கல்லூரி காலகட்டத்தில் மாணவர் பேச்சுப் போட்டியின்போது சம செய்தவர்கள் – பின்னாளில் பெரும் ஆளுமைகளாக மாறி இன்னும் பயணிப்பது காலம் கொடுத்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். அப்படித் தொடங்கி இன்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வெற்றிகரமாகச் செயல்படுகிறார் டாக்டர் சுதா சேஷய்யன்.
பல்வேறு முக்கியமான அரசு நிகழ்வுகள், குடியரசு தினம் போன்ற சமயங்களில் விழாவை தனது க்ம்பீரக் குரலில் வழி நடத்துபவர் சுதா சேஷய்யன். பக்திமிகக் கொண்டு அறம் சார் கலாச்சார வழியில் அழகு தமிழில் மேடையில் சொற்களை அடுக்கி அவசரப்படாமல் நளினமாக நாவாடி அனைவரையும் ஈர்த்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது.
இந்த ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை – பண்பாட்டுத் தளத்திலிருந்து எதையும் எதிர்கொண்டு பேசுவார். அச்சமயம் நான் அவ்வாறல்ல வாழ்வின். அடிநாதமான பொருளியல் சாந்த வாழ்வு நெறித் தத்துவமான மார்க்சியம் , வள்ளலார், பாரதிதாசன், பாரதி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்- எண்ணம் தாங்கி மேடையில் கருத்துப் போர் நடத்துவேன்.
நன்றாக நினைவிருக்கிறது ஒரு புறம் இன்று நாவன்மையோடு உலகம் சுற்றுகிற கம்பன் கழகப் புகழ் வழக்கறிஞர், த. இராமலிங்கம், விவேகானந்தர் கல்லூரி மாணவராகத் தோன்றி நல்லறம் பேசும். தகைமைசால் உச்சநீதிமன்ற நீதிபதி இராம. சுப்பிரமணியன், மீனாட்சி மகளிர் கல்லூரியிலிருந்து சித்ரா, பேராசிரியை பிரேமா என ஓருபுறம் அணி வகுப்பார்கள்.
மறுபுறம் எதிர் நிலையில் நின்று ஏ.எம். ஜெயின் கல்லூரி மாணவர் இராஜசிம்மன், மணி மொழி (இப்போது திருப்பத்தூர் வழக்கறிஞர்) மாநிலக் கல்லூரியிலிருந்து நான் என வாதிடுவோம். முதல்மூன்று பரிசுகள் எவர் வெல்வது என்ற போட்டி உச்சத்தைத் தொடும். மாறி, மாறிப் பெறுவோம். எச்சூழலிலும் நட்பை விட்டுத்தராமல் பயணிப்பது அடிப்படை என்பதை இன்று வரை உணர்ந்தே உள்ளோம்.
த. ராமலிங்கத்தையும், இராம. சுப்பிரமணியன் அவர்களையும் பார்ப்பது அரிதாகிவிட்டது. நான் திரைத்துறை என மாறிய பின் பட்டிமன்றம், கவியரங்கம் வழக்காடு மன்றம் தொடர்பில் இல்லை. எனவே அவர்களைச் சந்திக்கவும் இயலவில்லை.
நான் மய்யம் பத்திரிகை நடத்திய போது- ஒரு முறை த. ராமலிங்கம் நடுவராக இருந்து செயல்பட்டது நினைவுக்கு வருகிறது. நீதியரசரை விரைவில் சந்திக்க வேண்டும். உரையாடி பழைய மாணவப் பருவத்திற்குப் போக வேண்டும் என்பது ஆசை.
ஆனால் டாக்டர் சுதா சேலைய்யன் அவர்கள் அப்படி அல்ல- பல சமயம் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் அதாவது அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக இப்போது செம்மொழிப் பூங்காவாக மாறியிருக்கிறதே-அது பல ஆண்டுகளுக்கு முன் வரை டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டலாக இருந்தது.
