அது 1906 வது வருடம். சுவாமிநாதன் நான்காவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த போது , கல்லூரியில் ஆண்டு விழா வந்தது.
ஷேக்ஸ்பியரின் ஜான் மன்னர் நாடகம் நடிக்க ஏற்பாடாகி இருந்தது. அதில் இளவரசன் ஆர்தராக நடிப்பதற்கு தகுந்த மாணவன் கிடைக்கவில்லை. அப்போது 12 வயதே நிரம்பிய சுவாமிநாதனின் நினைவு தலைமை ஆசிரியருக்கு வந்தது.
அந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று சுவாமிநாதன் விரும்பினார். ஆனால் வகுப்பு ஆசிரியர் ' நீ சின்ன பையன் ' என்று அனுமதிக்கவில்லை. இப்போது தலைமை ஆசிரியரே அழைக்கிறார். சுவாமிநாதனுக்கு ஒரே மகிழ்ச்சி!
வீட்டில் லேசில் அனுமதி கிடைக்கவில்லை. கெஞ்சி அனுமதி பெற்றார். நாடகத்துக்கு ஏற்ற உடைகளை பெற்றோர் தைத்தனர் . இரண்டு நாட்களே இருந்தது. வசனங்களை நன்றாக மனப்பாடம் செய்தார்.
அந்த நாடக மேடையில் ஆர்தர் இளவரசராக பார்த்தவர்கள் வியக்கும்படி கம்பீரமாக , நடித்துக் காட்டினார் சுவாமிநாதன் . சுவாமிநாதனுக்கு முதல் பரிசு கிடைத்தது.
ஆசிரியர்கள் அத்தனை பேரும் மறுநாள் சுவாமிநாதன் வீட்டிற்கு வந்து பாராட்டி பேசினார்கள். தாயார் மகனுக்கு திருஷ்டி சுற்றி போட்டார் !
ஆனால் சில நாட்களில் உண்மையில் கடவுள் நடத்தி வைக்கப்போகும் நாடகத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை...
*********************
' சம்பவாமி யுகே ... யுகே ' என்று கீதையில் கண்ணன் கூறினார். தர்மத்தை நிலை நாட்ட ,அதர்மத்தை அழிக்க யுகங்கள் தோறும் அவதாரம் எடுக்கிறான் இறைவன்.
தான் அவதாரம் எடுப்பது மட்டுமில்லை. அவ்வப்போது மக்களுக்கு வழிகாட்ட மாபெரும் மகான்களை அவதரிக்கச் செய்கிறான் இறைவன் . வேதங்களை காப்பாற்றவும் , காலத்துக்கு ஏற்ப புதிய பாஷ்யங்களை எழுதவும் அவசியம் ஏற்படுகிற போதெல்லாம் இப்படிப்பட்ட மகான்கள் தோன்றுவர்.
தமிழகத்தின் தஞ்சையில் தான் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் , காவிரிக்கரையில் திடீர் சந்நியாசம் பெற்றார்.
மாபெரும் ஞானியும் சகல கலைகளையும் அறிந்தவராகவும் திகழ்ந்த ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் ஒருபுறம் வறுமையில் வாட நேர்ந்தது. இன்னொரு புறம் துறவறம் அவரை அழைத்தது. ஆனால் சுவாமிகள் இல்லற வாழ்வைத் துறக்க தயக்கம் காட்டினார். அவரது துணைவியார் தனது கணவரிடம் அத்தனை அன்பைக் காட்டினார்.
ஆனால் ஒரு நாள் இரவு சுவாமிகள் தனிமையில் இருந்தபோது சரஸ்வதி தேவியே அவர் முன் தோன்றினார். "முந்நூறு வருஷத்துக்கு ஒருமுறை வேதங்களுக்கும் உபநிஷங்களுக்கும் பாஷ்யம் எழுதுவது என்பது காலத்தின் அவசியம்.. அதற்காகவே உங்கள் அவதாரம்" என்று சரஸ்வதி தேவி வாதிட்டார். இரவில் , புத்தரைப்போல , குடும்ப வாழ்வைத் துறந்து துறவியானார் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்.
இப்படி மகான்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்துபவன் இறைவன் . அதுபோன்ற திருப்புமுனை சுவாமிநாதன் வாழ்விலும் நடந்தது.
சுவாமிநாதனை - காஞ்சி ஆச்சாரியராக மாற்றிக்காட்டினான் இறைவன்.
*********************
திண்டிவனம் தாலுகாவில் ' பெருமுக்கல் ' என்று ஒரு சிறிய கிராமம் . அங்கு ஸ்ரீ காமகோடி பீடத்தின் 66 வது சங்கராச்சாரியார் தங்கி இருந்தார்.
சுவாமிநாதன் பெற்றோருடன் சங்கராச்சாரியாரை தரிசிக்க செல்வது வழக்கம். ஒரு முறை சுவாமிநாதன் குடும்பம் பெருமுக்கல்லில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தனர்.
சங்கராச்சாரியார் , சுவாமிநாதனை அழைத்து பல கேள்விகளை கேட்டார். சுவாமிநாதன் பதில் அவரை வியக்க வைத்தது. அதோடு சுவாமிநாதனின் வசீகரகத் தோற்றம் !
இதற்குப் பிறகு ஒருநாள் - திண்டிவனத்தில் சுவாமிநாதன் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
சுவாமிநாதனைக் காணவில்லை. பெற்றோர் தவியாய் தவித்தனர் . குளம் , கிணறு என்றும்
தேடினார்கள்.
