தொடர்கள்

விஞ்ஞானத்த வளர்க்கப் போறேண்டி... படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

தொடர்- 13

பாமரன்

”விக்ரம்…. விக்ரம்…

நான் வெற்றி பெற்றவன்…

இமயம் தொட்டுவிட்டவன்…

பகையை முட்டி விட்டவன்….

என் வீரமே வாகையே சூடும்”

என்று சந்திரயான் 2 வில் இருந்து நிலவில் தரையிறங்கிய ”விக்ரம் லேண்டர்” 400 மீட்டர் தொலைவில் இருந்தபோது காணாமல் போனதும்…. பிற்பாடு அது நொறுங்கி விட்டதாக வந்த தகவல்களும்… அதன் உடைந்த பகுதிகளை ”இஸ்ரோ”வும் ”நாசா”வும் தேடி வந்ததும்… ஊரறிந்த சேதிகள்.

ஆனால் நாசாவும் இஸ்ரோவும் வலைவீசித் தேடிவந்த ”விக்ரம்” எவர் கண்ணுக்கும் தட்டுப்படவில்லை. நம்ம கமலின் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளைப் போலவே.

விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வந்த நிலையில் கடந்த வாரம் விக்ரமின் உடைந்த பாகங்கள் நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ”நாசா” தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது முக்கிய செய்தி.

ஆனால்…. நாசா ஆராய்ச்சி நிலையமே அப்படி இதைக் கண்டுபிடிப்பதற்கு பேருதவியாக ”சண்முகம் சுப்பிரமணியம்” என்கிற தமிழ்நாட்டு இளைஞர்தான் காரணமாக இருந்திருக்கிறார் என்பதுதான் அதிமுக்கிய செய்தி.

இத்தனைக்கும் அவர் விண்வெளி ஆராய்ச்சியாளரோ அல்லது இஸ்ரோவிலோ, நாசாவிலோ பணியாற்றும் விஞ்ஞானியோ எல்லாம் கிடையாது. திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து, சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் ஒரு பொறியியலாளர்.

தன் வேலை நேரம் போக கணிணித் துறையில் தனக்கிருக்கும் அறிவைக் கொண்டு தொலைந்துபோன விக்ரம் லேண்டரின் உதிரிப்பாகங்களை தனது லேப்டாப்களில் உள்ள சில அப்ளிகேஷன்களின் துணையோடு தேடி வந்திருக்கிறார். இதற்கென பலமணி நேரங்கள் ஒதுக்கி சல்லடையாய் சலித்துப் பார்த்து தேடியதில் அகப்பட்டதுதான் உடைந்த விக்ரமின் உதிரிப்பாகங்கள்.

உடனே இதனை இந்தியாவின் இஸ்ரோவுக்கும் அமெரிக்காவின் நாசாவுக்கும் தகவல் அனுப்ப…. விழித்துக் கொண்ட ”நாசா” சண்முகம் சுப்ரமணியம் அனுப்பிய கூடுதல் தகவல்களோடு தனது முயற்சியை முடுக்கி விட… அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன விக்ரமின் உடைந்த பாகங்கள்.

இந்த இளைஞனின் முயற்சியைப் பாராட்டி விஞ்ஞானி ஜான்கெல்லர் “உங்களது தகவல்களைக் கொண்டுதான் எங்களது கூடுதல் ஆராய்ச்சினைத் தொடர்ந்தோம். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்புலமாக இருந்தது உங்களது கண்டுபிடிப்புதான். அதற்கான அங்கீகாரத்தை ”நாசா”வினது ஆராய்ச்சிப் பக்கங்களிலும் குறிப்பிட்டிருக்கிறோம்.” என மின்னஞ்சல் செய்திருக்கிறார்.

அத்தோடு ”தங்களது கண்டுபிடிப்பினை ஆராய்வதற்காக கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்பட்டமையால் தங்களைத் தொடர்பு கொள்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பினைக் கோருகிறேன்.”என்று தாமதமான பதிலுக்கு மன்னிப்பும் கோரி மெயில் செய்திருக்கிறார் ஜான் கெல்லர்.

சண்முகம் சுப்ரமணியத்தின் கண்டுபிடிப்பு பற்றியும்… அதுகுறித்து “நாசா”வின் அறிவிப்பு பற்றியும் கேட்டதற்கு “எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை” என்றிருக்கிறார் நம்மூர் ”இஸ்ரோ” சிவன். என்னே பொறுப்பான பதில்…

நல்லவேளையாக அந்த இளைஞர் தனது கண்டுபிடிப்பை ரெண்டுபக்கமும் அனுப்பினார்.