அது என்ன அதற்கு அப்படி ஒரு விசேஷம் என்றால் பரந்த அளவு இடம் செடி கொடி என காட்டின் சகோதரி போல் காணப்படும். ஓட்டல் அமர்ந்து சாப்பிட – வசதி உள்ளவர்கள் காரில் வந்து நின்று- அமர்ந்தபடியே சர்வரிடம் ஆர்டர் கொடுத்து சாப்பிட முடியும். என்ன கையைகூட அங்கிருந்தபடியே கழுவிவிட்டு பில் கொடுத்து விட்டு பல மணி நேரம் கழித்து கூட செல்ல முடியும். ஏன் எதற்கு என கேட்க மாட்டார்கள்.
பரந்த இடம் இயற்கையோடு இருப்பதால் பல விஐபிக்கள் இங்கு விரும்பி வருவார்கள். அப்படி பின்னணிப் பாடகர் பி. பி சீனிவாஸ், கங்கை அமரன், நாசர், கவுண்டமணி, AIR நிலைய இயக்குநர் நடராஜன். எஸ்.லீலா உடன் அரசியல் பிரமுகர்கள் வருவார்கள். அந்த சமயம் சுதா சேஷையன் கூட வருவார்.
கனிவோடு பேசிக் செல்வது வழக்கம் பிற்காலத்தில் சமயம் சார்ந்த சொற்பொழிவாளராக மாறிய நிகழ்வும் நடந்தேறியது. தற்போது தன்னிறைவுடன் உள்ள இவர் அதிகமாக கவனிக்கப்பட்டது மறைந்த முன்னாள் முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள போது சுதா சேஷைய்யன் மக்கள் முன் தோன்றி விளக்கிய சொற்கள்.
கவனிக்கப்பட்டவர் என்பது செய்தியல்ல- தனித்திறனும், ஆளுமையும் அவரை இவ்விடத்திற்கு கொண்டு வந்தது மருத்துவம் மட்டுமல்ல. மகத்துவம் என்றால் அது அவரின் அழகிய தமிழ்தான். சென்னையில் சுதா சேஷைய்யன் என்றால் – கோயம்புத்தூர் பி.எஸ். ஜி. கல்லூரியில் நடந்த மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் சந்தித்தது வழக்கறிஞர் அருண்மொழி.
யார் இந்த அருள்மொழி? சேலத்துக்காரர்- திராவிடர் கழகத்தில் ஆழ்ந்த பற்றும், பகுத்தறிவு நெறியும் கொண்டு இன்று வரை முன்னெடுத்துச் செல்கிற சொற்போர் வீராங்கனை. இன்றும் எதிர்வினை ஆற்றுபவர்களை துவேஷத்தால் எதிர்கொள்ளாமல் தன் பகுத்தறிவு ஆயுதத்தால் நெறிபிறழாது பொறுமையில் தெளிவாய் கருத்துக்களை முன் வைத்து பயணிப்பவர்.
சில சமயம் தொலைக்காட்சி ஊடகங்களில் அரசியல் சமூகம் சார்ந்த விவாதங்களில் சந்திக்கிறேன். பல சமயம் நண்பர்களுக்கும், பிறருக்கும் சட்டம் தொடர்பான செய்திகளுக்கும், திரைக் கதையில் தேவையான சட்ட நுணுக்கங்களுக்கும் அணுகுவதுண்டு. முகம் சுளிக்காமல் வழி காட்டுவது அவர் பண்பு.
’வண்ணத்துப்பூச்சி’ படமெடுக்கும் போது குழந்தைகளை கோர்ட்டில் நிற்கவைத்து கேள்வி கேட்டு வாதாடுவார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு அவ்வாறில்லை குழந்தைகள் வழக்கில் சாதாரணமாக அழைத்துப் பேசுவார்கள். கோர்ட் நடைமுறைத்தொனி இருக்காது. வேண்டுமானால் புரசைவாக்கத்தில் அப்படி ஒரு அமைப்பு உள்ளது. சென்றுபாருங்கள் என்று வழிகாட்டினார். நானும் சென்று பார்த்தேன். அதன்பின்தான் நான் இப்படத்தில் கோர்ட் காட்சியை நடிகை ரேவதி அவர்களை நீதிபதியாக வைத்து படமெடுத்தேன்.
