ஒவ்வொரு பாடலும் ஒரு ஞாபகம். சிறுவயது முதலே அக்காவின் அடியொற்றியே வளர்ந்தவன் நான். எனக்கும் அவளுக்கும் நாங்கள் மாத்திரமே இருந்தோம்.அடிக்கடி வீடு மாறிக் கொண்டே இருக்க நேர்ந்த பால்ய காலத்தில் ஒரு வீட்டில் சென்றமைந்து அக்கம் பக்கமெல்லாம் பழகி தீர்க்கமான காட்சிக்குள் நுழையும் வண்ணத்துப் பூச்சி போலாகும் போது உடனே வீடு மாற வேண்டிய கட்டாயம் கொடுமையானது. அப்பாவுடைய வேலையில் ஏற்பட்ட குழப்பங்களைக் கூட அம்மாவால் சமாளித்துக் குடும்பத்தை செலுத்த முடிந்தது. பாழாய்ப் போன அப்பாவின் குடிப்பழக்கம் வாடகை வீட்டில் குடியிருக்கலாம் குடி இருக்கக் கூடாது என்கிற எண்பதுகளின் வேதாகமப் படி வீடு மாற்றம் அடிக்கடி நிகழ்ந்தது.
அக்கா மிக நன்றாகப் பாடுவாள். குரல் இனிமை என்கிற ஒரு விஷயத்தைத் தாண்டி ஒரு பாடலுடைய உட்பொருட்களை நேர்த்தியாக அவதானித்து அவற்றை அப்படியே அடியொற்றிப் பாடுவாள். பாட்டு வகுப்புகள் வாய்க்காத மத்யம வாழ்க்கையில் தானாய்ப் பூத்த தாமரை அவள். ஒவ்வொரு பாடலையும் உயிரிலிருந்து பாடுவதைக் கேட்கும் போது மனம் நெகிழ்ந்து லேசாகும். இயல்பாகவே எங்கள் இருவருக்குமே வேறெதுவுமற்ற விடுபடுதலாக இசையும் பாடல்களுமே வாய்த்தன எனலாம்.
மோகன் அவளுக்குப் பிடித்த முதல் நாயகன். அதற்குக் காரணம் மைக் பிடித்து மோகன் பாடாமற் பாடிய அத்தனை பாடல்களும் தான். அக்கா 74இல் பிறந்தவள். அவளுடைய பத்து வயதென்பது இளையராஜாவின் பொன்வைரக் காலம். ஒவ்வொரு பாடலையும் அத்தனை விரும்பி அழகாகக் பாடுவாள். எழுதி வைத்துப் பாடுகிறவளில்லை. அதன் ராகத்தைப் போலவே வார்த்தைகளையும் கேட்பதிலிருந்து மனனத்துக்கு மாற்றிப் பாடுவது அவளுக்கு இயல்பாகக் கைவந்தது.
ஈ.எம்.ஜி நகர் என்ற புதூரின் சற்றுப் பக்கவாட்டு பிரதேசத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டைச் சூழ்ந்திருந்த பத்திருபது வீடுகளுக்கு என் அக்கா தான் நாயகி.அவளை எல்லோருக்கும் பிடித்தது. நானோ சேட்டைக்காரன். மேலும் எல்லோரிடமும் பேசிப் பழக மாட்டேன். உமா என்றாலே அந்தப் பொண்ணு நல்லாப் பாடுமே என்று தான் அவளைப் பற்றிய குறிப்பு ஆரம்பிக்கும்.
பாடுகிறவர்களில் அக்காவுக்கு எஸ்பிபாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் தான் விருப்பங்களாக இருந்தனர். அதிலும் ஜானகி பாடிய எண்பதுகளின் பல பாடல்களை அக்கா பிரியத்தோடு பாடுவாள். எங்கள் தெருவில் பொங்கல் விழாவில் அக்கா பாடி முதற்பரிசெல்லாம் பெற்றாள். இத்தனைக்கும் பாட்டுப் போட்டியில் பலப் பல பேர் பாடியதில் அவள் அந்தப் பரிசை அடைந்தாள்.
