தொடர்கள்

சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் 58

சுகுமாரன்

ஏலங்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு என்ற ஈ.எம்.எஸ். இன்று இருந்தால் அவருக்கு வயது நூறு. இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ்ஸின் நினைவை நிலைநிறுத்தும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

உலகிலேயே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் முதல்வராக இருந்தவர் என்ற புகழ் அவருக்கு உரிமையானது.ஆனால் அதுவல்ல ஈ.எம்.எஸ்ஸின் மகத்துவம். கடுமையான சாதிக் கட்டுப்பாடுகளும் மூர்க்கமான ஆச்சாரங்களும் நிறைந்த நம்பூதிரிப் பிராமண வகுப்பில் பிறந்தவர்.அந்த இறுக்கமான சூழலிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டார். முதலில் காந்தியவாதியாகவும் பின்னர் சோஷலிசவாதியாகவும் மாறினார். ஒரு முழுமையான கம்யூனிஸ்டாக
வாழ்க்கையை நிறைவு செய்தார்.இது அவருடைய மேன்மைகளில் முதலாவது. சொந்த சமூகத்தின் காலத்துக்கு ஒவ்வாத நம்பிக்கைளைக் கேள்விக்குட்படுத்தி நம்பூதிரிகளை மனிதர்களாக மாற்றுவது என்று முனைந்தார். அது இரண்டாவது சிறப்பு. மலபார், கொச்சி, திருவிதாங்கூர் என்று மூன்று துண்டுகளாகக் கிடந்த கேரளத்தை ஒன்றுபட்ட கேரளமாக மாற்றியவர் அவர். அது மற்றொரு சிறப்பு. அப்படி உருவான கேரளத்தை தன்னுடைய சீர்திருத்த நடவடிக்கைகளால் முன்னுதாரண
மாநிலமாக மாற்றினார். இன்று மலையாளிகள் நிமிர்ந்து நிற்பதற்கான காரணங்களில் பலவற்றுக்கும் ஈ.எம்.எஸ்ஸின் பங்களிப்பு உண்டு.கல்விச் சீர்திருத்தம், நிலச் சீர் திருத்தம். பெண்களுக்கான சொத்துரிமை இவையெல்லாம் அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டவை.

இன்று ஈ.எம்.எஸ். இருப்பாரானால் தன்னுடைய சமூகப் பணிகளுக்கு நேர்ந்திருக்கும் பின்னடைவுகள் அவரை துக்கமடையச் செய்திருக்கும். பொதுவுடைமைச் சிந்தனைகள் கேலிக்குரியதாகியிருப்பதும் மதச்சார்பின்மை ஓரங்கட்டப்படுவதும் அவரை வருத்தமடையச் செய்திருக்கும். இந்த இரண்டு போக்குகளுக்கும் ஆதரவாக அவர் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதினார். நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசினார்.கடைசி தினம் வரை இதே சிந்தனைகளுடன் இருந்தார்.இந்தச் சிந்தனைகளுக்கு மனிதனோடுள்ள வாஞ்சையின் ஈரத்தை அவர் கொடுத்தார். இன்று மார்க்சியம் இழந்திருப்பது அதைத்தான் என்று கருதலாம்.

நாராயண குரு ஆன்மீகத்துக்கு மனிதனையொட்டிய வியாக்கியானம் கண்டடைந்ததுபோல அரசியலுக்கு, குறிப்பாக, மார்க்சியத்துக்கு மனித முகத்தை அளித்தவர் ஈ.எம்.எஸ். அதுதான் அவரை எளிமையானவராகவும் எளியவர்களின் தோழராகவும் ஆக்கியிருந்தது.

@

ஈ.எம்.எஸ்ஸைப் பற்றிய ஜோக்குகளில் ஒன்று அவரைப் பற்றி யோசிக்கும்பொதெல்லாம் நினைவுக்கு வரும். அவருக்கு திக்குவாயுண்டு. அவரது மேடைப் பேச்சுகளிலும் இந்தத் திக்கல் இருக்கும். ஆனால் அவர் சொல்லுகிற விஷ்யங்களின் தீவிரத்தன்மை அந்தக் குறையை இல்லாமலாக்கி விடும். அவரிடம் யாரோ கேட்டார்கள்.

''உங்களுக்கு எப்போதும் திக்குமா?''

''எப்போதுமில்லை. பேசும்போது மட்டும்''

@

நூற்றாண்டு விழா கொண்டாடியிருக்கவேண்டிய இன்னொரு கலாச்சார நாயகர் பொன்குன்னம் வர்க்கி. மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான எழுத்தாளர்.அபாரமான சிறுகதைகள் எழுதியவர். அதற்காகப் பெரும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவர். கொஞ்சம் அராஜகவாதி. அதனால் சுதந்திரமானவர்.அவரது மறைவுக்குப் பின்னர் உடலை அடக்கம் செய்ய தேவாலயப் பங்கிலிருந்த கல்லறையில் அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவர் சபைக்கு எதிரானவர். மண்ணைப் பற்றிய
பெருமிதத்தைச் சொல்லும் 'சப்திக்குன்ன கலப்ப' (சப்திக்கும் கலப்பை) என்ற கதையெழுதிய வர்க்கி சார் தெம்மாடிக் குழியில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவிசுவாசிகளை அடக்கம் செய்யும் கல்லறைக்குப் பெயர் தெம்மாடிக்குழி. அதை மையமாக வைத்தே வர்க்கி ஒரு கதையும் எழுதியுள்ளார். காவிய நீதி - பொயட்டிக் ஜஸ்டிஸ் - என்பது இதுதானோ?

