தொடர்கள்

புலன் மயக்கம் 5

ஆத்மார்த்தி

ஜெயச்சந்திரனின் குரலுக்கு ஒரு உருவம் கொடுத்திருந்தேன். இல்லை இல்லை. ஜெயச்சந்திரன் குரல் பற்றிய ஞாபகத்துக்கு ஒரு உருவத்தைத் தந்திருந்தேன் என்று சொல்வதே தகும். இப்போதில்லை. கிட்டத் தட்ட எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும் போது. 1990ஆமாண்டு. ஜெயச்சந்திரன் எப்படி இருப்பார் என்றெல்லாம் எனக்கு எந்த அபிப்ராயமும் அறிதலும் இல்லாத அந்தக் காலத்தில் ஜெயச்சந்திரன் என்ற பெயர் மற்றும் அனைவரும் அறிந்த பிரபலமான குரல் இவ்விரண்டுக்கும் ஒரு முகத்தை எனக்கு மாத்திரம் ஏற்படுத்திக் கொண்டேன். நடிகர்களது முகங்களைத் தாண்டிப் பெயர் பெற்ற இயக்குநர்கள் சிலரது முகங்களே அந்தக் காலகட்டத்தில் காணக் கிடைத்தது என்பது கூறத் தக்கது. கூகுளுக்கு முந்தைய காலத்தில் எஸ்.என்.சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி ஆகியோரது முகங்களை அறிந்ததே இணைய காலத்தில் தான். இதில் பார்க்க விரும்பிப் பாராதிருந்த சிலரில் ஜெயச்சந்திரன் ஒருவர். எனக்கு அவரது குரல் சிறுவயது முதலே ரொம்பவும் இஷ்டம். அதுவும் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு பாடல் கிட்டத்தட்ட தமிழகத்தின் தேசப்பாடலாகவே அங்கீகரிக்கப்பட்டது.


நாங்கள் வந்து சேர்ந்திருந்த திருநகர் பகுதிக்கு நானும் எனக்கு அதுவும் ஒருமாதிரி பழக்கமாகிப் பகைமறந்து அப்போது தான் இதுவும் என் ஏரியா என்று நான் வேண்டாவெறுப்பாக பாசம் காட்ட ஆரம்பித்த காலம் அதுவும் வீடு மாறிய பிற்பாடு கிடைத்த முதல் கோடை விடுமுறை. எங்கே எனத் தெரியாமல் எங்காவது அலைந்து திரிந்து விட்டு உணவு நிமித்தம் மாத்திரம் வீடு திரும்புவது வழக்கம்.


நாங்கள் வாழ்ந்த குறிஞ்சி நகர் உண்மையில் அற்புதமான நிலம். அதுவும் இன்றைக்குத் தன் தோற்றத்தைப் பல மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்டுவிட்ட குறிஞ்சி நகர் அன்றைக்கு அதிகம் வீடுகளில்லாத நிலப்பரப்பு. மொத்தமே ஐம்பது வீடுகள் இருந்திருக்கும். அவ்வளவு தான். (இன்றைக்கு மொத்தம் பத்து சாலைகள்) திரு நகர் 5 ஆவது ஸ்டாப்பில் இருந்து திருவள்ளுவர் நகர் என்ற பர்மா காலனிக்குச் செல்லும் வழியில் ஒரு குட்டியூண்டு நகர் தான் குறிஞ்சி நகர்.அந்தப் பெயருக்கும் ஒரு காரணம் உண்டு நடுவில் இருக்கும் மலைமேடு சென்று சேருமிடம் மொட்டைமலை. மலை சார் நிலத்தில் வாழ்வது பெரும்பேறு.