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு பாடல் மெல்லத் திறந்தது கதவு படத்தில் மிகவும் ரசித்துப் பாடுவாள். இன்னொரு பாடலாக மேகமே மேகமே பால் நிலா காயுதே பாடல் வாணி ஜெயராம் பாடியது அதையும் அழகாகப் பாடுவாள். பயணங்கள் முடிவதில்லை படத்தின் பாடல்கள் அவளைப் பாடச் சொல்லிக் கேட்போம்.
நானும் பாடுவேன் என்று பிடிவாதம் பிடித்துப் பாடுவேன். அப்போதெல்லாம் என் குடும்பம் என்னை பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் எத்தனையோ தியாகங்களைச் செய்யும் தானே. எனக்காக இதனைச் சேர்த்துச் செய்தார்கள் போலும். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் சித்ராதேவிப்ரியாவின் ஆண் வெர்ஷனாகவே என் வரலாறு அமைந்தது. அதிலும் கொடுமை ஸ்கொயர்ட் என்ன தெரியுமா..? ஸார் உற்சாகம் வந்தால் இந்திப் பாடல்களையும் பாடுவார். ஸார் என்பவனும் நானே. இந்தி ஒழிப்பில் நான் தீவிரமாகவும் மிகத் தாமதமாகவும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகக் கூட என் அப்பா சித்தப்பா ஆகியோர் கிண்டல் செய்வார்கள்.
பாபா கெஹ்தே ஹேய்ன் படா நாம் கரேகா இந்தப் பாடலையும் ஏக் தோ தீன் மற்றும் சோகயா ஹே ஜஹான் பாடலையும் முன்னது கயாமத் ஸே கயாமத் டக் பின்னவை தேஸாப் ஒரு வார்த்தை கூடப் புரியாமல் முழுப் பாடல்களையும் பாடி விட்டுத் தான் வேறிடத்துக்கே நகர்வேன். புத்தகத்தைச் சுருட்டிக் கொண்டு மைக் போலாக்கிக் கொண்டு பாடும் போது கண்களை மூடி மூடித் திறந்து ஒரு மாதிரி பாகவதர் மாதிரி என் ஆக்சன்கள் இருக்கும். பல பாக வதம் போலவே வீட்டார் அலறித் துடிப்பார்கள். என் அக்கா என்னை எதற்காகவும் எதிர்த்துப் பேச மாட்டாள். புத்திசாலி.அம்மா தான் திட்டுவாள் இதென்னடா கிறுக்குத் தனமா கத்திகிட்டு..வெளில வாசல்ல போயி விளையாடாம ஏண்டா சோதிக்கிறே என்பாள். என் அப்பர் என் பாடல் காலங்களில் வீட்டில் இருக்க மாட்டார்.அல்லது அவரில்லாத போது தான் என்பாடல்களை பூத்துக் காய்த்துப் பழுக்க விடுவேன். மிச்சமிருக்கும் ஒரே ஒரு ஜீவனான என் பாட்டிக்குக் காது கேட்காது. அதனால் அவள் மட்டும் எனக்கும் என் பாடல்களுக்கும் எப்போதும் சப்போர்ட் செய்வாள். பேரன் என்பதால் அவளுக்கு என்னை மட்டும் ரொம்ப அதிகமாகப் பிடிக்கும். அவள் என்னை விட அராஜகமாக ஒரு கேள்வி கேட்பாள். எனக்கே ஒரு மாதிரி ஆகி விடும்.(என் அக்காவை) அவளும் தான் பாடறா... இவனை மாத்திரம் பாடக்கூடாதுன்னா எப்படி.? பாட்டியைப் பொறுத்தவரை பாடுவதை சமதர்மத்தினுள் அப்ளை செய்வதை எனக்கான செல்லங்கொஞ்சலாகச் செய்தாள். போதாதா..? என் இந்திப் பாடல்களால் பலரும் உள் களேபரம் ஆகிக் களைத்தார்கள்.
அந்தப் புதூர் வீட்டிலிருந்து வீட்டைக் காலி செய்து சொந்த வீட்டுக்குத் தான் வந்தோம், இந்தத் திருநகர் வீடு மற்றவர்களுக்கெல்லாம் சொந்த வீடு என்ற திருப்தியைத் தந்ததால் உடனே மனமாற்றத்தோடு அதனை ஏற்றுக் கொண்டார்கள். எனக்கு என் நண்பர்கள் அத்தனை பேரையும் இழந்து விட்டு வனாந்திரத்துக்குக் கடத்தப் பட்ட அவதாரம் போல் விருப்பமில்லாமல் திரிந்தேன். உண்மையில் நினைவில் புதூருள்ள மிருகமாகவே பலகாலம் இருந்திருக்கிறேன் என்றால் தகும். புதூர் என்ற பகுதி ஒரு நிலமாக மாத்திரம் நின்றுவிடாமல் ஒரு நண்பனாகவே என் இழத்தலுக்குள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது.
