தொடர்கள்

திரை இசைத்திலகம் கேவி மகாதேவன் -37

பி.ஜி.எஸ்.மணியன்

"நீங்கள் உங்கள் இசையில் தெய்வீகத்தை உணர வைக்கிறீர்கள்.  குழல் என்றால் கண்ணன், வீணை என்றால் சரஸ்வதி என்று இசையோடு தெய்வங்களையும் இணைத்தே பார்க்கிறீர்கள்.  நாதஸ்வரம் என்றால் உடனே கோயில்தான் ஞாபகம் வருகிறது....."

-ஆனந்த விகடனில் வெளிவந்த "நாதமெனும் கோவிலிலே" தொடர்கதையில் எஸ். லக்ஷ்மி சுப்பிரமணியம்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால நட்பு ஒரு கணத்தில் முடிவுக்கு வந்துவிட்ட போதும் கூட சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்திக்கொள்ளவில்லை.  பத்திரிகைகளில் பேட்டி என்ற பெயரில் லாவணி பாடிக்கொள்ளவில்லை.  அந்தப் பிரிவிலும் இருவரும் கண்ணியம் காத்தனர்.

"இதுநாள் வரை சேர்ந்திருந்தோம்.  இப்போது விலகிக்கொள்ளும் நேரம்.  நண்பர்களாகவே பிரிவோம்." - என்பதுபோலவே இருந்தது அந்தப் பிரிவு.

கே.வி.மகாதேவனுக்குப் பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான இசையமைப்பாளரானார்.   "வா ராஜா வா"  படத்தின் மூலம் ஏ.பி.நாகராஜனின் பாசறைக்குள் நுழைந்த குன்னக்குடி வைத்தியநாதன் நாகராஜனின் மறைவு வரையிலும் அவரது படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தார்.

அதே சமயம் சின்னப்பாதேவர் தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற புதிய படநிறுவனப் பெயரில் குறைந்த பட்ஜெட் படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார்.  தேவர் பிலிம்ஸ் என்பது எம்.ஜி.ஆருக்காக தத்தம் செய்யப்பட்ட ஒன்று.  அதில் கே.வி.மகாதேவனுக்கு மட்டும் தான் இடம்.

ஆனால் தண்டாயுதபாணி பிலிம்ஸ் நிறுவனப் படங்களிலோ சங்கர் கணேஷ், குன்னக்குடி வைத்தியநாதன் என்று புதியவர்கள் பலருக்கும் புகலிடமாக இருந்தது.  எம்.ஜி.ஆர் அரசியலில் தொடர்ந்து மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்ததால் தேவர் பிலிம்ஸ் என்ற பானெரில் படங்களையே காணமுடியவில்லை.

ஆகவே தேவர் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்துக் கொடுக்கும் வாய்ப்புகளும் கே.வி.மகாதேவனை விட்டுப் போய்க்கொண்டிருந்தன.

ஒவ்வொரு இயக்குனரும் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரை தனக்கென்று கட்டம் கட்டி வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்த நேரம் அது.

ஸ்ரீதருக்கு எம்.எஸ்.வி.  - கே. பாலச்சந்தருக்கு வி.குமார் (வி.குமாருக்கு பிறகு எம்.எஸ்.வி.) -

என்று புள்ளி குத்திக்கொண்டு செயல்பட்ட வேளையில் மகாதேவனுக்கு என்று இருந்த ஏ.பி.நாகராஜனும், தேவரும் விலகியதால் தமிழ் படவுலகில் கே.வி.மகாதேவனுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.  ஆனால் அதற்காக தளர்ந்துவிடவில்லை அவர்.

தெலுங்குப் படவுலகில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்தார் அவர்.  "மாமாவா?  அவர்தான் தெலுங்குக்குப் போய்விட்டாரே" என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு ஆந்திர தேசத்தில் அவரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது.

இந்த இடத்தில் தெலுங்குப் படவுலகில் அவரது மலை போன்ற சாதனைகளில் சிலவற்றையாவது குறிப்பிடாவிட்டால் இந்த வரலாறு முழுமையடையாது.

"மஞ்சி மனசுலு"(தமிழ் குமுதம் படத்தின் ரீ-மேக்)வின் மூலமாக 1961-இல் தெலுங்குப் படவுலகில் கே.வி.மகாதேவன் அறிமுகமானபோது அவருக்கு பக்க பலமாக நின்றவர் பாடகர் கண்டசாலா.  

கே.வி. மகாதேவனை அழைத்துக்கொண்டு மத்திய ஆந்திரம் முழுமையும் ஒரு சுற்றுப் பயணமாக சென்றார் கண்டசாலா.  "எங்கள் மக்களின் இசை ரசனையைப் புரிந்துகொள்ள இந்த பயணம் உங்களுக்கு கண்டிப்பாக உதவும்" -என்ற கண்டசாலாவுடன் மகாதேவன் மேற்கொண்ட பயணம் அவருக்கு ஆந்திர மக்களின் பரவலான இசை ரசனையைப் புரிந்துகொள்ள உதவியது.