ஆனால் கோடை காலத்தில் சாலை பிளந்துருகும் வெப்பத்தில் திருநகருக்குள் ஓடிவிடுவது தான் எங்களுக்கு மாற்றற்ற விடுதலை. அங்கனமே செய்தேன். திருநகர் மதுரை மகா நகரத்தைப் போலவே அழகாகக் கட்டமைக்கப் பட்ட வாழ்விடம். சுப்ரமணியபுரம் படத்தில் எண்பதுகள் காலகட்டத்தில் காட்டப் படுகிற சாலைகள் பஸ் ஸ்டாப் வீடுகள் சாலை நடுவே இருக்கிற விளக்குக் கம்பங்கள் எனப் பல காட்சிகளில் இடம்பெற்றது திருநகர் தான். அந்த அளவுக்கு அழகும் பழமையும் பொங்கும் ஸ்தலம் அது.

அங்கே எந்தச் சாலை வழியாகவும் புகுந்து கலைந்து நகர் நடுவே இருக்கும் அண்ணா பூங்காவுக்குச் செல்ல முடியும். அப்படி ஒரு நாள் சென்று கொண்டிருக்கையில் ஒருவீட்டில் இருந்து எண்பது பர்ஸண்ட் ஜெயச்சந்திரன் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். முதலில் ரியல்சந்திரன் என்று தான் நினைத்தேன். பிறகு சொற்ப வித்யாசங்கள் தொனித்தன. அதிலும் ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது மற்றும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி இந்த இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துப் பாடிய அந்தக் குரலை அப்போதிருந்தே செமையாக விரும்ப ஆரம்பித்தேன்.

தொழில்முறைப் பாடகர் இல்லை என்ற அளவில் சிற்சில நடுக்கங்கள் இருந்தாலும் அழகும் நேர்த்தியும் ஒன்றாகக் கலந்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று அறியும் ஆவலில் அடுத்து வந்த இரண்டொரு நாட்கள் அந்தக் குறுக்குத் தெருவிலேயே அடிக்கடித் திரிந்தேன். ஒரு முதல் காதலுக்கு இணையான காத்திருத்தலுக்குப் பிற்பாடு அவர் பெயர் இத்யாதிகள் தெரிந்து கொண்டேன். முரளி அண்ணன். அவர் ஐந்தாவது ஸ்டாப்பில் இருக்கும் பாஸ்கர் சைக்கிள் கடைக்கு அடிக்கடி வருவார். அதன் பின்னர் ஒரு சனிக்கிழமை மஃப்டியில் அதான் கலர் ட்ரெஸ்ஸில் நான் இருந்தபோது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அண்ணா நீங்க நல்லா பாடுறீங்க என்றேன். முரளி அண்ணனுக்கு வெட்கமாகப் போய்விட்டது.சைக்கிள் கடை மாணிக்கம் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து "நம்ப முரளி பாடுவானா..?அதை நீ எங்கே கேட்டே..?" என்றார்.


என்னை அதற்குள் 'உஷ்' என்று எச்சரித்து விட்டு சட்டென்று கிளம்பி எஸ்கேப் ஆனார் முரளி . மாணிக்கண்ணன் சொல்லித் தான் முரளி அப்போது பெங்களூரில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகத் தெரியவந்தது. மாதம் ஒருமுறை லீவுக்கு மதுரை வந்து போகும் முரளி அண்ணனுடன் எனக்கு நெருக்கமான நட்பு மலர்ந்தது. எங்கள் இருவருக்கிடையிலான வயது வித்யாசத்தின் முரண் ஒருவரை ஒருவர் காண வாய்க்கையிலெல்லாம் சந்தோசமாகப் பேசிக் கொள்ளும் அளவோடு இருந்தது. சில முறை கலைவாணி தியேட்டரில் படத்துக்குச் செல்லும் போது யதேச்சையாக முரளி அண்ணன் தன் நண்பர்களுடன் வந்திருப்பதைப் பார்ப்பேன். என்னையும் அழைத்துத் தங்களோடு அமர்த்திக் கொள்வார். அவர் எனக்குத் தந்த சம சபைமரியதை அவர் மீது எனக்குப் பெரிய மதிப்பை உருவாக்கிற்று. அந்த வயது அப்படியான அங்கீகாரங்களைத் தானே தேடும்..?


அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து.அப்போது நான் முக்குலத்தோர் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். முரளி அண்ணன் ஃபைனல் இயர் பீ.ஈ. ஒரு நடுமழைக்காலத்தில் ஆச்சர்யமாக மதியம் தொடங்கிய திடீர் மழை ஆரம்பத்திலேயே பிய்த்து உதற ஆரம்பித்தது. அந்த நேரம் தான் ஏழாவது ஸ்டாப்பில் இருக்கும் சித்தப்பா வீட்டுக்குச் சென்று விட்டு என் ராஜவாகனத்தில் பெடலடித்தபடி அந்தத் தெருவழியே வந்து கொண்டிருந்தேன். சரியாக முரளி அண்ணன் வீட்டு வாசலில் செயின் கழன்று கொண்டது. இந்தத் தற்செயலுக்குப் பின்னால் ஒரு மழையும் ஒரு ஜெயச்சந்திரனும் காரணமாக இருந்தது சிறிது நேரத்தில் தெரிந்தது.


செயினைத் திரும்ப மாட்டுவதற்குள் சரி மழை. சன்னலில் இருந்து என்னைப் பார்த்து விட்ட முரளி அண்ணன் வேகமாய்க் கீழே இறங்கி வந்து வாசலில் இருந்து என்னை வீட்டுக்குள் அழைத்தார். எனக்கு அந்த மழையில் ராஜபக்ஷே வீட்டைத் தவிர வேறார் வீடாக இருந்தாலும் நுழைந்துவிடும் உத்தேசம் இருந்தது. தன் அம்மாவுக்கு என்னை அறிமுகப்படுத்திய முரளி அண்ணன் என்னை "வா மாடிக்கு போலாம்" என்று அழைத்தார்.


ஒரு கல்லூரி மாணவனின் தனி அறை அப்போது தான் எனக்குக் காணக் கிடைத்தது. ஒரு ஷெல்ஃபில் முதல் மூன்று தட்டுக்களில் புத்தக வரிசை. அனேகமாக ஆங்கிலப் புத்தகங்கள் மற்றும் பாடம் சார்ந்த புத்தகங்கள். கீழ் இரண்டு வரிசைகள் முழுவதும் கேஸட்டுகள். அப்போது கூட சன்னமாக போனி எம் கேஸட் ஓடிக்கொண்டிருந்தது. எனக்குக் காண வாய்த்த முதல் தனி அறைக் கட்டுமானம் என்று முரளி அண்ணனின் அறையைச் சொல்ல முடிகிறது. அந்த அறையின் சித்திரத்தை எனக்குள் நிரந்தரமாக எழுதிக் கொண்ட நான் பிற்காலத்தில் என் அறை என் சேகரங்கள் பலவற்றிலும் அவற்றின் பிரதிகளை உருவாக்கவே விழைந்திருக்கிறேன்.


முரளி அண்ணனின் அறைச்சுவரில் பலரது படங்களும் இருந்தன. மைக்கேல் ஜாக்ஸன் பாப் மார்லே சேகுவேரா கபில்தேவ் அஸாருதீன் டெண்டுல்கர் ஸ்டேஃபி கிராஃப் மார்டினா நவரத்லோவா டீகோ மாரடோனா விவியன் ரிச்சர்ட்ஸ் எனப் பலரது போஸ்டர்கள். ஒரு பக்கச் சுவர் முழுக்க படங்கள். அதில் எனதருமை இளையராஜாவின் படமும் இருந்தது.கேட்கவா வேண்டும். முரளி அண்ணனை என் தலைவராக்கி மகிழ்ந்தேன். இது யாருண்ணே என்று ஒரு படத்தைப் பார்த்துக் கேட்டேன். அந்தப் படத்தில் ஒரு நடுவயது மனிதருடன் முரளி அண்ணன் கைகட்டி நின்று கொண்டிருந்தார்.


ஏலே...இதாருன்னு தெரியலையா..?என்றவர் முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டு ரவீ...இது என் வாத்தியார். பெரிய்ய இஞ்சினியர் என்று வேறு பேச்சுக்கு தாவினார்.