திருநகர் வீட்டுக்கு வந்த பிற்பாடு முதலில் எனக்கு உறுத்திய வித்யாசமென்பது வீட்டுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் உண்டான தூரம். உண்மையாகவே பள்ளி சென்று வரும் நாட்களிலெல்லாம் எனக்கு இந்த தூரம் பெரியதோர் பிரச்சினையாகவே இருந்தது. ஆனால் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்த பின் பெரியார் நிலையத்தோடு திசை திரும்பி வேறெங்கேயாவது சென்றுவிடுவதற்கு மிக மிக வசதியாக இருந்தது. முன்பு போலப் புதூரில் வீடென்றால் பள்ளியைக் கட் அடித்து விட்டு பெரியாருக்கு தான் வந்தாக வேண்டும். பள்ளியைக் கட் அடிக்கிற போது வராத வாதை வதங்கல் இன்ன பிற இத்யாதிகளெல்லாமும் பள்ளியைக் கடக்கிற போது வரும். அது ஒரு பெரிய மன அவஸ்தை.கட்சி மாறியவன் பழைய சகாக்களைத் தாண்டிச் செல்லும் போது ஒரு உணர்வு வருமல்லவா..? உள்ளே ஆழத்தில் ஒரு கூச்சம் குளிரெடுக்கும்.நரகாவஸ்தை.
ஆனால் இந்தப் புது வீட்டின் சவுகர்யம் பெரியார் நிலையத்தைத் தாண்டி ஐந்து ஸ்டாப்புகள் பயணித்தால் தான் ஸ்கூல் இருக்கும் இடம் வரும்.போதாதா..? எட்டாவது வரைக்கும் பயந்து நடுங்கி லீவ் எடுத்துக் கொண்டிருந்த நான் குற்ற உணர்வேதுமில்லாத கள்வனாக மாறினேன் .திகட்ட திகட்ட லீவ் எடுத்தேன்.
கிரைம் பிராஞ்ச் ஸ்டாப்பில் அப்போது ஒரு பெரிய ஷாப் கடை இருக்கும். ரெண்டு கடைகளை ஒருங்கிணைத்து கன ஜோராக வியாபாரம் நடக்கும்.அங்கே அப்போது வெளியாகும் எல்லாப் புஸ்தகங்களும் கிடைக்கும். எல்லாப் புஸ்தகங்கள் என்றால் சட்டத்துக்குப் புறம்பான சிலபல வஸ்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும்.பெரியவர்களின் உலகத்துக்குச் செல்வதற்கான விசா வழங்கும் அலுவலகம் போல் அந்தக் கடை செயல்பட்டது.
விஷயம் நான் கெட்டுக் குட்டிச்சுவராகிப் பின் சீனப் பெருஞ்சுவரானதில்லை. எனவே அதைத் தாண்டி சைடு திரும்பியவுடன் ஒரு டீக்கடை இருக்கும்.அது தான் சொல்ல வந்த விஷயம். அந்தக் கடைக்கும் எனக்குமான உறவு முக்கியமானது. அதாவது டீக்கடை.அதற்கு உள்ளே ஓட்டல் போலல்லாமல் ஒரே ஒரு டேபிள் போட்டிருக்கும்.காலை மதியம் டிபன் வகைகள் இருக்கும். எப்போதும் பஜ்ஜி வகையறாக்கள் அனல் பறக்கும்.எப்போதும் கூட்டம் தென்படும் கடை.அப்படி இருக்க அங்கே எனக்கொரு இடம் கிடைக்கக் காரணமாயிருந்தவர் சண்முகம் மாஸ்டர்.