அதற்கு தக்கபடி தெலுங்கில் தனது நடையை மாற்றிக்கொண்டார் கே.வி.மகாதேவன்.

பொதுவாக ஆதி தாளத்தைத் தான் இசையமைப்பாளர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.  அதே போலத்தான் கே.வி.மகாதேவனும்.  என்றாலும் தெலுங்கில் அதனை வழக்கமான சதுஸ்ர நடைக்கு பதிலாக மிஸ்ர நடையில் கையாள ஆரம்பித்தார் கே.வி.மகாதேவன்.  இந்த நடையை ஆங்கிலத்தில்"செவன் பீட் சைக்கிள்" அதாவது "ஏழு தட்டுச் சுழற்சி" என்பார்கள். இப்படிப் பயன்படுத்தும் போது அது பாடல்களுக்கு ஒரு "ரீஜனல் டச்" அதாவது மண்ணின் மனம் என்பார்களே அதனைக் கொடுக்கும்.  இந்த அடிப்படையில் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. 

இதனை அவரது முதல் படப் பாடல்களிலேயே உணரமுடியும்.  "மஞ்சி மனசுலு" படத்தின் பாடல்களுக்கான மெட்டுக்கள் "குமுதம்" படத்தில் அவர் பயன்படுத்திய அதே மெட்டுக்கள் தான் என்றாலும் அவற்றில் இனிமை சற்று தூக்கலாக இருப்பதை பாடல்களைக் கேட்கும்போது உணர முடியும்.

அந்த வகையில் தனது வெற்றிக்குப் பேருதவி புரிந்தவர் என்ற வகையில் கண்டசாலாவிடம் பெருமதிப்பும் அபிமானமும் கே.வி.மகாதேவனுக்கு இருந்தது.

மகாதேவனின் இசையில் தெலுங்கில் கண்டசாலாவும், பி. சுசீலாவும் பாடிய பாடல்கள் எல்லாமே கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்கள்.  

"எகவீரா" என்று ஒரு படம். என்.டி. ராமராவ், காந்தராவ், கே.ஆர்.விஜயா, ஜமுனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் கண்டசாலா - பி. சுசீலாவின் குரல்களில் கே.வி. மகாதேவன் அமைத்த "தோட்டலோ நா ராஜு"  - என்ற இனிமையான மெலடி - கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்.  என்.டி.ஆர். அவர்கள் படப்பிடிப்பில் இடைவேளைகளில் எப்போதும் இந்தப் பாடலை முணுமுணுத்துக்கொண்டே இருப்பாராம்.

இந்தப் படத்தில் தான் தனது ஆதர்சப் பாடகர் கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு மெலடியான பாடலை பாடும் வாய்ப்பு அறிமுகப் பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணித்துக்கு முதல் முதலாகக் கிடைத்தது.  

காந்தாராவுக்கு கண்டசாலாவும், என்.டி. ராமராவுக்கு எஸ்.பி.பி.யும் பாடிய "பிரதி ராத்திரி வசந்த ராத்திரி" என்ற அந்தப் பாடல்   மகாதேவனின் மெட்டில் சிறப்பான இடம் பெற்ற பாடல்.  பாடலுக்கான மெட்டும் இணைப்பிசையும் முதல் தரம்.  

கண்டசாலாவிடம் எந்த அளவுக்கு பிரியம் இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் முன்னேறிவந்து கொண்டிருந்த இளம் பாடகர் எஸ்.பி. பியிடமும் மகாதேவனுக்கு இருந்தது. 

பாடுவதற்கே சிரமம் என்று கருதக்கூடிய சவாலான பாடல்களையும் அந்த இளம் பாடகரைப் பாடவைத்தார் கே.வி.மகாதேவன்.

"பத்யம்" என்று ஒரு வகை கவிதை அமைப்பு உண்டு.  வசன நடையிலும், விருத்தமாகவும், பாடலாகவும் விரியும் ஒருவித அமைப்பு.  இந்த வகைப் பாடலைப் பாடுவது - அதுவும் - தெலுங்கில் - அவ்வளவு எளிதான விஷயமல்ல.  

"பெண்டியாலா"  போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாரும் இப்படி "பத்யம்" பாடவேண்டுமானால் கண்டசாலாவைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.  

எஸ்.பி.பி. பிரபலமாகிக் கொண்டிருந்தாலும் "பாவம் சின்னப்பையன்.  சிரமப்படுத்த வேண்டாம்" என்று அவரைத் தவிர்த்தே வந்தார்கள்.