நிறைய பேர் என்ன இது? இப்பட் எல்லாம் நடக்கும் என்று கேள்வி எழுப்பினார்கள். என்ன செய்வது சினிமா கோர்ட்டே தனிரகம்தானே? அருண்மொழியிடம் பிடித்தமான விடயம். நேரம் தவறாது அணுகுவது. தட்டிக் கழிக்காமல் உண்மை பேசுவது. இயன்றதைப் பேசுவது. இடுக்கண் வருங்கால தோள் கொடுப்பது.
நடிகர்களின் அரசியல் வருகைக்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றாலும் அவர்கள் மேல் எவ்வித வெறுப்புமின்றி தனிமனித உணர்வுகளை மதித்து பேசுவது அவரது பழக்கம். பொருளதார விடுதலைதான் அதாவது பெண் கல்வியும் வாழ்வின் புரிதலும் மட்டுமே பெண்ணை சுயமரியாதையோடு வாழவைக்கும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
பெண்ணுரிமை என்றால் ஆணை அடிமைப்படுத்துவதாகாது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமனாக வாழ்தலே என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வழக்கறிஞர் அருண்மொழி! கல்லூரி மாணவப் பருவம் தொட்டே உடன் பேசி வந்தவர் வழக்கறிஞர் சுமதி. சுமதியை தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் பார்க்கலாம். கம்பீரக் குரல் கொண்ட பேச்சாளர்.
எதையும் வெட்டு ஒன்று- துண்டு ரெண்டு என பளீரெனப் பேசுவார் சமரசமற்ற பேச்சு. வழக்கறிஞருக்கு நாவன்மை அவசியம் என்பது சுமதியின் வாழ்வியல் சொல்லும் சேதி-நீண்ட இடைவெளிதான் என்றாலும் பார்த்துப் பேசுகிற சந்தர்ப்பங்கள் அதிகம். அவருக்கு எழுத்திலும் ஆர்வம் உண்டு. கல்மண்டபம் அவரது படைப்பு கவனிக்கவைத்தது.
சென்ற ஆண்டு எழுத்தாளர் ஆத்மார்த்தியின் ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டு பேசினேன். இசைப்பற்றிய நூல் – அதில் இளையராஜாவின் இசை நுணுக்கங்களை. ஆய்வு செய்து பாடி பரவசப்படுத்தினார்.
சுமதியா இது? கம்பீரத்தின் உச்சத்தில் நின்று பேசும் சுமதி- அழகால் கனிந்து சொற்களை தாயம் ஆடுவது போல் போட்டு அசைத்துப் பார்த்துவிட்டார் மனதை . காலம் எவ்வளவு மாறியிருக்கிறது? வாழ்வின் போரும், அனுபவமும் மனிதரை மாற்றாமல் விடாது போலிருக்கிறது.
இன்னும்கூட ஒரு அதிசயம் கண்டேன் அவரிடம். ராணுவத்தினரோடு அவர்களோடு பழகி- அவர்கள் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டு பாராட்டி நடத்தும் நிகழ்வுகளில் அக்கறை கொண்டிருக்கிறார். இயல்பாகவே தேசப்பற்று கொண்ட சுமதி அப்போது பெரம்பூருக்குப் பக்கத்தில் வந்து போனது நினைவு.
என்ன மேடையில் பேசலாம் என்று விவாதித்தது ஒரு காலம். இப்போது பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ வீரர்களுக்காக சிந்திப்பது பெருமை! சுமதி திரைப்படத்துறைக்கு வந்திருக்கலாம். பாலசந்தரோடு நட்பு கொண்டு பழகிய சுமதி அப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு எனக் இருந்தது. அப்படிஅவர் வந்திருந்தால் ஒரு வேளை ‘ அவரிடமிருந்து ‘ ஒரு’ தண்ணீர் தண்ணீர்’ போன்ற படைப்புகளை பார்த்திருக்கலாம்.