இல்லாவிட்டால்…

பிரான்ஸ் போர் விமானத்துக்கு எலுமிச்சம் பழம் வைத்த மாதிரி…

சண்முகத்தின் லேப்டாப்புக்கு மேல் சிதறு தேங்காய் போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள்.

யார் கண்டது ?

**********

பத்தமான அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அதுதான் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள திருநங்கைகள் குறித்தான அரசாணை. பல்லாண்டு காலமாய் பல்வேறு இழிசொற்களுக்கும் வசைச் சொற்களுக்கும் ஆளாகி வந்த அந்த மக்கள் ஓரளவுக்காவது கண்ணியத்துடன் பார்க்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இப்பெயரும் ஒரு காரணம்.

ஆனால் இப்போது திருநங்கைகள் என்பதற்கு பதிலாக ”மூன்றாம் பாலினத்தவர்” என்றுதான் அவர்களைக் குறிப்பிடப் படவேண்டும் என அர்த்தமற்ற ஆணையினைப் பிறப்பித்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு.

முன்னர் எத்தனையெத்தனையோ தரக்குறைவான வார்த்தைகளால் விளிக்கப்பட்ட அம்மக்கள் தொண்ணூறுகளின் மத்தியப் பகுதியில் ”அரவாணிகள்” என அடையாளப்படுத்தப்பட்டனர்.

அதற்கு முன்னர் மதிகெட்டவர்களால் அழைக்கப்பட்ட ”அலிகள்” என்கிற வார்த்தைக்கு விடைகொடுக்கப்பட்டு “அரவாணிகள்” என்கிற வார்த்தை புழக்கத்திற்கு வந்தது.

இந்தத் திருநங்கைகள் சமூகத்தின் தனிச்சிறப்பே ஆண்களைப் போலவோ பெண்களைப் போலவோ அவர்களை எந்தவொரு சாதிக்குள்ளோ…. எந்தவொரு மதத்திற்குள்ளோ, இனத்துக்குள்ளோ அடக்கிவிட முடியாது. அவ்வளவு ஏன் நாட்டின் எல்லைக்கோடுகள்கூட அவர்களைப் பிரித்துவிட முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை.

இப்படி பல்வேறு கலாச்சாரங்களையும் பன்முகத்தன்மையையும் உள்ளடக்கிய அவர்களை இந்துமதச் சொல்லாடலுக்குள் அடங்கும் புராணக்கதை ஒன்றினது கதாபாத்திரத்தின் பெயரால் “அரவாணி” என்றழைப்பது எப்படி பொருத்தப்பாடு உடையதாக இருக்கும்? இத்தகைய கேள்விகள் அம்மக்கள் மத்தியிலும் நம்மைப் போன்ற தோழமை சக்திகள் மத்தியிலும் 2000 த்தின் மத்திய காலகட்டத்தில் எழுந்தது.  

1996-97 காலகட்டத்திலேயே வெகுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்த தோழி நர்த்தகி நடராஜ் தன்னைத் திருநங்கை என்றே அடையாளப்படுத்தினார்.

என் நேசத்திற்குரிய தோழி கல்கி சுப்ரமணியம் தான் நடத்திவந்த “சகோதரி” பத்திரிக்கையில் ”அரவாணி” குறித்த கேள்வியை எழுப்பி அதனை விவாதத்திற்கு உட்படுத்தினார்.

அக்காலகட்டத்தில் இச்சமுதாய மக்களுக்கு பக்கபலமாய் நின்ற அக்கா ஆஷா பாரதியும், இப்பணிகளில் தொடர்ந்து பங்காற்றி வருகிற தோழி பிரியா பாபுவும் பல்வேறு திசைகளில் இச்சொல்லைச் சுமந்து சென்றதன் விளைவே ”அரவாணி” இன்று உருமாறி ”திருநங்கையாய்” வந்து நிற்கிற வரலாறு.

அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டது கலைஞரது ஆட்சியில்தான் என்பதையும் நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

இத்தகையதொரு நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட பெயருக்குத்தான் இன்றைக்கு வந்திருக்கிறது ஆப்பு. அதுவும் அரசாணை வடிவத்தில்.

அறிவார்ந்து செயல்படக்கூடிய எவரும் அப்பெயர் எவர் காலத்தில் வந்தது…? என்பதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க மாட்டார்கள். எக்காலத்தில் நடைமுறை படுத்தப்பட்டாலும் அப்பெயர் பொருத்தப்பாடு உடைய பெயர்தானா? இதுகாறும் இருந்துவந்த இழிவை நீக்கக்கூடிய பெயர்தானா என்பதைப் பற்றித்தான் சிந்திப்பார்கள்.