@

கூடியாட்டம் கேரள மரபுக்கலைகளில் ஒன்று. கூடியாட்டத்துகு எடுத்துக் கொள்ளப்படும் கதைகள் புராண இதிகாசங்களையொட்டியதாக இருக்கும்.
திரௌபதிக்காகத் தேவலோகத்துப் பாரிஜாதப் பூவைப் பறிக்கப் போன பீமனின் கதை, இலக்குவனால் மூக்கறுபட்ட சூர்ப்பநகையின் முறையீடு இவையெல்லாம் பாட்டும் இசையும் கலந்து வழங்கப்படும். நடிப்பும் பாவமும் இதன் அடிப்படைகள்.

ஒரு காலப்பகுதியில் மக்கள் ஆதரவு பெற்ற கலையாக இருந்த கூடியாட்டத்துக்கு இன்று ஆதரவாளர்கள் குறைவு. எனவே அதை நிகழ்த்தும் சாக்கியார்களும் குறைவு.மாபெரும் கூடியாட்டக் கலைஞரான அம்மன்னூர் மாதவ சாக்கியார் விடை பெற்றுக்கொண்டார். கூடியாட்டத்தின் கடைசி அற்புதம் அவர்.

91 வயதான அம்மன்னூர் கூடியாட்டத்துக்காகவே வாழ்ந்தவர். பதினான்காம் வயதில் அரங்கேறிய அவர் இறப்புக்குச் சில காலம் முன்புவரை கூத்தம்பல்லத்தில் நிறைந்திருந்தார். கூடியாட்டத்தை 'மனித இனத்தின் அமர கலை' என்று யுனெஸ்கோ நிறுவனம் சிறப்பித்து அதை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.அதற்கு மூல காரணம் அம்மன்னூர்தான். தன்னுடைய கலை வாழ்வில் பல பட்டங்களைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்படப் பல விருதுகளையும் பெற்றார்.இவையெல்லாம் பின்னாட்களில் நடந்தவை. ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்தவை புறக்கணிப்புகள்தாம். ஆனால் அவைதாம் இந்தக் கலையைப்
பிடிவாதமாக நேசிக்கச் செய்தது.

''பாலியத்து மனையில் மாதவ சாக்கியாரின் கூடியாட்டத்துக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று நாள்கள் கூத்து நடத்த வல்யம்மா நங்ஙயார் (நம்பூதிரி இல்லத்தலைவி) சொல்லியிருந்தார். முதல் நாள் ஆட்டம் வெற்றிமரமாக முடிந்தது. இரண்டாம் நாள் என்னென்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார் மாதவ சாக்கியார். அவரை அழைத்தார் நங்ஙையார். கூத்தெல்லாம் போதும். இனி வேண்டாம். ஒருநாள் ஆட்டத்துக்கு என்ன சன்மானமோ அதை வாங்கிக்கொண்டு
போகலாம் என்று சொல்லிவிட்டார்.

அம்மன்னூர் நொந்து போனார்.' என்ன அவமானம். இதில் ஒரு நாள் கூத்துக்கான அன்பளிப்பை வாங்கிக் கொண்டு போகவேண்டுமாம். அப்படியானால் எனக்கு நன்றாக ஆடத் தெரியவில்லை என்று ஆகாதா? பாதியில் விட்டுப் போனால் இனி என் கூத்துக்கு யார் வருவார்கள்?' என்று யோசித்துக் குமைந்தார்.

அதே இல்லத்தை சேர்ந்த குஞ்ஞிக்குட்டன் அச்சன் சாக்கியார் பார்த்தார். மாதவனை அழைத்தார். ''இன்றைக்குக் கூத்தில்லை, அல்லவா?'' என்று விசாரித்தார்.அம்மன்னூர் கண்கலங்கி விவரத்தைச் சொன்னார். '' இன்று உன்னுடைய கூத்துக்கு நான் உபயதாரன். நீ ஆடு'' என்று ஆறுதல் அளித்தார் அவர். அன்றைய கூத்துக்கு ஊரே திரண்டு வந்தது. அதற்குப் பிறகு அம்மன்னூர் கூடியாட்டம் நிகழ்த்தாத ஒரு மேடையும் கேரளத்தில் இல்லை.

''பாரீசில் நடந்த கூடியாட்ட நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்கள் எல்லாரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியபோது இந்தச் சம்பவம் என் நினைவுக்கு வந்தது. அன்று அந்த இளம் வயதில் நான் கொண்டிருந்த பிடிவாதம் சரியா என்று பலமுறை யோசித்திருந்தேன். அந்தக் கைதட்டல் சத்தங்கள் சரி சரி என்று ஆமோதித்தன.''என்று வாழ்க்கைக் குறிப்பில் நினைவு கூரிகிறார் அம்மன்னூர்.

(இன்னும்...)

 ஜூலை 03, 2008

அடுத்து>>>