இப்போது இசைவழித் தமிழாக மாறியிருக்கிறார். காலம் இன்னும்கூட அவரை மேம்படுத்தி கொண்டாடத்தான் போகிறது. சொல்ல மறந்து விட்டேன். இதற்கு முன்னால் சொன்னேனே. மணிமொழி அவரது அப்பா திருச்சி சிவில் இன்ஜினியர்- கவிதை மீது அன்பு கொண்டவர். காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது திருப்பத்தூரில் கிரிமினல் லாயராக பணியாற்றுகிறார். அவரின் கணவர் ‘ ஜோக்கர்’ படத்தில் நடித்துள்ளார்.
இன்னும் சிறப்பு என்னவென்றால் அவருடைய மூன்று மகள்களுக்கு மூன்று மதங்களின் பெயர்களை சூட்டியுள்ளார். சிநேகா, மும்தாஜ், ஜெனிபர். தன்னுடைய குழந்தைகளின் பெயரை வைத்து சாதி, மதம் கண்டு பிடிக்க இயலாது என்பவர். சிநேகா அவரது கணவர் பாரதிராஜா இருவரும் சாதியற்றவர்கள் என்ற சான்றிதழைப் பெற்று கமல் அவர்களிடம் சென்று பாராட்டையும் பெற்றவர்கள்.
இவர்களின் ஆரம்பக் கல்வி சான்றிதழ்களில் சாதி, மதம் அற்றவராகவே குறிப்பிட்டது ‘ மணிமொழியின் எண்ண உறுதிப்பாட்டுச் சான்று. ஒருமுறை நான் வடபழனியில் சிவன் கோவில் அருகில் வாடகை வீட்டிலிருந்தபோது தனது மகள்களுடன் நீண்ட வருடங்கள் கழித்து திடுமென சந்தித்து அன்பை வெளிக்காட்டினார்.
இன்னொமுறை ‘ தி. இந்து’ தமிழ் நாளிதழில் வந்த எனது கவிதையைச் சுட்டிக் காட்டி ஒரு குடும்ப வழக்கைத் தீர்த்து வைத்ததாகச் சொன்னார்.மற்றொரு முறை – திருப்பத்தூரில் எனது கவிதை நூலை ஆய்வு செய்து பேசியதாக குறிப்பிட்டு மகிழந்தார்.
நம்பமாட்டீர்கள் மணிமொழி அழகியல் சாந்தவர் மட்டுமல்ல- கொள்கைப் பற்றாளர். சமரசம் செய்து கொள்வது என்பது அவர் வாழ்வில் எப்போதும் இல்லை. சமீபத்தில் இவர் திருமண நாளில் கணவர் ஆனந்த கிருஷ்ணன், மணிமொழிக்கு காதல் ரோஜாவை மண்டியிட்டு தருவது போல் காட்சி பார்த்தேன்.
அட- காதலுக்கு வயதாவது? வரைமுறையாவது மணிமொழி- மனமொத்த வாழ்வில் மலர்ந்த வனமாக காட்சியளிக்கிறார்.மாணவப் பருவத்தில் இராஜசிம்மன்- கொள்கை நீதியாக முன்னெடுத்துச் சென்றவர்- இன்றுவரை பார்க்க முடியவில்லை என்று வேதனைப்பட்டார். சா. கந்தசாமி எழுதிய ‘ தொலைந்து போனவர்கள்’ கதையைப்போல் தன் கல்லூரி கால நண்பர்களைத் தேடித் தேடி பார்க்கிறார்.
அப்படித்தான் இப்போது திருச்சி தினமலரில் பணியாற்றும்- எண்பதுகளில் கொடிக்கட்டிப்பறந்த புரசைவாக்கம் எஸ். அறிவுமணியைத் தேடிப் போய் பார்த்து வந்திருக்கிறார்.நட்பைப் புதிப்பித்து வாழ்வதில் உள்ள ரசனையை விடாது கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறவர்களில் மணிமொழி தனித்துவம் என்பது சரிதானே!
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)