சென்னை பல விசித்திரங்களைக் கொண்டது ‘கெட்டும் பட்டணம் போ’என்று சொல்வதைப் போல சென்னைக்கு வலது காலோ இடது காலோ வைத்து வந்து விட்டால் எவரையும் போ என்று துரத்தித் தள்ளாது.
அப்படி அனாதையாக வந்த என்னையும் அரவணைத்துக் கொண்டு அன்பின் சொற்களாய் அழகியல் மனமாய் திகழும் ஒரு அண்ணனை அறிமுகம் செய்தது.
நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளை தொடத்துடிக்கும் வருடம். கலைவாணர் அரங்கத்தில் ஒரு கவியரங்கம். அதில் புலமைப்பித்தன், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், பொன்மணி , குருவிக்கரம்பை சண்முகம் இன்னும் சிலர் கவிதை பாடுகின்றனர். கம்பீரமும் கவிதைப் புனைவும் கேட்பவரை வியக்க வைத்த நிலையில் ஒருவர் வந்தார். அவர் நம் மனதைத் தொட்டு சுவாசத்துக்குள் ஒன்றிவிடுகிற மெல்லிய சொற்களில் அழகியல் கலந்த மண்வாசம் மாறாத யதார்த்த தமிழில் கவிதை பொழிந்தார். உறைந்து போய் எல்லா கவிஞர்களையுயும் விலக்கி அந்தக் கவிஞரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அன்று தொடங்கிய உறவு இன்று வரை மனதை உற்சாகமாய் வைத்திருக்கிறது. அவர்தான் கவிஞர்களின் வேடந்தாங்கல் என்று காலம் அடையாளப் படுத்திய தமிழ்க்குரல் அண்ணன் அறிவுமதி.
தரமணி உங்களுக்குத் தெரிந்திருக்கும் . மத்திய கைலாஷ் தாண்டி டைடல் பார்க் போவதற்கு முன் உள்ள இடம். இப்போது போன்று பளபளப்பாக சாலையும் விரைவான மக்கள் கூட்டமும் இல்லாத தனிமையில் தள்ளப்பட்ட விடுதி மாணவனைப் போல் இருக்கும். அதன் உள்ளே நடந்து போனால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இருக்கும். அரிதான நூல்கள் கிடைக்கும். அறிவுமதி அங்கே ஆய்வு மாணவராகப் படித்தார். அவருடன் ஒட்டிக் கொண்டு நானும் அங்கே சென்று விடுவேன். அண்ணன் எனக்கு லைப்ரரியில் நூல் ஒன்றை எடுத்துக் கொடுத்து ஒழுங்கா படி மாலையில் என்ன படித்தாய் என்று என்னிடம் சொல்ல வேண்டும் என்பார்.
அட நிஜமாகவே கேட்பார். எனக்கும் விருப்பம் தான் என்பதால் பல சமயம் அதை கடைபிடித்தேன் என்பது தெளிவான உண்மை. சும்மா சொல்லக் கூடாது மதிய வேளையில் உணவை மறக்காமல் வாங்கிக் கொடுத்து விடுவார்.
அதோடு நின்றால் பரவாயில்லை வீட்டுக்குப் போவேன். அண்ணி மணிமேகலை சாப்பிடாமல் அனுப்பமாட்டார். இல்லை என்றாலும் அண்ணி பசிக்குது என்று அடுப்பங்கரைக்கே சென்று தட்டெடுத்து சாப்பாடு பொட்டு சாப்பிட்ட பின் கேட்பேன் உங்களுக்கு இருக்கா என்று. இப்படிப்பட்ட உறவு உரிமை எவர் தருவார்? அவர்தான் அறிவுமதி!
தமிழின் பால் அன்பு கொண்டு வரப்புகளைத் தாண்டி வருகிற எவருக்கும் அவர் வழிகாட்டாமல் இருந்ததில்லை. அப்படித்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் வாணியம்பாடியில் நடத்தும் கவிராத்திரிக்கு என்னை அழைத்துப் போய் பங்கு கொள்ளச் செய்தார்.
கவிராத்திரி என்றால் நிஜமாகவே ராத்திரி முழுக்க நடக்கும், கசல் கவிதைகள் அரங்கேறும். குறும்பா எனும் ஹைக்கூ கவிதைகள், செள்ட்ரியோ கவிதைகள் எனும் புதுத் தளத்தில் அரங்கேறும். ஒரு தலைப்பு தந்து அதே இடத்தில் கவிதை எழுதி வாசிக்க வேண்டும். அந்த நிமிட சிந்தனைகளின் வெளிப்பாடாக அமையும் இந்நிகழ்வு போல் வேறு எங்கும் இந்த மாதிரியான ஈடுபாட்டோடு நடக்குமா என்பது ஆச்சரியம்.