உனக்கு என்ன படம் பிடிக்கும் யார் நடிப்புப் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டார். நானும் பதில் சொல்லி அவரைத் திரும்பக் கேட்டேன். வெளியே பெய்யும் மழையை இதமாக்க முரளி அண்ணனின் அம்மா கொறிக்கத் தின்பண்டங்களுடன் தேநீர் தந்து சென்றார். அந்த மதியம் குளிரும் மழையுமாய் அட்டகாசமாய் இருந்தது.


 "எதாச்சும் பாடுங்கண்ணே.." என்றேன். முரளி அண்ணனையும் என்னையும் இணைத்ததே ஜெயச்சந்திரன் வாய்ஸில் அவர் பாடிய பாடல்கள் தானே..? என்ன பாடட்டும் என்றார். "நான் ராஜா மகள் ரோஜா மகள் பாடுங்க.." என்றேன். உடனே அட்சரம் பிசகாமல் பாடினார். அதுவும்


   "அம்மாடி நீ ஆணையிட கத்தும் கடல் ஓயலாம்...
   மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம்....
   தெய்வ மகள் என்று தேவன் படைத்தானோ 
   வண்ணச் சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ 
   வண்ணமலரே...ஏ...ஏ........
   ராஜாமகள் 

  என்று முடிக்கையில் எனக்கு சிலிர்த்தது.


ஜெயச்சந்திரனின் குரல் ஒரு வித்யாசமான வகை சார்ந்தது.மென்மை என்று முடித்துவைக்கிற இடத்தில் ஒரு காத்திரம் கலக்கும். அந்தக் குரல் இன்னும் கொஞ்சம் கனமாய் இருந்தால் கணீர் என்று சீர்காழி போல சவுந்தரராஜன் போல ஆகி இருக்குமோ என்னவோ மிகச் சரியான வெட்டுக்கத்தி கொண்டு பிளக்கப் பட்ட ரொட்டித் துண்டைப் போல் அத்தனை கச்சிதமான இடத்தில் தொனிக்க வல்லது.


இரண்டொரு பாடல்களுக்கு மேல் தான் பாடாமல் ரவி..ஜீயோட குரல்ல (ஜெயச்சந்திரனை ஜீ என்று தான் சொல்வார் முரளி). கலெக்சன்ஸ்  கேட்கலாம் என்று  "பூவண்ணம் போல நெஞ்சே.." பாடலை ஒலிக்க செய்தார். அதன் பிறகு "மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ..." அடுத்து "பாடிவா தென்றலே...ஒரு பூவைத் தாலாட்டவே...."


 "இந்தப் பாட்டைக் கவனி ரவி...இதை ஜஸ்ட் இங்கேருந்து தன் தொண்டைக் குழியில் கைவைத்துக் காட்டி இங்கேருந்து மாத்திரமே பாடியிருப்பார் ஜீ.அட்டகாசம்ல"  என்பார் முரளி. அடுத்த பாடல் தொடங்கும் போது "அழகாகச் சிரித்தது அந்த நிலவு" பாடலைச் சுட்டி... இந்தப் பாட்டை வித்யாசமா உதட்டோட நுனிலேருந்தே பாடியிருக்கார் பாருங்க.. அதான் ஜீயோட தனித்துவம் என்பார்.


நான் அசந்து போனேன்.ஒரு பாடகரை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதற்கான அழகான மானுட உதாரணம் முரளி எனலாம். விஸிலடிக்கும் ரசிகக் கண்மணி அல்ல அவர். ஒரு குரலரசனை அத்தனை நுட்பமாகப் பின் தொடர்ந்து ரசிப்பது அந்த ஜெயச்சந்திரனை விடக் கொடுத்து வைத்தவராக எனக்கு முரளியை அடையாளம் காட்டிற்று.


"தேவன் தந்த வீணை.." பாடலைக் கடக்கும் போது காரணமின்றி சிரித்தபடி கண் கலங்குவார் முரளி அண்ணன். ஏன் என்று கேட்டால் தெரீலப்பா என்றார். அது உண்மையா எனத் தெரியாது. ஆனாலும் உண்மையை விட அழகு அந்த அழுகை.


