தொடர்கள்

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 13

பி.ஜி.எஸ்.மணியன்

"நமது கலாச்சாரத்தில் இசைக் கருவிகளுக்கு நாம் ஒரு உயர்ந்த புனிதமான இடத்தைக் கொடுத்திருக்கிறோம்.  அவைகளை கடவுளின் பிம்பமாகவே கருதுகிறோம்."  -  சிதார் இசைக் கலைஞர் பண்டிட்  ரவிசங்கர்.

 "நல்ல இடத்து சம்மந்தம்"  - நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமியும், ஏ.பி. நாகராஜனும் இணைந்து "மக்களைப் பெற்ற மகராசிக்கு" பிறகு தயாரித்த படம்.

எல். ஆர். ஈஸ்வரி ஒரு பாடகியாக அறிமுகமான இந்தப் படத்தில் அவருக்கு மூன்று பாடல்கள்.  

"புதுப் பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு" என்ற பாடலை எல்.ஆர். ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடியவர்கள் கஸ்தூரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி.

ஆனால் படத்தில் பிரபலமான பாடல் என்றால் அது மருதகாசி எழுதிய "பொண்ணு மாப்பிளே ஒண்ணா போகுது ஜிகுஜிகு வண்டியிலே" என்ற பாடல் தான்.  இந்தப் பாடலை அவரை கஸ்தூரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகிய இருவருடனும் சேர்ந்து பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.  ஆனால் மூவர் குரலிலும் ஈஸ்வரியின் குரல் தனியாக ஒலித்து அவரை அடையாளம் காட்டியது.

"இவரே தான் அவரு."  பாடல் எல்.ஆர். ஈஸ்வரி தனியாகப் பாடிய முதல் பாடல்.  

படம் வந்த புதிதில் பிரபலமான, வானொலி நிலையத்தாரால் அவ்வப்போது அறுபதுகளின் இறுதிவரை ஒலிபரப்பப் பட்டு வந்த பாடல்கள் மெல்ல மெல்ல புழக்கத்தை விட்டு மறைந்தே போயின.

1958ஆம் ஆண்டு கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் வெளிவந்த படங்களில் கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு பாடல்களாவது "ஹிட்" பாடல்களாகி விடும்.

"பெரிய கோவில்" என்ற படம்.  கே.சோமுவின் இயக்கத்தில் ஏ.பி. நாகராஜனின் கதை வசனத்தில் வெளிவந்த படம்.

"பெற்ற தாய்தான் ஒரு பெரிய கோவில்" என்ற கருத்தை உள்ளடக்கிய இந்தப் படத்தில் பிரேம் நசீர், எம். என். ராஜம், கண்ணாம்பா, வி.கே. ராமசாமி, கள்ளபார்ட் நடராஜன், சந்திரகாந்தா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.

மருதகாசி எழுதி கண்ணாம்பா பாடுவதாக அமைந்த "கண்ணே கமலப்பூ காதிரண்டும் வெள்ளரிப்பூ" என்று தொடங்கும் பாடல் பி. லீலா பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.  மகாதேவன் இசை அமைத்த இந்தப் பாடல் மிகவும் மென்மையாக மனதை வருடக்கூடிய ஒரு பாடல்.

தன் மகனின் குழந்தைக்கு பாட்டுப்பாடி ஒரு தாய் சாப்பிடவைப்பது போன்ற ஒரு காட்சி அமைப்பு.  சாதரணமாக இந்த மாதிரி "குழந்தையைக் கொஞ்சும் பாடலா.  கூப்பிடு ஆர். பாலசரஸ்வதியை" என்று அவரைத்தான் கூப்பிட்டு பாடவைப்பார்கள்.

ஆனால்..  மகாதேவனோ பி. லீலாவைப் பாடவைத்திருக்கிறார்.  பி. லீலாவின் குரல் சற்று காத்திரம் மிகுந்த குரல்.  அழுத்தம் தொனிக்கும் குரல்.  அந்தக் குரலில் இப்படி ஒரு மென்மையான பாடலா என்று வியக்க வைக்கிறது "கண்ணே கமலப்பூ" பாடல். 