இவையெல்லாவற்றையும் விட….

ஒன்று… இரண்டு… மூன்று… என்று மனித இனத்தைக் கூறு போட நமக்கென்ன உரிமை இருக்கிறது?

திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என்றால்…

முதலாம் பாலினத்தவர் யார் ?

இரண்டாம் பாலினத்தவர் யார் ?

அதையெல்லாம் தீர்மானிக்க… முதலில் நாம் யார்?

 **********

"நாடென்ன செய்தது நமக்கு? என்று கேட்காதே…. நீயென்ன செய்தாய் நாட்டுக்கு? என்று யோசி” போன்ற அரதப் பழசான அறிவுரைகளை எல்லாம் கேட்டுக் கேட்டு புளிப்பு தட்டிவிட்டது.

ஆனால் ….

‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே” என்ற கண்ண பரமாத்மாவின் லேட்டஸ்ட் சீடர்கள் ஆட்சிபுரியும் காலமல்லவா இது…. அப்புறம் சும்மா இருப்பார்களா?

அதனால் இந்த ஆண்டு முழுவதும் நாட்டின் குடிமக்களுக்கு ”அடிப்படைக் கடமைகள்” குறித்து வகுப்பு எடுக்கப் போகிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அரங்கேறிய எழுபதாம் ஆண்டாம் இது. அதனால்தான் நமக்கெல்லாம் கடமை உணர்ச்சியைப் பொங்கவைக்கப் புறப்பட்டு வருகிறார்கள். மத்திய சட்ட அமைச்சகம் கடந்த செவ்வாயன்று இதை அறிவித்திருக்கிறது.

கொடுக்கிற உரிமைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கொடுத்துக் கிழித்தாயிற்று. இனி கடமைகள் மட்டும்தான் மிச்சம்….

எல்லோருக்கும் சாதிப்பாகுபாடு இல்லாம மதப்பாகுபாடு இல்லாம ஐஐடி தொடங்கி இஸ்ரோ வரைக்கும் வேலை கெடைச்சாச்சு…

தேசதுரோகச் சட்டம்…. தேசிய பாதுகாப்புச் சட்டம்… U.A.P.A…சட்டம்… இப்படி எல்லாத்தையும் தாண்டி எல்லாரும்   பேரணி நடத்த… கண்டனக்கூட்டம் போட…. கருத்தச் சொல்ல சுதந்திரம்ன்னு களியக்காவிளைல இருந்து காஷ்மீர் வரைக்கும் ஓகோன்னு குடுத்தாச்சு…

”கூட்டுமனசாட்சிப்படி” எல்லோரும் கூடிக் கும்புடறதுக்கான உரிமைய மசூதியக் கடாசீட்டு ”மந்திர்”ஐக் குடுத்தாச்சு…

”நீட்”டு…. மடக்கு எல்லாம் தாண்டி கோடிக்கணக்குல நம்ம குழந்தைக டாக்டராகிக் குப்பை கொட்டறதுக்கு சுதந்திரம் குடுத்தாச்சு….

இப்படி எல்லா அடிப்படை உரிமைகளும் கெடைச்சாச்சு…

இனி அடிப்படைக் கடைமைகள் மட்டும்தானே மிச்சம்?.

அப்புறம் என்னப்பா…. எல்லோரும் பொச்சு மண்ணத் தட்டிவிட்டுட்டு கிளம்பிப் போயி அரசியல் அமைப்புச் சட்டம் அறிவிச்சிருக்கிற அடிப்படைக் கடமைகளை ஆத்தோ ஆத்துன்னு ஆத்துங்கப்பா.

பாராத்து மாதாக்க்கீ…………………

**********

லிதா ஜுவல்லரிலு மீக்கு  எஸ்டிமேட் ஸ்லிப் தீசுக்கண்டி….

மொபைல்ல போட்டோகூட தீசுக்கண்டி…

ரெண்டட்னி பெட்டுக்குண்டி

நாலு ஷோரூம்ல கம்பேர் செய்யண்டி”

என்ற கிரண்குமாரின் குரலில் கிறங்கிப்போய் துளை போட்டு உள்ளே நுழைந்தவர்களை துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது காக்கிச்சட்டை.

கொள்ளை நடந்த அன்று லலிதா ஓனர் போலீசைப் பற்றி கொடுத்த Conduct Certificate இருக்கே… அடடா….…

“திருச்சி போலீஸ் வந்து ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்காங்க… மார்னிங்கே வந்துட்டாங்க… முடிச்சுட்டுத்தான் போவேன்னு ஒரே முடிவோட உட்கார்ந்திருக்காங்க…” என்று கொடுத்த பேட்டி வேறு ரகம்.

