கௌதம் சிங்கானியா 
செய்திச்சாரல்

ஒரு விவாகரத்து செட்டில்மெண்ட்

Staff Writer

ரேமண்ட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 12 சதவிகிதம் விழுந்திருக்கிறது.  விரைவில் 100 ஆண்டுகளைத் தொடப்போகும் அந்த நிறுவனத்துக்கு என்னவாச்சு?  அப்படி ஒன்றும் பொருளாதாரப் பிரச்னை ஏதும் இல்லை. ஒரு செண்டிமெண்ட் பஞ்சாயத்துதான். அதன்  உரிமையாளர் கௌதம் சிங்கானியா தன் மனைவியை விவாகரத்து செய்கிறார் அவ்வளவுதான். ரேமண்ட் ஆடைகளை விரும்பி அணியும் மக்களுக்கு அதன் பங்குகளை வைத்திருக்கும் விருப்பம் இதனால் குறைந்துவிட்டது. அத்துடன் இந்த தம்பதியின் விவாகரத்துக்கு  என்ன காரணம் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். 

சிங்கானியாவின் மனைவி நவாஸ் மோடி, விவாகரத்து செட்டில்மெண்டாக  நிறுவனத்தில் 75 சதவீதம் தரவேண்டும் எனக் கோருகிறாராம். அதுவே 11000 கோடி வரும்! 28 ஆண்டுகளாக சேர்ந்துவாழ்ந்து இரு பெண்களைப் பெற்றவர்கள், மனமுவந்து பிரிய முன்வந்திருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கும் மீடியாவுக்கும் எப்படியாவது வாயை மெல்ல அவல் வேண்டும் அவ்வளவே.

கோலி 50!

‘இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உன்னை நான் முதன்முதலாக சந்தித்தபோது, மற்ற வீரர்கள் உன்னை என் காலைத் தொடச்சொல்லி ஏமாற்றி இருந்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. விரைவில் நீ உன் திறமையாலும்  ஆழ்ந்த விருப்பத்தாலும் என் இதயத்தைத் தொட்டாய். ஓர் இளம் சிறுவன் வீர ஆட்டக்காரனாக வளர்ந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ஓர் இந்தியர் என் சாதனையை முறியடித்தது எனக்கு மகிழ்ச்சியே. அதுவும் உலகக்கோப்பை அரையிறுதி போன்ற பெரிய நிகழ்வில், என் சொந்த மைதானத்தில் நடந்திருப்பது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.'

- விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை முறியடித்து 50 சதங்களை எட்டியபோது சச்சின் எக்ஸ் தளத்தில்பகிர்ந்தது இது.

இதைத்தொடர்ந்து சச்சினுக்கு பெரிய மனது இல்லை. கோலி தன் காலில் விழுந்ததை சுட்டிக் காட்டுகிறார் என்றெல்லாம் ஏகப்பட்டபேர் எழுதித்தள்ளினார்கள். சாதனைகள் தகர்க்கப்படும் என்பதை பலசாதனைகளை ஏற்கெனவே தகர்த்திருக்கும் சச்சின் உணர்ந்திருக்க மாட்டாரா என்ன? அத்துடன் சச்சினை கடவுளாக நினைக்கும் ஒருவன் அதை முறியடித்ததில் அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்பட்டிருக்கும். என்ன சொல்றீங்க?

முதல்வருக்கு எதிர்ப்பு

 தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்  கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க அவரது கட்சி மக்களைச் சந்திக்கிறது. இந்த முறை அவரது கட்சி ஜெயிக்குமா என பெரும் விவாதம் நடக்கும் நிலையில் ஒரு வினோதத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். அவரது தொகுதியில் 154 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  இதில் ஒரு சிலரைத் தவிர மீதி அனைவருக்கும் வெற்றி பெற மாட்டோம் எனத் தெரியும். இருந்தும் போட்டியிடுகிறார்கள். ஏனெனில் இவர்கள் சந்திரசேகர ராவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டவே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இதில் பலரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில்  ஷங்கர் ஹில்ஸ் என்ற இடத்தில் இருந்த தங்கள் இடம் பறிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லியே இங்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ராவ் அரசின் தரணி என்கிற நில நிர்வாக இணையதளத்தின் குளறுபடியால் இது நடந்துள்ளாகக் குற்றம் சாட்டுகின்றனர். ராவ் தொகுதியிலேயே இவ்வளவு சிக்கல் !

அரசியலில் போஜ்பூரி நடிகை

 போஜ்பூரி மொழியின் பிரபல நடிகை அக்‌ஷாரா சிங், அரசியலில் குதித்துள் ளார். பீகாரில் ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் அரசியல் இயக்கம் ஆரம்பித்து நடத்திவருகிறார். தற்போது பீகாரில் அவர் பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். இவரது கட்சியில்தான் அக்‌ஷாரா இணைந்துள்ளார். அத்துடன் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் ஆனால்  வளர்ச்சி அடைந்த பீகாரைக் காண ஆவல் உள்ளதாகவும் பிரஷாந்த் கிஷோரின் கட்சி மாறு பட்டதாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அப்படிப் போடுங்க!