இந்தத் தொடருக்காக நடிகர் திரு. சிவகுமார் அவர்களை நான் தொடர்பு கொண்டபோது கே.வி. மகாதேவன் இசையில் தன்னைக் கவர்ந்த பாடலாக இந்தக் "கண்ணே கமலப்பூ" அவர் கூறியதோடு அல்லாமல் பாடல் வரிகளையும் அப்படியே தொலைபேசி வாயிலாக என்னிடம் கூறியபோது பிரமித்துப் போனேன்.

படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பிறகும் ஒருவரால் பாடல் வரிகளை கூறமுடிகிறது என்றால்... அந்தப் பாடல் எத்தகைய தாக்கத்தை அவரிடம் ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

பெரிய கோவில் படத்தில் பிரபலமான இன்னொரு ஜோடிப்பாடல்.

"வலை வீசம்மா வலை வீசு.  வாளை மீனுக்கு வலை வீசு"  பாடல்.  சீர்காழி கோவிந்தராஜனும், பி. சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.  வலையை இருவரும் வாளமீனுக்கு  வீசவில்லை.  கேட்பவர்கள் மனதுக்கு அல்லவா வீசி இருக்கிறார்கள்!.

தொடர்ந்து சின்னப்பா தேவரின் "செங்கோட்டைச் சிங்கம்" படத்துக்கும் இசை அமைத்தார் கே.வி. மகாதேவன்.

படம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதால் பாடல்களும் நம் செவிப்புலன்களை ஈர்க்கத் தவறிவிட்டன.

அதே ஆண்டு (1958)  கே.வி. மகாதேவன் -  ஏ.பி. நாகராஜன் - கே. சோமு ஆகிய மூவர் கூட்டணி இன்னொரு மகத்தான வெற்றிச் சாதனையைப் புரிந்தது.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மகாதேவனின் திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி ஒரு முதல் தரமான இசை அமைப்பாளர் என்ற புகழை அவருக்கு கொண்டுவந்து சேர்த்தன.

அந்தப் படம் தான் "சம்பூர்ண ராமாயணம்".  

என்.டி. ராமராவ், பத்மினி, சிவாஜி கணேசன், நரசிம்மபாரதி, டி.கே. பகவதி, எம்.என். ராஜம், சி.டி. ராஜகாந்தம்,  ஜி. வரலக்ஷ்மி,  நாகையா, சந்தியா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருந்தது.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பார்த்த ஒரே திரைப்படம்.  "இந்தப் படத்தில் நான் ராமனைப் பார்க்கவில்லை.  பரதனைத்தான் பார்த்தேன்" என்று அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வியந்த படம்.

ஏ.பி. நாகராஜனின் முதல் புராணப் படம் இதுதான்.  ஆனால் இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை.  கே.சோமு தான் இயக்கினார்.  படத்துக்கு கதை வசனம் மட்டும் ஏ.பி. நாகராஜன்.  ஆனால் இந்தப் படத்துக்காக அவர் உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல.  நிறையப் படித்து ஆராய்ச்சிகள் செய்து பல மேதைகளைச் சந்தித்து அறிவை வளர்த்துக்கொண்டு...  உயர்ந்தார் அவர்.

அவருக்கு இசையால் பக்க பலமாக நின்றார் கே.வி. மகாதேவன்.

மகாதேவனும், புகழேந்தியும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டார்கள்.   பாடல்களிலும் சரி,  பின்னணி இசையிலும் சரி -  படத்தை இசையால் ஒரு தூணாக தாங்கி நின்றார் மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.

ராமாயணம் முழுவதையும் மூன்று மணி நேரத்துக்குள் படச் சுருளுக்குள் அடைப்பது என்றால் ...  முக்கியமான கட்டங்களுக்குத்தான் வசனத்தை பயன்படுத்த முடியும்.  மற்றவற்றை எல்லாம் பாடல்களில் தான் சொல்லியாக வேண்டும்.  ஆனால் மகாதேவன் மனம் தளரவில்லை.  மிகுந்த உற்சாகத்துடன் உழைத்தார். 

பாடல்கள் ஒவ்வொன்றும் ராகக் களஞ்சியங்கள்.

