தின வர்த்தகம் - வரமா? சாபமா?
"ஷேர் ட்ரேடிங்" என்பதை எத்தனையோ பேர் ஒரு சூதாட்டமாகத்தான் பார்கிறார்கள். அதில் ஜெயிப்பதற்கு நிறைய அதிர்ஷ்டம் வேண்டும் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். இதில் உன் கருத்து என்ன?"
பங்குச்சந்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டால் எனது அபார்ட்மெண்ட் நண்பருக்கு, (என்னை விட 20 வயது மூத்த ஒருவரை நண்பர் என்று சொல்லலாமா?) எங்கிருந்தோ ஒரு வயதுக்கு சம்பந்தம் இல்லாத சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். முகத்தில் ஒரு ஒளி வந்து ஒட்டிக்கொள்ளும். அவரது மனைவி கொண்டு வந்து வைத்த வீட்டு முறுக்கைக் கொறித்துக்கொண்டே, பேச ஆரம்பித்தோம்.
"என்னைப் பொருத்தவரை அது ஒரு சூதாட்டம்தான் சார். கண்டிப்பாக அதிர்ஷ்டம் வேண்டும்" என்று என்னுடைய கருத்தைச் சொன்னேன்.
"எதனால் சூதாட்டம் என்கிறாய்?"
"பங்குகளின் விலை எப்படிப் போகும் என்பதையே கணிக்க முடியவில்லையே? ஒரு நாள் ஏறுகிறது. சரி. உயரப் போகிறது என்று வாங்கினால் உடனே சரிந்து விடுகிறது. நாம் விற்ற அடுத்த கணம் மறுபடி உயர்ந்து உயர்ந்து எங்கேயோ போய் விடுகிறது. இதனை அதிர்ஷ்டம் , சூதாட்டம் என்று சொல்லாமல் என்ன சொல்லுவது?"
"சரி விடு. நீ தோற்ற வெறுப்பில் பேசுகிறாய். முதலில் அன்று நான் சொன்னதைப் போல் பங்குச் சந்தையில் எத்தனை வகைகளில் வர்த்தகம் பண்ணலாம் என்பது பற்றி பேசலாம்" என்றார். நான் கொஞ்சம் நகர்ந்து வசதியாக அமர்ந்துகொண்டு அவர் சொல்லுவதைக் கேட்க தயாரானேன்.
"உனக்கு எவ்வளவு தெரியும் என்று முதலில் சொல்." என்று டீயை உறிஞ்சிக் கொண்டே கேட்டார்.
"சார். எனக்குத் தெரிந்து பங்குகளை வாங்கி அன்றே விற்றுவிடலாம், இதற்கு Intraday Trading என்று பெயர்.இல்லையென்றால் பொறுமையாக வைத்திருந்து எப்போது லாபம் வருகிறதோ அப்போது விற்கலாம். அது சில நாட்கள் அல்லது வாரங்களாகவோ, மாதங்களாகவோ அல்லது வருடங்களாகவோ கூட இருக்கலாம். இதற்கு Positional Trading அல்லது Delivery based ட்ரேடிங் என்று சொல்லுகிறார்கள்.இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் நம் கையில் பங்குகள் இல்லாமலே விற்று விட்டு பின்னர் மீண்டும் விலை குறைந்தவுடன் வாங்கலாம்.என்பதும் தெரியும். அதற்கு கூட என்னமோ பெயர் சொன்னீர்களே. இந்த மூன்றுதான் இப்போதைக்குத் தெரியும். அதுவும் கொஞ்சம்தான் தெரியும்."