சண்முகம் மாஸ்டர் இந்தி மாஸ்டரல்ல. கராத்தே மாஸ்டருமல்ல. டீ மாஸ்டர். அதை விட முக்கியமான விஷயம் அன்றைக்கு எனக்கு பதினைந்து வயது.நான் படித்தது பத்தாம் வகுப்பு. அப்போது சண்முகம் மாஸ்டருக்கு இருபத்தியெட்டு வயது. கலியாணமாகி ஒரு பெண்பிள்ளை இருந்தது. வீடு மதுரைக்கு அருகாமையிலொரு கிராமம். இவர் மாத்திரம் வேலைக்காக மதுரையில் ரூம் எடுத்துத் தங்கி இருந்தவர்.தொடர்ந்து மூன்றாவது நாளாக அந்தக் கடையை சுற்றி வரும் என்னைக் கண்டதும் என்கொயரி செய்தார் சண்முகம் மாஸ்டர்.படிப்பைக் கெடுத்துக்கிறியே என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தார்.என்னைப் பேசி ஜெயிக்கவா முடியும்..? பின் நாட்களில் நான் புக்குப் போட்டுக் கொள்கிறேன். இப்பத்திக்கி ஸ்கூலுக்குப் போனால் கண் மங்கலாய்த் தெரிகிறது மண்டையில் கொம்பு முளைக்கிறாற் போல் வலிக்கிறது.வால் முளைத்து விடுவது போலக் கனவெல்லாம் வருகிறது என்று பலப்பல பொய்களை வரிசைப்படுத்தியதும் அவருக்கு ஒன்று புரிந்து போனது..பய்யன் யார் சொன்னாலும் கேட்கவே மாட்டான் என்று. அதற்குப் பிறகு நான் என்றைக்காவது கடைப்பக்கம் வரவில்லை என்றால் கவலைப்பட்டு என்னைத் தேடும் அளவுக்கு சண்முகம் மாஸ்டருக்கும் எனக்கும் முஸ்தபாமுஸ்தபா ஆகிப்போனது.
இரண்டு காரணங்களுக்காக எனக்கு அந்த டீ ஸ்டால் தேவைப்பட்டது. ஒன்று என் ஸ்கூல் பையை சாயந்திரம் வரைக்கும் வைத்திருக்க ஒரு இடம்.கிட்டத் தட்ட ரயில் நிலையத்து கிளாக் ரூம் போல அந்தக் கடை அவஸ்யமானது. அடுத்த காரணம் என் ஸ்கூல் யூனிஃபார்மை கழற்றி மடித்து பைக்குள் வைத்து விட்டு கலர் ட்ரெஸ்களில் திரிவதற்கு ட்ரெஸ் மாற்ற வேண்டுமே..அதற்கான ட்ரெஸிங் ரூமாகவும் அந்தக் கடையின் உள் இருள் எனக்கு உதவிற்று. ஸோ...ரவி அந்தக் கடையின் ரெகுலர் கஸ்டமராக ஆனார்.
எந்தத் தியேட்டருக்குப் போனாலும் மதியம் ரெண்டு மணிக்குள் டாண் என்று இரண்டு மணிக்கு அங்கே ஆஜராவேன். என் டிஃபன் பாக்ஸில் எனக்காகக் காத்திருக்கும் சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்தோடு அந்தக் கடையின் ஸ்பெஷலான முட்டை போண்டாவையும் அதற்கெனத் தயாரிக்கப் படுகிற பாம்பே சட்னியையும் பக்கவாத்தியங்களாக வைத்துக் கொண்டு கச்சேரியை ஆரம்பிப்பேன். பிறவியிலிருந்து சைவ உணவு முறையில் வளர்க்கப் பட்ட எனக்கு முதல் அசைவஸ்தானமாக விளங்கியது அந்தக் கடை தான். அதன் பிறகு முட்டையில்லா மதியம் பாழ் என்ற சுயமொழிக்கேற்ப அமைந்தன என் மதியங்கள்.
