கேரளத்தில் நேற்று 29.12.2009 ஹர்த்தால். பாரதீய ஜனதா கட்சியின் தொழிலாளர் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம் முழுவேலை நிறுத்தத்துக்கும் கடையடைப்புக்கும் மிரட்டல் - மன்னிக்கவும், அழைப்பு விடுத்திருந்தது. வேலை நிறுத்தங்களுக்கும் கடையடைப்புக்கும் உயர் நீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.அதை எந்த அரசியல் கட்சியும் எந்த
அமைப்பும் சட்டை பண்ணுவதில்லை. நேற்றைய வேலை நிறுத்தத்தினால் பொது மக்களுக்குத்தான் தொந்தரவு. இழப்பு எல்லாம். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு இதன் மூலம் ஒரு பாதிப்பும் இல்லை.
மாநிலம் முழுவதும் ரயில் போக்குவரத்துத் தவிர, பிற வாகனங்கள் ஓடுவதை ஹர்த்தால் ஆதரவாளர்கள் தடை செய்திருந்தார்கள். கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் வழக்கமாக நடைபெறும் படகுப் போக்குவரத்தும்
நிறுத்தப்பட்டிருந்தது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகப் படகுகளை இயக்க முயன்ற ஊழியர்களை பி.எம்.எஸ்.காரர்கள் தாக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு படகு வீட்டுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. அது ஒரு முதலமைச்சரின் குடும்பம் தங்கியிருந்த படகு இல்லம். ஹர்த்தால் தினத்தன்று காலை
கொச்சி விமானநிலையத்தில் வந்திருறங்கிய முதல்வரின் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் தரைவழி, தண்ணீர் வழிப் பயணங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரும் மனைவி மக்கள் சகிதம் ஆலப்புழை வேம்பநாட்டுக் காயலில் படகு வீட்டில் உல்லாசப் பயணம் மேற்கொண்டார். இதெல்லாம் சகஜம் என்று யோசிக்காமல் விட்டுவிடப் பார்த்தால் சில தகவல்கள் கவனத்துக்கு வந்து எரிச்சலை உண்டு பண்ணுகின்றன.
உல்லாசப் பயணம் செய்த முதல்வர் பெயர் - சிவராஜ் சிங் சௌகான். ஆளும் மாநிலம் - மத்தியப் பிரதேசம்.அவர் சார்ந்திருக்கும் கட்சி - பி.ஜே.பி.
இந்தத் தகவல்கள் எரிச்சலை உண்டு பண்ணுமா? பண்ணாதா?
கொல்லம் அருகிலுள்ள சாஸ்தாங்கோட்டை தர்ம சாஸ்தா ஆலயத்தில் 'சாயிப்'புக்கு (சாயிப்பு என்ற மலையாளப்
பிரயோகத்துக்கு இணையான தமிழ்ச் சொல் 'துரை'. முதலாவது மலையாள மொழி அகராதியைத் தொகுத்தவர் -ஹெர்மன் குண்டர்ட். அதாவது குண்டர்ட் சாயிப்பு. அதாவது குண்டர்ட் துரை) நடந்த இறுதி சடங்கில் பெருவாரியானபக்தர்கள் கலந்து கொண்டார்கள். ஈஸ்வர விசுவாசியல்லாத அமைச்சர் பிரேமசந்திரனும் கலந்து கொண்டார். தேவஸ்தானத் தரப்பு மரியாதைகளுடனும் சடங்குகளுடனும் சாயிப்பை அடக்கம் செய்தார்கள்.
சாயிப்புக்கு அப்படிப் பெயர் வரக் காரணம் அவருடைய ரோமங்கள் செம்பட்டையாக வெள்ளைக்காரர்களைப் போல இருந்ததுதான். ஆலயத்திலுள்ள சக ஊழியர்கள்தான் அந்தப் பெயரைச் சூட்டியவர்கள். சாகும்போது சாயிப்புக்கு நாற்பது வயதிருக்கும். கோவிலில் சாய்ப்புவின் அதிகாரம் தான். அவரைப் போன்ற மற்றவர்கள் மோதிக் கொள்ளும்
போதெல்லாம் சாய்ப்புதான் முன் நின்று இரண்டு போட்டு சமரசம் செய்து வைப்பார். அதனால் ஆலயத்தில் நடைபெறும் அன்னதான விழாக்களில் அவருக்குத் தான் முதல் பந்தி. அவர் சாப்பிட்டு எழுந்த பின்னர்தான் மற்றவர்களுக்கு உணவு வழங்கப்படும். பொதுவாகவே தீராத விளையாட்டுப் பிள்ளைகள் என்றும் தொல்லைப் பிசாசுகள் என்றும் சொல்லப்
படும் சாய்ப்பின் இனத்தவர்கள் இந்தக் கோவிலில் சமாதானப் பிரியர்கள். வெளியே கடைத்தெருவில் திரியும் சக இனத்தவர்களுடன் நடந்த சண்டைதான் சாய்ப்பின் மரணத்துக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. நிபுணர்களின் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த திங்கள் அன்று சாயிப்பு மரணடைந்தார். அன்று ஆலயத்தில் வழிபாடுகள் நிறுத்தி
வைக்கப்பட்டன.