"அதனை Short Selling என்று சொல்லுவார்கள். சுருக்கமாக Short போவது என்பார்கள்.(Go Short ). அதேபோல் பங்குகளை வாங்குவதற்கு Long போவது என்று சொல்லுவார்கள்.(Go Long).நான் இப்போது ஒவ்வொன்றாக சுருக்கமாக தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். அதன் பின் உன்னுடைய பங்குச் சந்தை அறிவை வளர்த்துக் கொள்வது உன் கையில் இருக்கிறது. இன்டர்நெட்டிலும், புத்தகங்களிலும் நிறைய விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன.அவை எல்லாவற்றையும் விட நீ வர்த்தகம் செய்து பெறக் கூடிய அனுபவங்கள் உனக்கு நிறைய கற்றுக் கொடுக்கும்." என்று சொல்லிவிட்டு அவர் பேசியதையும், அதன் பின்னர் நான் படித்துத் தெரிந்துகொண்ட,அனுபவங்களில் கற்றுக்கொண்ட விஷயங்களை முடிந்தவரை தெளிவாகப் புரியும் அளவுக்கு தொடர் முழுவதும் விரிவாக சொல்லுகிறேன். இது போன்ற தொடர்களில் விறுவிறுப்புக்காக கற்பனையைக் கலக்க முடியாது. அதே சமயம் "Economics " பாடப் புத்தகம் போலவும் எழுதிவிட முடியாது. அதனால் முடிந்தவரை உங்களை ஈர்க்கும் அளவுக்கு எழுத முயற்சி செய்கிறேன். சில சமயங்களில் கண்ணைக் கட்டுவது போல தோன்றினாலும் பொறுமையாக படியுங்கள் புரிந்து கொள்ளுங்கள். வெற்றி உங்கள் வசம்.
Intraday Trading : (தின வர்த்தகம்)
முதலாவதாக இந்த Intraday Trading பற்றி பேசலாம். இது நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பங்குகளை அன்றே வாங்கி அன்றே விற்பது. இவர்களுக்கு பங்குகளை வாங்கி பொறுமையாக வைத்திருந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்னால் விற்பது எல்லாம் ஒத்துவராது. லாபமோ நஷ்டமோ அன்றே கடையைக் கட்டவேண்டும். இதிலும் கூட மூன்று வகைகள் உண்டு. எல்லோரும் சாப்பிடுவது பிரியாணிதான் என்றாலும் ஒருவர் காரம் குறைவாகவும், ஒருவர் மிதமாகவும், ஒருவர் நாக்கு செல்கள் செத்துப் போகும் அளவுக்கு காரமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்பதில்லையா? அதேபோல்தான் இதுவும். இதில் முதல் வகையினர் காலையில் சந்தை ஆரம்பிக்கும் நேரத்தில் தனக்கு இஷ்டமான ஒரு பங்கினை தன்னிடம் இருக்கும் தொகைக்கு வாங்குவார். சுமார் இரண்டு சதவிகிதம் லாபம் வந்தால் விற்றுவிட சொல்லி புரோக்கருக்கு சொல்லிவிடுவார். விலை குறையும் பட்சத்தில் ஒரு சதவிகிதம் சரிந்தால் விற்றுவிட சொல்லிவிடுவார். இதனை புரோக்கரிடம் நேரடியாகவோ அல்லது போனிலோதான் சொல்லவேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலேயே வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டளைகள் பிறப்பிக்க "லிமிட் ஆர்டர்" என்றும் "ஸ்டாப்லாஸ் ஆர்டர்" என்றும் உள்ளன. நீங்கள் சொன்ன விலையைத் தொடும்போது வாங்குதலோ அல்லது விற்றலோ தன்னிச்சையாக நடைபெற்றுவிடும். இதைப் பற்றிப் பின்னால் விரிவாக பேச உள்ளோம். இந்த முதல் வகையினர் ஒரு நாளைக்கு சராசரியாக 10 நிமிடங்களுக்கு மேல் செலவிடும் அவசியம் இல்லை. காலையில் பங்குகளை வாங்குவது மட்டும்தான் இவரது வேலை. அதன்பின் வேறு வேலை இருந்தால் பார்க்கப் போய்விடுவார். வேலை இல்லையென்றால் எங்காவது அது மாதிரி படங்களுக்கு 11 மணிக்காட்சிக்குப் போகலாம். லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொள்வார்.(வேறு வழி?) மெதுவாக 40 கிலோமீட்டரில் போனால் போதும், லேட் ஆனால் பரவாயில்லை. வீட்டுக்குப் போனால் போதும் என்று நினைப்பவர்கள்.