முதல் முதலாக எஸ்.பி.பால சுப்ரமணியத்தை இந்த வகைப் பாடலைப் பாடவைத்து "இவராலும் இது முடியும்" என்று  தெரியப் படுத்தியவர் கே.வி.மகாதேவன் தான்.

இப்படிக் கடினமான உருப்படிகளை எல்லாம் அனாயாசமாகப் பாட எஸ்.பி.பியினால் முடியும் என்பதால் தான் "சங்கராபரணம்" என்ற மாபெரும் இசைக் காவியத்திலும் அவரையே பாடவைத்தார் கே.வி.மகாதேவன்.  (அதனைப் பற்றி சற்று பின்னால் பார்ப்போம்.)

அதனால் தானோ என்னவோ கே.வி. மகாதேவனைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் "மாமாவா?  அவர் ஒரு ஸ்வரப் பிரம்மா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

நாகேஸ்வர ராவ் - சாவித்திரி இணைந்து நடித்து ஆந்திரப் பிரதேச அரசினால் சிறந்த படம் என்ற விருதையும், பிலிம் பேர் பத்திரிகையின் சிறந்த தெலுங்குப் படம் என்ற விருதையும் பெற்ற படம் "மூக மனசுலு".

கே.வி. மகாதேவனை தெலுங்கில் அறிமுகப் படுத்திய தனது ஆஸ்தான இசையமைப்பாளராக மாற்றிக்கொண்ட ஏ. சுப்பாராவ் அவர்கள் இயக்கிய படம் இது.   நெருடலான கதையம்சம் கொண்ட முற்பிறவி மறுபிறவிக் கதை.  இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் அமைந்த பாடல்களை கண்டசாலாவும், பி. சுசீலாவும் பாடியிருந்தனர்.  

இந்தப் படத்தை தமிழில் தானே தயாரித்து இயக்கி தனக்குத் தானே ஒரு சரிவை நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்.   ஆம்.  தமிழில் சாவித்ரியின் இயக்கத்தில் வெளிவந்த "ப்ராப்தம்" படத்தின் மூலம் இந்த "மூக மனசுலு"தான்.

தமிழுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார்.  படம் படுத்துவிட்டாலும் பாடல்கள் இன்று வரை நிலைத்திருக்கின்றன.

தமிழில் இடம் பெற்ற "சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து" பாடலின் தெலுங்கு வடிவம்  " நா பாட நீ நோட" என்று கே.வி.மகாதேவனின் இசையில்.  இரண்டுமே வெற்றிப்பாடல்கள் தான் என்றாலும் இரண்டுக்கும் தான் எத்தனை வித்தியாசம்.  தெலுங்குப்- பாடலில் பி.சுசீலாவின் குரலில் இனிமையும் மதுரமும் பொங்கி ப்ரவகிப்பதை கேட்கும் போது பாடலும், மகாதேவனின் மெட்டும்,  இணைப்பிசையும் மனதை மயக்குகின்றன.  பி.சுசீலாவுடன் இந்தப் பாடலில் இணைபவர் கண்டசாலா.   

"ஈ நாட்டி ஈ பந்தம்"  - கண்டசாலா , பி. சுசீலாவின் குரல்களில் மறுபடி மறுபடி இடம் பெறும் ஒரு டூயட் பாடல்.  படத்தின் "தீம் சாங்" இதுதான். 

(இதனைத் தான் மெல்லிசை மன்னர் முற்றிலும் வேறுபட்ட பாணியில் "சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" என்று தமிழில் போட்டிருந்தார்)

"கோதாரி கட்டுந்தி"  - பி. சுசீலா தனித்துப் பாடும் ஒரு உற்சாகப் பாடல்.

(தமிழில் "இது மார்கழி மாதம். நல்ல முன்பனிக்காலம்" என்று எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும்.)

"முட்டபந்தி பூவுலோ" என்று கண்டசாலா பாடும் பாடல் மனதை வருடுகிறது.    (நேத்துப் பறிச்ச ரோஜா - என்று டி.எம்.எஸ். குரலில் எம்.எஸ்.வி. தமிழில் கொடுத்திருந்தார். )

 இப்படி தெலுங்கில் மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்கள் அது எதுவானாலும் சரி..  மகாதேவனின் இசை மக்களை மயங்க வைக்கத் தவறவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தமிழில் தான் பணிபுரிந்த அதே கதைக்கு தெலுங்கில் இசை அமைக்கும் போதும், அதே போல தெலுங்கிலிருந்து தமிழுக்கு இடம் மாறிய படத்துக்கு இசையமைக்கும் போதும் சரி - இரு  தரப்பு ரசிகர்களின் ரசனைக்கும் தகுந்த தீனி போடத் தவறவில்லை அவர்.