‘குளத்தில்
கல்லெறிந்தேன்
எங்கும்
வளையல்கள்’
என்ற கவிச்சாரல் அவரிடம் வந்ததாக நினைவு.
புஷ்கின் இலக்கியப் பேரவை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடந்தது. சலாவுதீன் தலைமையில் மாதம் தோறும் கவிதை நிகழ்வுகள் நடக்கும். அண்ணனுடன் பழனிபாரதி காதல்மதி நான் என புதிய கவிஞர்களோடு அடிக்கடி பங்கு கொள்வது வாடிக்கை. உங்களுக்குத்தான் தெரியுமே ரஷ்யாவும் சோஷலிசமும் ஆதர்ஷ கொள்கைகள் அப்போது.
என்ன பிரச்சினை என்றால் அறிவுமதியின் கவிதைக்கும் குரலுக்கும் மயங்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதிலிருந்து தப்பிக்க ஒரு காவல்படை போட வேண்டும் என்று என் நண்பன் அல்போன்ஸ் ராஜா வேடிக்கையாக சொல்வதுண்டு.
இப்போதிருக்கும் எல்டாம்ஸ ரோடு சுப்பிரமணியன் கோவிலில் மதிய நேரத்தில் உள்ளே அமர்ந்து கதை திரைக்கதை எழுதி ஒரு படம் உருவாகி வெளிவந்து சக்கை போடு போட்டதென்றால் நம்புவார்களா? நடந்தது. சரணம் ஐயப்பா என்ற படம் அப்படி உருவானதுதான். அதன் இயக்குனர் தசரதனுக்கு உதவியாக அறிவுமதியும் நானும் இருந்தோம் என்பது இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
அறிவுமதி அதைத் தொடர்ந்து பாக்யராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, வல்லபன் படங்களில் பணியாற்றினார். பின் அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக தனியாக ‘உள்ளேன் அய்யா’ என்ற திரைப்படத்தை இயக்க பூஜை போட்டு வேலைகளைத் தொடங்கினார். அது ஒரு பள்ளிக்கூட அனுபவத்தின் வெளிப்பாடு. கதாபாத்திரங்களையும் தயாரான நிலையில் ஏனோ அப்படம் தொடராமலே போய்விட்டது. அதற்குப்பின் பொன்வண்ணன் இயக்கிய அன்னை வயலில் ஈடுபாடு காண்பித்து பாடலையும் எழுதி பாடலாசிரியர் ஆக வடிவமெடுத்தார்.
பூவே வண்ணப்பூவே
கிழக்கே பொட்டு வைத்தாயே
என்று பாடலை எழுதினார்.
சேது படத்தில்
எங்கே செல்லும் இந்தப் பாதை
யார்.. யார்.. அறிவார் ..
என்று எழுதி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பின் தொடர்ச்சியாக தயாரிப்பாளர் தாணுவின் முன்னெடுப்பில் மோகன்லால் நடித்த சிறைச்சாலை படத்தில் வசனம் பாடல்களை எழுதினார். இளையராஜா, ஏஆர் ரகுமான் வித்யாசாகர் போன்றோர் இசையமைத்த படங்களுக்கு பாடல்கள் எழுதி இலக்கிய நுண்மையுடன் தமிழ் உலகின் கவனத்தை ஈர்த்தார். என்ன ஆனாலும் சரி ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது தன் கொள்கையாக்கிக் கொண்டார். ஏனோ அவர் கற்ற இயக்கம் திறன் வெளிப்பட ஒரு படத்தை அவர் இயக்க வேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம்.
எனது முதல் நூலான கைகுலுக்கிக் கொள்ளும் காதல் கவிதை நூலில் அவர் என்னைப்பற்றிய வரிகள் இன்னும் என்னை இயக்குகின்றன. “ராசி அழகப்பன் எவரைக் கண்டும் வியக்காதவன். முகத்திற்கு நேரே பேச அச்சப்படாதவன் “ என்று எப்படி கணித்துச் சொன்னாரோ தெரியாது இன்றும் அதுவே இயல்பாகி விட்டது.
