறுப்புப் பூனைக்குட்டி கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற பெண் ஒருவர் அதை எடுத்துவந்து வளர்த்துள்ளார். அதுவும் அவரது செல்ல நாயும் நன்றாகப் பழகி உள்ளன. அந்த குட்டியும் இவருடன் நன்றாக விளையாடி வளர்ந்தது. வளர வளரத்தான் அது பூனை இல்லை கருஞ்சிறுத்தை என்று அவருக்குத் தெரிய வந்தது. அக்குட்டியை எடுத்ததிலிருந்து அது வளர்ந்து பெரிதாக ஆகி நாயுடன் விளையாடிக் கொண்டு இருப்பது வரையிலான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி, லட்சக்கணக்கான பேரால் ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டுள்ளது! ஒரு பூனை புலியாக வருதே...