இந்த இரண்டாவது வகையினர் கொஞ்சம் வேறுபட்டவர்கள். இவர்களுக்கு கம்ப்யூட்டர் முன்னாலேயே இருக்க வேண்டும். விலை ஏறுவதும் இறங்குவதும் பார்த்து மார்பு படபடக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பான போக்குவரத்தில் 100 கிலோமீட்டரில் பயணிக்கும் "த்ரில்" வேண்டும் இவர்களுக்கு. தொலைக்காட்சியிலோ அல்லது இணையத்திலோ ஏதாவது நிறுவனம் குறித்து பரபரப்பான செய்திகள் வருகின்றனவா என்று பார்த்தவண்ணம் இருப்பார்கள். அந்த செய்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் உடனே அந்தப் பங்குகளை வாங்குவார்கள். பெரும்பாலும் அந்த பங்குகளின் விலை ஏறும். தனக்குப் போதுமான லாபம் வந்தவுடன் விற்றுவிடுவார்கள். போன அத்தியாயத்தில் திரு.சுதிர்குமார் "உம்" கொட்டிக் கொண்டே செய்தது இதுதான். முடித்துவிட்டு உடனே அடுத்த செய்திக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுவார்கள். உதாரணமாக நேற்று (11.03.2013) Amteck Auto என்ற நிறுவனம் ஜெர்மனியைச் சார்ந்த NeumayerTekfor குழுமத்தை வாங்கப் போகிறது என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் சில மணி நேரங்களில் 7 சதவிகிதம் உயர்ந்தன. 7 சதவிகிதம் வேண்டாம் ஒரு நாளில் 3 சதவிகிதம் என்பதே பெரிய விஷயம்தானே. நான் வர்த்தகம் செய்ய ஆரம்பித்த காலத்தில் ஒருநாள் இன்போசிஸ் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்து இருப்பதாக செய்தி வந்தது. உடனே அந்த பங்குகளை அவசரமாக வாங்கினேன். பார்த்தால் நான் வாங்கியவுடன் விலை சரசரவென சரிய ஆரம்பித்தது. ஒன்றும் புரியவில்லை. நல்ல நஷ்டத்தில் பங்குகளை விற்ற பின்னர்தான் தெரிந்தது. என்னதான் இன்போசிஸ் லாபம் காட்டினாலும் அது போன வருடத்தோடு ஒப்பிடுகையில் குறைந்த லாபமாம். அதனால் விலை குறைந்து விட்டதாம். எப்படி இருக்கிறது கதை?
இந்த மூன்றாவது பிரிவினர் இருக்கிறாகளே. இவர்கள் ரொம்பவே வித்தியாசம். தேசிய நெடுஞ்சாலையில் 100 கிலோமீட்டர் எல்லாம் இவர்களுக்கு த்ரில் தராது. மலைப்பாதையின் ஹேர்பின் வளைவுகளில் 100 கிலோமீட்டரில் போனால்தான் இவர்களுக்கு த்ரில். இவர்களுக்கு இரண்டாம் வகையினரைப் போல ஒரு வர்த்தகத்திற்கு 3 சதவிகிதம் எல்லாம் வேண்டாம். வெறும் 0.3 சதவிகிதம் போதும். ஆனால் ஒரு நாளைக்கு 10 முறை வர்த்தகங்கள் செய்து அதே 3 சதவிகித லாபத்தை அடைந்து விடுவார்கள். சில சமயங்களில் அதற்கு அதிகமாகவும் கூட. (சில சமயங்களில் மைனஸ் 3 சதவிகிதமும் வரலாம்). உதாரணத்திற்கு பிப்ரவரி 13ஆம் தேதி IDBI நிறுவனப் பங்குகள் குறைந்த பட்சமாக ரூபாய் 98.50க்கும் அதிகபட்சமாக ரூபாய் 102.15க்கும் விற்பனையானது. இந்த மூன்று ரூபாய் 65 பைசா உயர்வு என்பது ஒரே யடியாக நேர்கோட்டில் இருந்துவிடாது. 50 பைசா உயர்வதும் பின்னர் 20 பைசா சரிவதும், பின்னர் மேலும் ஒரு ரூபாய் உயர்வதும் அதிலிருந்து 50 பைசா சரிவதும் என்று மாறி மாறி இருக்கும்.இந்த ஏற்ற தாழ்வுகளை மூன்றாம் பிரிவினர் சரியாக உபயோகித்துக் கொண்டு ஒவ்வொரு உயர்விலும் சரிவிலும் வர்த்தகம் செய்து சின்ன சின்னதாய் லாபம் பார்ப்பார்கள். ஒரு வர்த்தகத்திற்கு அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இந்த முறை வர்த்தகத்தை ஆங்கிலத்தில்"Scalping " என்பார்கள். இந்த பிரிவினரை "Scalper" என்பார்கள்.