சுவாமிநாதன் எங்கே போனார் ? இரண்டு நாட்கள் ஒரு தகவலும் இல்லை.
மறுநாள் சங்கராச்சாரியாரிடம் இருந்து தகவல் வந்தது . ' ஆச்சாரியாரைக் காண சுவாமிநாதன் முக்கல் வந்திருக்கிறான்... கவலை வேண்டாம் ' என்று தகவல் !
இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினார் சுவாமிநாதன்.
மகனை பிரிவதற்கு ஒத்திகை நடத்தி காட்டினார் இறைவன் என்றே தோன்றுகிறது !
அடுத்த ஆண்டு 1907 - பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சுவாமிநாதன் தந்தைக்கு ஒரு தந்தி வந்தது. தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஊரில் இல்லை . திருச்சி போயிருந்தார்.
தந்தி சங்கராச்சாரியாரிடம் இருந்து - காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருந்தது. சுவாமிநாதனை உடனே அழைத்துக் கொண்டு வருமாறு !
தந்தையாரின் நண்பர்கள் , சுவாமிநாதனையும் அவர் தாயார் மகாலட்சுமியையும் ரெயில் மூலம் காஞ்சிபுரத்துக்கு அனுப்பினர்.
சங்கராச்சாரியார் - காஞ்சிபுரத்தில் இருந்து 30 மைல் தூரத்தில் உள்ள கலவையில் தங்கியிருந்தார்.
தாயாரை இருக்கும்படி செய்து , எந்த தகவலும் கூறாமல் , சிறுவன் சுவாமிநாதனை குதிரை வண்டியில் ஏற்றி கலவைக்கு அனுப்பி வைத்தனர் ஸ்ரீமடம் அதிகாரிகள்.
சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு வைசூரி கண்டிருந்தது. தன் ஆயுள் முடிகிறது என்பதை உணர்ந்த ஆச்சாரிய சுவாமிகள் தனக்குப் பின் சுவாமிநாதனை பீடத்தில் அமர்த்த முடிவு செய்திருக்கிறார் . அதற்காகவே சுவாமிநாதனை அழைத்து வர கட்டளையிட்டிருந்தார்.
ஆனால் , சுவாமிநாதன் வருவதற்குள் ஆச்சாரியாரின் நேரம் நெருங்கிவிடவே , தம்மிடம் சீடராக இருந்த லட்சுமிகாந்தன் என்பவரை தீட்சை கொடுக்க நேர்ந்தது.
சுவாமிநாதன் திரும்பச் சென்றார். ஆனால் 67 வது பீடாதிபதியாக பீடமேறியவர் எட்டு நாட்களே அதில் அமரும் படி நேர்ந்தது. இவரும் நோய் தாக்கி சித்தி அடைந்தார்.
மீண்டும் சுவாமிநாதன் கலவைக்கு அழைத்துவரப்பட்டார். தன் குருநாதர் விரும்பியவாறே , 67 வது பீடாதிபதி சுவாமிநாதனை வாரிசாக அறிவித்தார்.
13 - 2 - 1907 ல் 13 வது வயதில் அந்த சின்னஞ்சிறு பிராயத்தில் ஒரு புதன் கிழமை சுவாமிநாதன் துறவியானார். அவருக்கு முறைப்படி ஆசிரமம் தரப்பட்டது.
அன்று முதல் ஸ்ரீகாமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாக காட்சி தந்தார்.
சுவாமிநாதன் என்கிற அவரது பூர்வாசிரம பெயரே மறைந்து போனது.
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பது அவரது திருநாமம் ஆயிற்று.
சுவாமிகள் துறவறம் பூணுவதற்கு பெற்றோர் மனம் எளிதில் சம்மதிக்கவில்லை. மகனை பிரிய அவர்கள் தயாராக இல்லை.திடுக்கிட்டார்கள் . கண் கலங்கினார்கள்.
"நீங்கள் எனக்கு முழு மனதுடன் அனுமதி கொடுங்கள் " என்று சுவாமிகளே பெற்றோரிடம்
யாசித்தார்.
நேற்றுவரை சுவாமிநாதனாக உள்ளம் கவர்ந்த மகனை, தலை மொட்டையடிக்கப்பட்டு , தண்டம் , கமண்டலம் , காவி உடையுடன் ஆதிசங்கரர் போல பளபளத்த தோற்றத்தில் பெற்றோர் கண்டனர் . பெற்றோருக்கும் அவரே இனி குரு ..! தங்கள் மகனை - பிறகு அவரது பெற்றோர் பார்க்கவில்லை .
தெரியுமா ?
நல்ல சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வைணவ இலக்கணம் உண்டு .
நல்ல சீடன் - கொக்கு போல இருப்பான்
கோழி போல இருப்பான்
உப்பு போல இருப்பான்
கொக்கு காத்திருக்கிறது நல்ல மீன்வரும் வரை.
அதுபோல நல்ல விஷயங்களை காத்திருந்து அறியவேண்டும்.
கோழி குப்பையைக் கிளறி , தனக்கு வேண்டிய உணவை எடுப்பது போல , நல்ல
விஷயங்களை பொறுக்கி கிரகிக்க வேண்டும்.
உப்பு நீரில் ஒன்றாகக் கலந்து விடுவது போல ,
'தான்' இன்றி இறைவனுடன் கலந்து விடவேண்டும்.
(இன்னும் வரும்)
அக்டோபர் 04, 2007