செய்திச்சாரல்

பொன் வைக்கும் இடம்!

Staff Writer

தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ஐம்பதாயிரத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவதால், தங்கத்தில் முதலீடு செய்வது சரியென நினைத்து அதன் தேவை அதிகரிப்பதால் இந்த ஏற்றம் நிலவுகிறது. நவம்பர் 22-இல் இருந்ததை விட 8 சதவீதம் விலை அதிகரிப்பு உள்ளது! விலை அதிகரிப்பு இந்தியப் பெற்றோரில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். முதலீட்டாளர்களுக்கு வழக்கம்போல் கொண்டாட்டம்தான்!

விற்பனையை கூட்டிட்டாங்களாம்!

2023- ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆணுறைகள் விற்பனை அதிகரித்துள்ளதாம். 2022-இல் 7 சதவீத அளவுக்கு இருந்த வளர்ச்சி, கடந்த ஆண்டு 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. என்னய்யா கற்புக்கு வந்த சோதனை என நினைக்கவேண்டாம். கொரோனாவில் ஆணும் பெண்ணுமாக வீட்டில் இருந்தபோதுகூட இந்த விற்பனை உயர்வு நிகழவில்லை. பொதுவாக ஆணுறைகள் வாங்குவதில் இருக்கும் தயக்கத்தை ஆன் லைன் விற்பனை முறைகள் தவிர்த்து இருக்கின்றன என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் ஆணுறைகளைப் பயன்படுத்துவது பலருக்குப் பிடிக்காமல் இருந்தது. இப்போது அவற்றில் பல புதிய ரகங்கள் வந்திருப்பது ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் கவர்ந்திருப்பதாக விற்பனை நிறுவனத்தினர் சொல்கின்றனர். எப்படியெல்லாம் கல்லா கட்டுறாங்க பாருங்க!

என்ன காரணமா இருக்கும்?

இந்த வரிசைப்பட்டியலில் பாகிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்குக் கீழாக இந்தியா இருக்கிறது. என்ன பட்டியல்? உலகில் சந்தோஷமாக இருக்கும் நாடுகளைப் பட்டியலிட்டதில்தான் இந்த நிலை. மொத்தம் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 126 வது இடம். கடந்த ஏழு ஆண்டுகளாக முதல் இடத்தில் இருப்பது பின்லாந்து. டென்மார்க், இஸ்ரேல்,ஐஸ்லாந்து, ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன. என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்கணும்னு அவங்க அலையமாட்டாங்களோ?

தாத்தா கொடுத்த பரிசு!

அந்த குழந்தை பிறந்து நான்கு மாதம்தான் ஆகிறது. அதன் தாத்தா அதற்கு 240 கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனி பங்குகளை அளித்துள்ளார். இதன்மூலம் பேரன் எகாகிரா ரோஹன்மூர்த்தி இந்தியாவின் இளம் வயது கோடீசுவரர் ஆகி உள்ளார். அந்தத் தாத்தா பெயர் நாராயணமூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர். எப்படி இருக்கு பாத்தீங்களா? பிறந்தால் இப்படிப்பட்ட தாத்தாவுக்குப் பேரனாகப் பிறக்கவேண்டும் என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? சமீபத்தில்தான் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்!