இந்த Intraday Trading எனப்படும் தின வர்த்தகம் எல்லோரையும் கவர ஒரு காரணம் அதில் இருக்கும் த்ரில் மட்டும் இல்லை. "மார்ஜின் மணி" (Margin Money) எனப்படும் இரண்டு வார்த்தை மந்திரம்தான். உங்களிடம் இருக்கும் பணத்தைக் காட்டிலும் பன்மடங்கு தொகைக்கு நீங்கள் வர்த்தகம் செய்ய முடியும் என்பதுதான். உதாரணமாக உங்களிடம் 10000 ரூபாய் இருக்கிறது என்றால் 40000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் புரோக்கரைப் பொறுத்து வர்த்தகம் செய்யலாம். (புரோக்கர்கள் 4 முதல் 10 மடங்கு வரை மார்ஜின் பணம் தருவார்கள்). உதாரணத்திற்கு நாம் பார்த்த Amtech Auto வர்த்தகத்தில் 10000 ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருந்தால் 300 ரூபாய் லாபம் பார்த்திருக்கலாம். இதுவே மார்ஜின் பணம் உபயோகித்து ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருந்தால் 3000 ரூபாய் லாபம். (30 சதவிகிதம்). மார்ஜின் பணம் உபயோகித்து நஷ்டம் வந்திருந்தால் 30 சதவிகிதம் போகவும் வாய்ப்பு உண்டு இல்லையா என்று கேள்வி எழுகிறதா? இதில் என்ன சந்தேகம்? தெள்ளத்தெளிவான நஷ்டம்தான். ஆனாலும் இப்படி பலமான அடிகளில் இருந்து தப்பித்து நல்லபடியாக லாபம் மட்டுமே பார்க்கும் பல வழிமுறைகள் உள்ளன.(பின்னால் பார்க்கப் போகிறோம்)
மார்ஜின் பணம் உபயோகித்து வர்த்தகம் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக நீங்கள் ஆரம்பித்த வர்த்தகத்தை அன்றே முடித்து விடவேண்டும். பங்குகள் வாங்கியிருந்தால் விற்றும், விற்று இருந்தால் வாங்கியும் சரிசெய்து விட வேண்டும். (Square Off ). பெரும்பாலான புரோக்கர்கள் "Auto Square Off" என்று ஒன்று வைத்துள்ளார்கள். சரியாக மதியம் 3.10 மணிக்கு உங்களுக்கு லாபமோ நஷ்டமோ அவர்களாகவே விற்றோ வாங்கியோ சரி செய்து விடுவார்கள். அது எப்படி என் அனுமதி இல்லாமல் செய்தீர்கள் என்று கேட்க முடியாது. இந்த தொந்தரவுகளில் இருந்து எல்லாம் தப்பிக்க ஒரு வழி மார்ஜின் பணம் உபயோகிக்காமல் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு மட்டும் வர்த்தகம் செய்வது, இல்லையேல் சரியாக விஷயம் தெரிந்து கொண்டு , விலையின் போக்கைக் கணித்துக் கொண்டு செய்வது. மொத்தத்தில் இந்த தின வர்த்தகம் எனப்படும் Intraday Trading, வரமா? சாபமா? என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் வைத்தால் விஷயம் தெரிந்தவர்களுக்கு பெரிய வரம் என்றும், விஷயம் தெரியாதவர்களுக்கு சாபமோ சாபம் என்று மட்டும்தான் பாப்பையா தீர்ப்பு சொல்ல முடியும்.
அடுத்த வாரம் பங்குகள் கையில் இல்லாமலே விற்றுவிட்டு பின்னர் வாங்கி சரிகட்டும் Short Selling முறையை நிறைய உதாரணங்களோடு காண்போம்.
மேலும் பேசலாம்...
டாக்டர் சங்கர் குமார் எழுதும் பங்குச்சந்தை தொடர்பான இத்தொடர் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று அந்திமழையில் வெளிவரும்