உங்களுக்கு ரொம்ப்பப் பிடிச்ச பாட்டு எது அண்ணே என்று கேட்டால் எல்லாப் பாட்டுமே பிடிக்கும்.ஜீ மாதிரி இன்னொருத்தரால பாடமுடியாது ரவீ...அதும் எனக்கு எப்பவாச்சும் மனசு சரி இல்லைன்னா காத்திருந்து காத்திருந்து பாடலைக் கேட்பேன். அப்பறம் கவிதை அரங்கேறும் நேரம் பாட்டைக் கேட்டா எப்பவும் மனசு லேசாகி சந்தோஷமாகிடும்..ஜீ தான் விஷம் ஜீ தான் அமிர்தம் என்று சிரிப்பார். துரத்திய நாகத்தைச் செல்லமாய்ப் பழக்கியவனின் வித்தை தொனித்தது அவர் குரலில்.


முரளி பாடிக் கேட்ட பல ஜீ பாடல்களில் கவிதை அரங்கேறும் நேரம் பாடல் தான் அவரது அத்யந்தப் பாடல் என்று புரிந்துகொள்ள முடிந்தது. ஜெயச்சந்திரன் பாடும் வரிகளைத் தான் பாடும் முரளி ஜானகி பாடும் வரிகளை ப்ளேயரில் ஒலிக்க வைப்பார். நீங்களே முழுசாப் பாடுங்க என்றால் சட்டென்று பெண்குரலில் பாடி அயர்த்துவது முரளியின் இன்னொரு மேதமை.


அதுவும் நெடுங்காலத்துக்கு அந்த ஏழு நாட்கள் படத்தின் கவிதை அரங்கேறும் நேரம் பாடலின் தொடக்கத் தொகையறாவாக ஒலிக்கும் மலையாள வரிகளை எங்கே கேட்க நேர்ந்தாலும் எனக்கு பாக்யராஜ் அம்பிகா நடித்த காட்சியோடு ஜெயச்சந்திரன் ஞாபகம் வந்ததே இல்லை. முரளி அந்த வரிகளை அனுபவித்துப் பாடியது தான் ஞாபகம் வரும். மிகச் சமீபத்தில் அந்தப் படத்தை மீபார்வை பார்த்த போது கூட இந்தப் பாடல் முடிகையில் ஒரு தடவை இடைவேளை விட்டுக் கொண்டேன் என்றால் முரளி அண்ணன் எனக்குள் எத்தனை செல்வாக்கான ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.

ஸஸக நிசபாநி ஸஸா
ஸஸ ஸமக நிஸபாநி ஸஸா
நிஸ ஸபபப பபா பாதமமா
மம கமக கம கமநீத கரீஸநீ....


இதில் இறுதிவரி  ஈற்றாக வரும் கமநீத கரீஸாநீ... இந்த இடத்தில் தன் அழுத்தந்திருத்தமான முத்திரையைப் பதிப்பித்திருப்பார் ஜெயச்சந்திரன்.

சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழு
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

இந்தப் பாடலின் தொடக்கத்தை தனக்கேயுண்டான இசை ஜகஜ்ஜாலத்துடன் ஆரம்பித்திருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரது இசைக்கோர்வையுடன் ஒருங்கிணைந்து தன் குரலால் உடன் பாடுகிற ஜானகியின் குரலையும் சேர்த்துக் குழைத்து இந்தப் பாடலை ஒரு அற்புதமான கேட்பனுபவமாக மாற்றி இருப்பார் ஜெயச்சந்திரன் அதுவும் இந்தப் பாடலின் உள்ளே அடங்கி விரிகிற சின்னஞ்சிறிய சுருள் தன்மையும் இணைகையில் பாடல் இன்னும் ரசமாக ஒலிக்கிறது.