அபிபுல்லா சாலை பாடலாசிரியர் கவிஞர்கள் சரணாலயம் ஆகி விட்டது. தை இதழ் அங்கிருந்து வரத் துவங்கியது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை கமல் அவர்களோடு நான் மய்யம் இதழ் ஆசிரியர் ஆகவும் திரைப்பட துணை இயக்குனராகவும் பணியாற்றியதில் தொடங்கி சிறிய இடைவெளி ஏற்பட்டதென கருதுகிறேன். விளைவு என்னுடைய படத்திற்கு பாடல் எழுதவில்லை. அதன் தொடர்ச்சியாக அவர் நிகழ்வுகளில் எனக்கு இடம் தராமல் கடந்து செல்லும் சூழலானது.
வாழ்க்கை எவ்விதமாக மாறினாலும் ஆரம்ப கட்டத்தில் அவர் காட்டிய அன்பும் அரவணைப்பும் எவரும் செய்ய இயலாதது.
அவரின் மகளுக்கு திருமணம். எனக்கு அழைப்பில்லை. பின் நானே வாட்ஸ்அப்பில் போடச்சொல்லி எனது துணைவியாரோடு பாண்டிச்சேரி அருகில் சென்று நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கினேன்.
அவரை மிக அருகில் வாழ்ந்த போதும் விலகி நின்று பார்த்த போதும் இப்படி ஒரு மனிதம் வேறெங்கும் காண இயலாது என்றே மனம் சொல்லும். அறிவுமதி என்பது அவர் இயற்புப் பெயரன்று. அது நட்புக்காக அவரே இணைத்து உருவாக்கிக் கொண்ட பெயர். மதியழகன் தான் இவர் பெயர். ஆனால் படிக்கும்போது தனக்கு நண்பனான அறிவழகன் பெயரிலிருந்து அறிவு எடுத்துக் கொண்டு தன் பெயரில் முதல் இரண்டு எழுத்து மதி-யை சேர்த்துக் கொண்டு அறிவுமதி என தன் பெயராக மாற்றிக் கொண்டார். நட்பின் ஆழத்திற்கு இவர் ஒரு ஒப்பற்ற உதாரணம்.
கவிதை உலகில் இவரது படைப்புகள் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நீரோட்டம் என்று ஒரு கவிதை
“ கர்நாடகாவிலும்
இந்து
தமிழ்நாட்டிலும்
இந்து
இந்துக்கு இந்து
குடிநீர் தரமாட்டாயா
இதுதானா
இந்துத்துவா
உங்கள்
தேசிய நீரோட்டம் “
என்று ஆழமான தனது கருத்தை எடுத்து
வைக்க தயங்க மாட்டார்.
கடைசி மழைத்துளி என்று ஒரு கவிதை
“இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ.. நான் “
இப்படியான அங்கத அழுத்தப் பார்வை அவரது பலம். புல்லின் நுனியில் பனித்துளி, அணுத்திமிர் அடக்கு, நட்புக் காலம், கடைசி மழைத்துளி, வலி, என பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் நூல் வரிசை கட்டி வெளிநாடுகளில் பேசுபொருளாயின.
வெள்ளைத்தீ என்ற சிறுகதை தனிச்சிறப்பு. ஆனாலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவரது நட்புக்காலம் தான் காதல்கீதமாக படபடத்துப் பறந்தது. அந்த நூல் வடிவத்திலும் பாடு பொருளிலும் சிறந்து விளங்கியதே அதற்கு காரணம்.
தமிழ்க் கடவுள் முருகன் அவரது ஆய்வுரை. மொழி இனம் பண்பாடு மனிதம் என்பதில் தமிழ்சார்ந்து அவரின் அர்ப்பணிப்பு எழுத்தும் பேச்சும் எவரும் கைநீட்டி குறை சொல்ல இயலாது.
பாடலாசிரியர் வாசன் விழா பிரசாத் லேப்பில் நடைபெறும் போது அவரை மேடையில் சந்தித்து, கவிஞர் கோ வசந்தகுமார் காரில் நான் பயணித்த போது மனம் அசைபோட்ட சொற்கள்தான் மேற்கண்டவை.
இப்போதெல்லாம் நான் அதிகம் பார்ப்பது இயக்குனர் லிங்குசாமி உடன்தான். அண்ணன் இப்போது, தமிழ் உலகமே வியந்து பார்க்கும் வகையிலான செம்மொழி சார்ந்த அரிய படைப்பை கவிதை நூலாக தயாரிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
எண்பதுகளில் வியந்து பார்த்த அண்ணனை இப்போதும் வியந்தே பார்க்கிறேன் .
மழை
எத்தனை
எளிமை
காற்று
எவ்வித
குணம்…
அறிவுமதியும்
அவ்வாறே!
(வண்ணத்துப்பூச்சியின் நினைவலைகள் வாரம் தோறும் வெளியாகும்)