ஒரு பத்திரிக்கை ”மூன்று பேர் கோரச் சாவு…” என்று எழுதினால் மற்றொன்று முப்பதாக்கும்… இன்னொன்றோ பதிமூன்றாக்கும்…

ஆனால் பத்திரிக்கை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக அனைத்து பத்திரிக்கைகளும் எந்தப் பிசிறும் இல்லாமல் துல்லியமாக ”13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளை போயுள்ளது.” என்று அன்று லலிதா ஜுவல்லர்ஸ் முதலாளி சொன்னதை அப்படியே சுருதி பேதமில்லாமல் எழுதியது இப்போதுதான்.

போதாக்குறைக்கு….

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டன் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டுவதற்காக, நெட்ப்ளிக்ஸ் தொடரை பார்த்ததாக கூறியதை வைத்து….. 

”நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான க்ரைம் தொடர்களுள் ஒன்று 'மணி ஹீஸ்ட்' (Money heist). 'லா காசா டி பேபல்' என்ற ஸ்பானிஷ் பெயரில் வெளியாகியுள்ள இந்த சீரிஸ், ஸ்பெய்னின் மத்திய வங்கியைக் கொள்ளையடிக்க கும்பலாகத் திட்டமிடுவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான கதையைக் கொண்டது. இந்தத் தொடர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.” என்று பார்க்காத கொள்ளையர்களும் இதைப் பார்க்கும் வண்ணம் “அந்திமழை” இணையத்தளம் வேறு புதிய கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்தது

ஆனாலும் அந்த சந்தோசத்தையும் கொஞ்சநேரம் கூட அனுபவிக்க விடாமல் செய்துவிட்டது கொள்ளையர்களில் ஒருவரான சுரேஷ் அளித்த பேட்டி. அதுவும் போலீஸ் வேனில் இருந்தபடி.

திருட்டை துல்லியமாச் சொன்ன தமிழ் இந்து நாளிதழின்(14.10.2019) கணக்கு :

கொள்ளை போனது : 28 கிலோ  மதிப்பு  : 13 கோடி

Brain ஆக செயல்பட்ட மணிகண்டன் கனகவல்லி   : 4.7 கிலோ

வகையறாவிடம் பறிமுதல் செய்தது

Brain இல்லாமல் மாட்டிய முருகனின் தகவல்படி

 காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து  எடுத்தது          : 12 கிலோ

வாடிப்பட்டியை  அடுத்த டி.மேட்டுப்பட்டி கணேசன்                                                       

                                       வகையறா      : 6.1 கிலோ

                                                       ---------------------

மொத்தம்                                              : 22.8.

                                                         ---------------------

ஆக மொத்தம் ஏறக்குறைய 23 கிலோவை கைப்பற்றியாகி விட்டது.

இன்னும் இருப்பது கொஞ்சம்தான் என நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால் அதற்கும் வேட்டு வைத்துவிட்டார் சுரேஷ்.

”எங்களிடம் போலீஸ் கைப்பற்றியது 5.7 கிலோ. ஆனால் கைப்பற்றியது 4.7 கிலோதான் என்று கதைவிடுகிறார்கள். ஒரு கிலோ நகையை கணக்கு காட்டாமல் போலீசே சுருட்டிக் கொண்டார்கள்.” என்று பட்டவர்த்தனமாக பேட்டி கொடுக்க பிரச்சனையில் சூடு கிளம்பிவிட்டது.

வழக்கமாகக் கணக்கில் சொதப்பும் பத்திரிக்கைக்காரர்களின் கணக்குகூட கனகச்சிதமாக இருக்க… கொள்ளையடித்தவர்களின் கணக்கோ குழப்பியடித்து விட்டது.

”நீதிபதி : சுரேசு…! நீங்க எவ்வளவு நகை வெச்சிருந்தீங்க?

அய்யா 5.7 கிலோவுங்கய்யா

நீதிபதி : இன்ஸ்பெக்டர் நீங்க எவ்வளவு பறிமுதல் பண்ணுனீங்க?

அய்யா 4.7 கிலோவுங்கய்யா.

நீதிபதி : வெச்சிருந்தது 5.7 கிலோ… பறிமுதல் பண்ணுனது 4.7 கிலோ… அப்ப மீதி ஒரு கிலோ… அந்த மீதி ஒரு கிலோ இப்ப எங்கிருக்கு…?

அய்யா  அந்த ஒரு கிலோ அங்கதான்யா இருக்கு.”

இனி இந்த விசாரணை எப்படி நடக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தேன் எனக்கு ஏனோ கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிதான் ஞாபகம் வந்தது.