தர்மசாஸ்தா ஆலய வளாகத்தில் திரியும் எண்ணற்ற குரங்குகளில் ஒன்று தான் சாய்ப்பு என்பதை சாஸ்தாங் கோட்டைக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
திருவனந்தபுரம் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் ஆண்டு வைபவம் இனிதே நடந்து முடிந்தது. விழாவையொட்டி மலையாளத்தில் சிறந்த பத்து புத்தகங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. அதில் ஒரு நூல் இந்தப் பத்தியில் முன்பே குறிப்பிடப்பட்டிருந்த சிஸ்டர் ஜெஸ்மியின் 'ஆமென்'. இந்த நூல் இதுவரை 25 ஆயிரம் படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. சென்ற ஆண்டு வெளியான மலையாள புத்தகங்களில் அதிக விற்பனையானது 'ஆமென்'தான்.இந்த ஆண்டு அந்த இடத்தை இன்னொரு பெண்மணியின் நூல் பிடிக்கும் என்று தோன்றுகிறது. தயாபாயி எழுதிய 'பச்சை விரல்' என்ற தன் வரலாற்று நூல் அடுத்த ஆண்டின் அதிக விற்பனை நூலாக இருக்கலாம்.
தயாபாயி என்று மத்தியப் பிரதேசத்திலுள்ள கோண்டு இனப் பழங்குடிகளால் அன்புடன் அழைக்கப்படும் சமூக சேவகரின் கதை இது.கேரளத்தில் பிறந்து படித்து கன்னியர் மடத்தில் சேர்ந்த மேரி துறவிப் பட்டம் பெறுவதற்கு
ஓராண்டுக்கு முன்பே மடத்தைத் துறந்து வெளியேறினார். கிறிஸ்து சொல்லும் மக்கள் சாப்பாட்டு மேஜையில் சகல விதமான பதார்த்தங்களையும் பரப்பி வைத்துப் பிரார்த்தனை செய்து விழுங்குவதல்ல; பட்டினி கிடப்பவர்களின்
பசியைத் தீர்க்க ஒரு பருக்கை அன்னத்தை உண்டாக்குவது என்று நம்பி வெளியேறினார். ஆதரவற்றவர்களுக்காக அலைந்து நடந்தார். சேரிகளில் குடியிருந்தார். உயர் கல்வி கற்றிருந்தும் அதன் மூலம் சுக சௌகரியங்கள் தேடாமல் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி பெறப் போராடினார். தயா பாயி ஆனார். இந்தப் புத்தகம் தான் இப்போதைய விருப்பம்.
சென்ற ஆண்டு அதிகம் விற்பனையானதும் அதிகம் வாசிக்கப்பட்டதுமான இன்னொரு புத்தகம் டி.டி.ராமகிருஷ்ணன் எழுதிய '·பிரான்சிஸ் இட்டிக்கோரா' என்ற நாவல். ராமகிருஷ்ணன் தமிழ் வாசகர்களுக்கும் அறிமுகமானவர்தான்.அவருடைய முதல் நாவல் 'ஆல்·பா' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் எழுதும் முக்கியமான
எழுத்தாளர்களின் நேர்காணல்களை மலையாளத்தில் செய்திருப்பவர். சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை சுடச் சுட மொழிபெயர்த்து மலையாள இலக்கியத்தை வளப்படுத்தியவர். 'இட்டிக்கோரா' நாவல் இதுவரை இரண்டாயிரம் படிகள் விற்பனையாகியுள்ளது. 'ஆகா பிரமாதம். புதுமை' என்று புத்தக மதிப்புரைகள் சொல்லும்போது விமர்சகர்
வைக்கம் முரளியின் அபிப்பிராயம் வேறாக இருக்கிறது. 'மிகவும் போலித்தனமான அறிவுஜீவித்தனமான நாவல்.காசுக்கும் நேரத்துக்கும் விரயம்' என்கிறார்.
சரி, தமிழ் வாசகர்கள் சென்ற ஆண்டில் வாசித்தது என்ன? புத்தாண்டில் வாசிக்கப் போவது என்ன?
(இன்னும்...)
டிசம்பர் 31, 2009