எனக்காகக் காத்திருப்பார் சண்முகம் மாஸ்டர். அந்தக் கடை ஓனர் அதிர்ந்து கூடப் பேச மாட்டார். சண்முகம் மாஸ்டர் நல்ல கம்பீரமான தோற்றமுள்ளவர். யாராவது சலம்பினால் சத்தாய்த்து விடுவார். நீட்டாக டீ ஷர்ட்கள் அணிந்து இருப்பார். டீ போடுவதை ஒரு கலையாக செய்வார் சண்முகம் மாஸ்டர்.அவரை அண்ணன் என்று ஒரு முறை கூட அழைத்ததில்லை.அவர் என்னை ரஜினி என்று தான் கூப்பிடுவார். நான் அவரை மாஸ்டர் என்பேன். எங்களுக்குள் ஒரு நெருக்கமான நட்பு இருந்தது. மாதத்திற்கு மூன்று தினங்கள் அனேகமாக கடைசி வெள்ளி சனி ஞாயிறு தன் ஊருக்கு சென்று வருவார். அவரது குழந்தை மீது அத்தனை பாசம் கொண்டவராக அவர் இருந்தார். அந்தக் குழந்தையைப் பற்றிப் பேசும் போது அவர் கண்களெல்லாம் விரியும். குழந்தையை பொம்மி பொம்மி என்று தான் விளிப்பார். பொம்மி என்ன பண்ணுச்சி தெரியுமா என்று அவர் ஆரம்பித்தால் நாள் முழுக்க கேட்டுக் கொண்டிருக்கலாம். ஒரு பெண் குழந்தையை அதன் தகப்பனை விட வேறாரால் அற்புதமாக வியந்துவிட முடியும்..? எனக்குள் சண்முகத்தின் பேருரு அவர் தன் பொம்மி மீது கொண்ட வாஞ்சையின் நிறத்தாலேயே தீட்டப்பட்டது.
அப்படிப் பட்ட சண்முகம் மாஸ்டர் மதிய உணவுக்குப் பிற்பாடு ஒரு மணி நேரம் பட்டறை ஏற மாட்டார். அந்த இடைக்காலத்தில் டீ காபி கேட்டு வருகிறவர்களுக்கு நோ தான் பதில். மறுபடி மூன்றரை மணிக்குத் தான் பட்டறையைத் தீண்டுவார். இது என்ன கழனித் தண்ணியா..? டீ...வெள்ளக் காரன் இன்னிக்கும் டீ இல்லைன்னா செத்துருவான். பத்து நாளைக்கு இந்தியா முழுக்க இருக்கிற டீக்கடை எல்லாத்தையும் அடைச்சிட்டா அவ்ளோ தான் எத்தினி பேரு குத்திக்கிடுவான்னு தெரியுமா என்பார். அடுப்பின் அருகிலேயே இருந்து உழைப்பவர்க்கு நடுவே ஒரு மணி நேரம் ஓய்வாவது அவசியம் என்பது சண்முகம் மாஸ்டரின் சித்தாந்தம்.சுவையும் கடின உழைப்பும் அந்தக் கடைக்கென்று பல்லாயிரம் வாடிக்கையாளர்களை உருவாக்கி இருந்தது. அதனால் அங்கே அவர் இட்டதே சட்டம். உரிமையாளரும் கண்டு கொள்ள மாட்டார்.
அந்த ஒரு மணி நேரமும் மாடியில் சண்முகம் மாஸ்டரும் நானும் மாத்திரம் ஓய்வறையில் இருப்போம்.அங்கே சண்முகம் மாஸ்டருக்கென்று ஒரு இரும்புக் கட்டில் இருக்கும்.அதில் படுத்துக் கொண்டு கண்களின் மீது ஈரத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்வார் .அஸெம்பிள் செய்த டேப் ரிகார்டரில் தனக்குப் பிடித்தமான பாடல்களடங்கிய கேஸட்டுக்களில் ஒன்றை ஓடவிடுவார். அந்த கேஸட்டின் இரு முனைகளும் முடியும் போது எழுந்து வேலைக்கு மீண்டு விடுவார். இது தான் அவரது ரொட்டீன். நான் கூட இருந்தாலும் அந்த நேரம் மாத்திரம் வெறுமனே பாடல்களைக் கேட்போமே தவிர இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டோம்.
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா.? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட...வைகறையில் வைகைக் கரையில்..வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்....மௌனமான நேரம்...இளமனதில் என்ன பாரம்..தகிடததுமி தகிடததுமி தந்தானா....வந்தனம்..என் வந்தனம் நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்....நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா....அமைதிக்குப் பெயர் தான் சாந்தி. கடவுள் வாழும் கோயிலிலே கற்பூர தீபம்... இது குழந்தை பாடும் தாலாட்டு...வாசமில்லா மலரிது...என எத்தனையோ பாடல்கள்.கேட்பதற்கினிய அந்தப் பாடல்கள் ஒவ்வொரு கேஸட்டிலும் ததும்பும்.சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பிற்பாடு எழுந்து கொள்ளும் சண்முகம் மாஸ்டர் மறுபடியும் தன் தேநீர் உலகத்தினுள் புகுந்து கொள்வார்.