 உன் அங்கம் தமிழோடு சொந்தம் அது என்றும் திகட்டாத சந்தம் என்று சரண முடிவு வருகையில் முழுவதுமாய்க் கரைந்து எதுவுமின்றிக் குவியும் அபூர்வக் குரல் ஜெயச்சந்திரனுடையது.


மலையாளதேசத்தின் மாயக்குரல் ஜெயச்சந்திரனுடையது என்றபோதும் பிறமொழி என்று உணர ஒரு வரி ஒரு சொல்லைக் கூட கண்டுணர இயலா வண்ணம் தீர்க்கசுத்தமாய்ப் பாடுவது ஜெயச்சந்திரனுடைய சிறப்பம்சங்களில் தலையாயது. ஜெயச்சந்திரனின் குரல் துவங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு வரை இரண்டு மூன்றாக உடைந்ததோ மாறிப் பூத்ததோ கிடையாது என்பது இன்னுமோர் சிறப்பு.மேலதிகச் சிறப்பாக இதனைச் சொல்லலாம். எண்ணிக்கைக்காகப் பாடியவர் இல்லை. தான் பாடிய பெரும்பாலான பாடல்கள் மக்களின் பெருவிருப்பப் பாடல்களாகவும் அமையப் பெற்ற அதிருஷ்டசாலி என்றும் ஜெயச்சந்திரனைச் சொல்ல முடியும்.


முரளி அண்ணன் படித்து முடித்து விட்டுச் சிலகாலம் பெங்களூரிலேயே வேலையும் பார்த்தார். நமது நாட்டின் ஆயிரலட்சம் இஞ்சினியர்களின் ஆகமவிருப்பமான அமெரிக்கவாழ்வைத் துரத்திக் கொண்டு அவரும் ஒரு சுபயோக சுபதினத்தில் அமெரிக்கா சென்று பத்திரமாய்த் தொலைந்தார். இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் மூன்று.


1. அந்த மதியத்தின் மழை பூர்த்தியான பிற்பாடு நான் கிளம்பும் போது மாபெரும் ஜெயச்சந்திர ரசிகனாகத் திரும்ப நேர்ந்தது. அதற்கு நான் காலமெல்லாம் நன்றி சொல்ல வேண்டிய எனக்குத் தெரிந்த ஜெயச்சந்திர விள்ளல் தான் முரளி அண்ணன்.அவர் வாழ்க.


2. கிளம்புறேன் என்று கிட்டத் தட்ட வாசலுக்கு வந்த பிற்பாடு என்னிடம் சாதாரணமான குரலில் முரளி அண்ணன் சொன்னார்.ரவி அந்த ஃபோட்டோல நா கைகட்டி நிக்கிறேனே..அது ஜீ கூடத் தான். பெங்களூர்ல ஒரு கச்சேரிக்கு வந்தப்போ எடுத்தது என்றார். அவர் மேல் எனக்குச் சின்ன நடுவாந்திர மற்றும் மலையளவு பெரிய்ய்ய பொறாமைகள் வந்தன. மறைத்துக் கொண்டு ஓ அப்டியா..? நான் நினைச்சேன் என்று பலவீனக் குரலில் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.


3. இன்றைக்கும் ஜீ பாடிய சித்திரச்செவ்வானம் கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே.....மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...  இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..  வசந்த கால நதிகளிலே.. சங்கீதமே என் தெய்வீகமே.. ஒரு வானவில் போலே...போன்ற பல ஜீ பாடல்களைக் கேட்கும் போதும் முரளி அண்ணனை ஒருதடவை பாடச்சொல்லிக் கேட்கவேண்டும் என்று நினைக்காத நாளில்லை.


முரளி போன்றவர்களை எப்படி வகைமைப் படுத்துவது..? ப்ரியமான பறவைகளின் ஏந்த முடியாத நிழல்களைப் போலத் தானே இப்படியான பிரபலமான குரல்களைப் போலச் செய்வதில் துல்லியத்தை நேர்த்தும் பெயரற்றவர்களின் திறமையும்..? எத்தனை நதிகள் எத்தனை நிழல்களைக் கண்டதிந்த உலகம்..?