தெலுங்கில் அவர் இசையில் வெளிவந்த வெற்றிப் பாடல்களைச் ;சொல்லப்போனால்  அதற்கே இன்னும் பத்து அத்தியாயங்கள் வேண்டும்.

என்றாலும் நமக்கெல்லாம் சற்று அறிமுகமான படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.  பாடல்கள் யு-டியூப் தயவால் நமக்கே கேட்கக் கிடைக்கின்றன.

"ப்ரேம்நகர்", "சீதா கல்யாணம்"  (ஜெயப்ரதா அறிமுகமான முதல் படம்), "சிரிசிரி முவ்வா" "கோரிண்டாகு" "செல்லல்லி காபுரம்" "பண்டண்டி காபுரம்"  (அன்புச் சகோதரர்கள் என்று தமிழில் வெளிவந்தது.  தமிழிலும் கே.வி.மகாதேவன் தான் இசை. "முத்துக்கு முத்தாக" என்ற கண்டசாலாவின் பாடல் இன்றுவரை நிலைத்திருக்கிறது.  கண்டசாலா அவர்களின் கடைசிப் பாடலும் இதுதான்)   "ஸ்ருதிலயாலு"  (டாக்டர் ராஜசேகர் நடித்த மாறுபட்ட இசைப் படம்.  இந்தப் படத்தில் வாணிஜெயராம் அவர்கள் பாடிய "ஆலோகயே ஸ்ரீ பாலக்ருஷ்ணம்" என்ற நாராயண தீர்த்தரின் தரங்கம் படத்திற்கே ஒரு ஸ்பெஷல்.   "சிரிவெண்ணிலா" (இந்தப் படத்தில் பிரபல புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் சௌராஸியா படத்தின் புல்லாங்குழல் பகுதிகளை அமைத்திருந்தார்.  கே.வி.மகாதேவனும், சௌராஸியா அவர்களும் இணைந்து பணியாற்றிய படம் இது.) 

"சிரிசிரி முவ்வா"  படத்திற்கான பாடல் ஒலிப்பதிவில் ஒரு சுவராஸ்யமான சம்பவம்.

ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.  சற்று இடைவேளை நேரம்.  வாத்திய கோஷ்டியில் பங்கு பெற்றிருந்த பெரும்பாலான கலைஞர்கள் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியே வந்து சற்று ரிலாக்ஸ்டாக இருந்த நேரம்.  கூடத்துக்குள் மகாதேவன், புகழேந்தி, சொற்ப அளவில் இசைக் கலைஞர்கள்,  பி. சுசீலா, எஸ்.பி.பி.  ஆகியோரும், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் கே. விஸ்வநாத் அவர்களும் மட்டுமே இருந்தார்கள்.

சட்டென்று மகாதேவனின் குரல் "பாக் அப்" என்று சொன்னது.  அதாவது ரிக்கார்டிங் முடிந்துவிட்டது என்று அர்த்தம்.  வெளியே இருந்தவர்கள் மட்டும் அல்ல.  உள்ளே இருந்த இயக்குனர் விஸ்வநாத் அவர்களுமே ஆடிப்போனார்கள்.

"என்னது இது?  நெறைய பேரு வெளியே நிக்கறாங்களே?" என்று தனது சந்தேகத்தை கேட்டே விட்டார் இயக்குனர் விஸ்வநாத்.

"அதனாலே என்ன?  பாட்டைக் கேட்டீங்க இல்லையா?'

"ஆமாம்". 

"நல்லா இருந்ததா?"

"இருந்தது".

"வார்த்தைகள் துல்லியமா கேட்டதா?"

"ம்ம்.  கேட்டது".

"ஸ்ருதியோட சேர்ந்து இருந்ததா?'

"ஆமாம். பெர்பெக்டா இருந்தது".

"இது போதும்.  இதுதான் பாட்டு" என்று சலனமில்லாமல் சொல்லிமுடித்தார் கே.வி.மகாதேவன்.

கேட்பதற்கு நன்றாக இருக்கவேண்டும்.  ஸ்ருதியோடு சேர்ந்து இருக்க வேண்டும்.  பாடல் வரிகள் துல்லியமாகப் புரியவேண்டும்.  இவைதான் ஒரு நல்ல பாடலின் இலக்கணம்.  இதனை கடைசி வரை மீறாமல் இருந்தார் கே.வி.மகாதேவன்.

***************

இப்படி தெலுங்கில் பிசியாக இருந்தபோதும் தமிழ்ப் படவுலகம் அவரை மறக்கவில்லை என்பதற்கு அடையாளமாக கிடைத்து வந்த வாய்ப்புகளை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையால் ரசிகர்களை வியக்க வைத்துக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன்.

அதற்கு அவருக்கு பேருதவி புரிய வந்தாள் "ஆதி பராசக்தி"

(இசைப் பயணம் தொடரும்...)

(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)

 ஜனவரி   06 , 2015