நானும் அவரும் நெருக்கமாகப் பழகியது ஒரு மூன்று மாத காலம் இருக்கும். அதன் பிற்பாடும் கிட்டத் தட்ட நாலைந்து வருடங்கள் அந்தக் கடைக்குச் சென்று அவ்வப்போது அமர்ந்து பேசிவிட்டு வருவேன். எனக்கொரு பழக்கம் என்னவென்றால் என் அம்மா உள்ளிட்ட சொந்தபந்தப் படையினரிடம் சிக்கிக் கொள்ளவே கூடாது என்பதால் என் மறைவிடத்தை மிக அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பேன். இதை தெரிந்தோ தெரியாமலோ செய்துவந்ததால் கடைசி வரை பிடிபடாமலேயே என் பள்ளி வாழ்க்கை முடிந்தது என்பதை நானே வியப்போடு யோசித்ததுண்டு.
நிற்க. அதே அந்த சண்முகம் மாஸ்டர் கண்களில் ஈரத்துணி போர்த்திக் கொண்டு தன் விருப்பப் பாடல்களைக் கேட்பதன் சூட்சுமத்தை நாலைந்து தினங்களில் கண்டு கொண்டேன். அதாகப்பட்டது தலைவர் சிற்சில பாடல்களைக் கேட்கும் போது சப்தமே இல்லாமல் அழுகிறார் என்பதை.ஈரத்துணி என்ற உடனேயே யூகித்து விடக் கூடிய விசயம் தான் என்று தன் காலரைத் தூக்கிக் கொள்கிற நல்லவர்களுக்காக இன்னுஞ்சில வரிகள்..
விஷயம் பாடல் கேட்டு அழுதது இல்லை. அப்படிப் பலரும் நிரம்பியே இதுகாறும் தன்னை நகர்த்தி வருவது இவ்வுலகு.அதனை யாமும் அறிவோம். அன்பான தகப்பனாக தன் பொம்மி பற்றிப் பேசும் போது அவரால் அதனைப் பெரியதோர் தன் வழக்கக் குரலில் பகிர்ந்து கொள்ள முடிந்த சண்முகம் மாஸ்டர் தன் கம்பீரத்துக்குள் தானே ஒளிந்து கொண்டு திரும்பிச் செல்லவியலாத ஒரு தூரத்தைப் பற்றிய தொலைதல் நினைவுகளைத் தனக்குத் தானே ஈரத்துணிக்குள் அழுதுதீர்ப்பதற்கான புற உள்ளீடுகளாகவே பாடல்களைப் பயன்படுத்தினார் என்பதே. பாடல்களைக் கேட்பதற்கென்று ஒரு நேரம் அங்கே ஏற்படுத்தப் பட்ட ஒரு தனிமை அப்போதும் இன்னும் உடனேயொரு ஈரத்துணி.ஒலிக்கின்ற பாடல்களின் சப்தங்களுடைய ஆழத்தில் தான் மறக்க வேண்டிய ஞாபகத்தின் சில்லுகளால் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு கண் நதி உகுத்துத் தன்னைத் தானே தேற்றியவராய்த் திரும்பவும் தன் அனல்மேடைக்கு முன்னே நின்றபடி புன் சிரிக்க முடிகிறது என்றால்........
சண்முகம் மாஸ்டர் கடைசிவரைக்கும் தனதந்தக் காதலின் மறைந்து போன காதலியின் பெயரைக் கூடச் சொன்னதில்லை என்னிடமும் வேறாரிடமும்.ஒரு நாள் அது காதலுக்காகக் கரைந்தழியும் கண்ணீர் தானே..? என்று கேட்டதற்கு ஆமாம் என்று ஒப்புதலாய்த் தலை அசைத்தார். தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை மாடத்திலே என்ற பாடலை இன்றைக்குக் கேட்டாலும் லேசாய் உடல் குலுங்கும் சண்முகம் மாஸ்டரின் நினைவு தான் வருகின்றது. காதலுக்கான பாடல்கள் எத்தனை அழகானதுகளாக இருக்கின்றன..?