அனைத்துப் பாடல்களையும் எளிமையாக, அழகாக, அற்புதமாக வடிவமைத்தவர் கவிஞர் மருதகாசி.

வனவாசம் சென்ற ராமனைத் தேடி பரதன் வருகிறான்.

"அன்னையும் பிதாவுமாகி அறிவூட்டும் ஆசானுமாகி" என்று விருத்தமாக ஆரம்பிக்கும் பாடல்.  யதுகுல காம்போஜி ராகத்தில் துவங்கும் பாடலில் "என் மனம் அறியாயோ என் அரும் தமையனே" என்று அடாணாவில் தொடர்ந்து..  "ஏன் பிரிந்தீர் என்னை ஏன் பிரிந்தீரோ இந்த வேதனை நான் இனி தாளேன்." என்று ஜோன்புரியில் பாடலாக மாறி "ராமா ராகவா அருமை ராமா ராகவா" என்று பாடலை உச்சத்துக்கு கொண்டுசெல்லும்போது பரதனின் துடிப்பை கேட்பவர் யாராக இருந்தாலும் உணர முடியும்.  

பரதனுக்காக (சிவாஜி கணேசன்) பாடி இருப்பவர் டி.எம். சௌந்தரராஜன்.  (ஹரிதாஸ் படத்தில் வரும் "என்னுடல் தனில் ஈ மொய்த்தபோது" என்று துவங்கும் "தாயே தந்தையே" பாடலின் அப்பட்டமான காப்பிதான் இந்தப் பாடல்..   இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதனின் பாதிப்பு கே.வி. மகாதேவனிடம் இருந்ததை பாடல் உணர்த்துகிறது. )

ராமனிடம் பாதுகை பெற்று திரும்பும்போது பரதனும் சத்ருக்னனும் பாடுவதாக அமைந்த "பாதுகையே துணையாகும்" என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜனும்  சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடி இருக்கின்றனர்.  சாமா,  பீலு ஆகிய இரண்டு ராகங்களை இணைத்து இந்த ராகமாலிகைப் பாடலை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் கே.வி. மகாதேவன். 

சபரி மோட்சம், அனுமனைக் காணுதல், சுக்ரீவனுடன் நட்பு, வாலிவதம், சுக்ரீவ பட்டாபிஷேகம், அனுமன் கடல் தாண்டுதல் ஆகிய கட்டங்களை உள்ளடக்கிய பாடல் "சபரிக்கு ராமனும்" என்று துவங்கும் பாடல்.  

அசரீரிப் பாடலான இந்தப் பாடலை பூர்வி கல்யாணி, சிவரஞ்சனி, மாயமாளவ கௌளை, சாரங்கா, மோகனம், சாமா ஆகிய ராகங்களைக் கையாண்டு அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். வெண்கலக் குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் இந்தப் பாடலைப் பாடியிருக்கும் அழகே தனி.

ராகங்கள் ஒவ்வொன்றையும் கே.வி. மகாதேவன் லாகவமாகக் கையாண்டு அனாயாசமாக இணைத்திருக்கும் அழகும் அவரது உழைப்புக்கும், திறமைக்கும் அருமையான எடுத்துக்காட்டு.

ஆனால். .  காட்சிகளோடு இணைந்த பாடல்கள் என்பதாலோ என்னவோ இந்தப் பாடல்களை வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும் கேட்கவோ காணவோ முடிவதில்லை.

அப்படி என்றால் நேயர்யர்களின் விருப்பமான பாடல்கள் எதுவுமே "சம்பூர்ண ராமாயணத்தில்" இல்லையா என்று நமக்குத் தோன்றலாம்.

இருக்கின்றன.  அந்த பாடல்களில் ஒரு வினோதம் இருக்கிறது.  ஏன். சம்பூர்ண ராமாயணம் படத்திலேயே இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலேயும் காணவே முடியாத ஒரு புதுமையான கையாளல் ஒன்றும் இருக்கிறது. 

"அதென்ன சார் புதுமை?" - என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

அடுத்த இடுகை வரை கொஞ்சம் காத்திருங்களேன் ப்ளீஸ்.

(இசைப் பயணம் தொடரும்...)

பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஜுலை   07 , 2014