அனுசுயா சீத்தக்கா 
தொடர்கள்

சீத்தக்கா

கவிதாபாரதி

மந்திரியான மாவோயிஸ்ட்டின் வரலாறு

தெலங்கானா மாநிலத்தின் புதிய மந்திரிசபை பதவியேற்கிறது.

தனசரி அனுசுயா சீத்தக்கா ஆன நேனு... என்று தன் பதவிப்பிரமாணத்தைத் தொடங்குகிறார். கூடியிருந்த கூட்டம் உற்சாகத்தோடு ஆரவாரிக்கிறது

யாரிந்த சீத்தக்கா...?

சீத்தக்கா என்னும் அனுசுயா 1971-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி ஆந்திராவின் எல்லையோர மலைக்கிராமமான ஜக்கனகுடெம் என்னுமிடத்தில் பிறந்தார்..

அவர் பிறந்த இடம் ஆயுதப்போராளிகள் செல்வாக்குடன் திகழ்ந்த பகுதியாகும்.. தான் பிறந்த கோயா பழங்குடி மக்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள சீத்தக்கா மார்க்சிய லெனியத்தைப் பின்பற்றிய ஜனசக்தி என்னும் நக்சல் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப்போராளியானார்.. இயக்கப் போராளியாக இருந்த சொந்த சகோதரன் சம்பையா ஒரு போலிஆயுதப்போராட்டத்தில் சுட்டுக் கொல்லப் பட்டதே அவரை ஆயுதம் ஏந்த வைத்தது.

அனுசுயா அப்போது பத்தாவது முடித்திருந்தார்.. இயக்கம் அவருக்கு வைத்த பெயர்தான் சீத்தா, அந்த சீத்தாதான் சீத்தக்காவானார்.

தன் மலைவாழ் மக்கள் மீதான  அடக்குமுறைகள், அவர்களை ஒடுக்கிய வனச்சட்டங்களுக்கு எதிராக அவர் தீவிரமாகப் பணியாற்றினார்.

அரசு நிர்வாகத்திற்கெதிராக பல்வேறு ஆயுதப்போராட்டங்களில் பங்கேற்றார். இயக்கத்தில் சகபோராளியாக இருந்த தன் மாமன் மகனையே திருமணம்செய்துகொண்டார். கர்ப்பமானநிலையில் தன் கணவரைப் பிரிய நேரிட்டது.

இயக்கப்பணிகளில் கவனம் செலுத்த இயலாததால் இரண்டு மாதங்களே ஆன தன் மகனை அவர் தத்துக் கொடுத்தார் தொடர் போராட்டங்களால் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியானார். பதினொரு ஆண்டுகள் இயக்க வாழ்க்கைக்குப் பிறகு அவருக்கு இயக்கத்தோடு முரண்பாடு ஏற்பட்டது. அவர் சார்ந்த இயக்கம் பல குழுக்களாகப் பிரியும் நிலை ஏற்பட்டது. இதில் பல போராளிகள் மனோரீதியாகப் பலவீனமடைந்தனர்.

1997-ல் ஆந்திர அரசாங்கம் ஒரு பொதுமன்னிப்புத் திட்டத்தை அறிவித்தது, அதைப் பயன்படுத்தி சீத்தக்கா இயக்கத்தைவிட்டு வெளியேறி சரணடைந்தார்.. சில மாதகால சிறைத் தண்டனைக்குப் பிறகு பொதுமன்னிப்புப் பெற்றார்..

அதன்பிறகு சட்டம் பயின்று, வாரங்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார்.. எந்த நீதிமன்றத்தில் நான் குற்றவாளியாக நின்றேனோ, அதே நீதிமன்றத்தில் முதன்முதலாக கருப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராக நின்ற கணம் சிலிர்ப்பானது என்கிறார் சீத்தக்கா..

தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை வருமானம் ஈட்டுவதைவிட, தன் மக்களுக்கான சட்டப்போராட்டங்களுக்கே பயன்படுத்தினார்.. இந்நிலையில் மலைவாழ் மக்களோடு இணைந்து பணியாற்றும் யட்சி என்னும் அரசு சாரா நிறுவனத்தில் இணைந்து அவர் அம்மக்களுக்கான சேவையில் ஈடுபட்டார். இது தொடர்பான கோரிக்கைகளுக்காக அவர் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நேர்ந்ததில் அவரோடு நல்ல அறிமுகம் ஏற்பட்டது.

இதற்கிடையில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். (இந்த நேரத்தில் உங்களுக்கு அந்த entire political science பட்டம் நினைவுக்கு வரக்கூடாது)

இந்நிலையில் முதல்வர் சந்திரபாபுநாயுடு மீது மாவோயிஸ்ட் இயக்கம் கொலைமுயற்சித் தாக்குதலில் ஈடுபட்டது. அதில் அவர் படுகாயமடைந்தார். இதில் உடன்பாடில்லாத சீத்தக்கா சந்திரபாபு நாயுடு மேலிருந்த அபிமானத்தால் தெலுங்குதேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2004-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முலுகு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் அவர் தோல்வியடைந்தார்.

அதே தொகுதியில் 2009-இல் அவர் வெற்றியடைந்தார். தெலுங்கானா பிரிவினைக்குப் பிறகு நடந்த 2014- தேர்தலில் தோல்வியடைந்தார்.

2018-இல் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், அதே ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 2019-இல் கோவிட் காலத்தில் மலைவாழ் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள்தாம் அவரை பெரும் செல்வாக்கடைய வைத்தன. மாட்டு வண்டிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும், இவை எதுவும் செல்ல முடியாத இடங்களுக்கு தலைச்சுமையாகவும் இவர் உணவுப்பொருட்களையும், நிவாரணப் பொருட்களையும் கொண்டுசென்று சேர்த்தார். உண்மையில் மற்ற நாட்களைக் காட்டிலும், இந்த கோவிட் காலத்தில்தான் நாங்கள் வயிறார சாப்பிட்டோம். அதற்குக் காரணம் சீத்தக்கா என்று அந்த மலைவாழ்மக்கள் மனம் நிறைந்து பாராட்டினர் இளைஞர் கூட்டம் சமூகவலைதளங்களில் சீத்தக்காவின் சேவைகளைக் கொண்டாடி மகிழ்ந்தது. இது பொறுக்காத அவரது சொந்தக் கட்சித் தலைவர்களே வழக்கம்போல் அவரை விளம்பரவிரும்பி என்று சொல்லி சுயதிருப்தியடைந்தார்கள்.. இதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, என் செயல்களுக்குக் கிடைத்த விளம்பரத்தால்தான் என்னை நம்பி, என் மூலமாக பலர் எம்மக்களுக்கு உதவினார்கள் என்றார் சீத்தக்கா இதன் காரணமாகவே கடந்த தேர்தலில் அந்த மக்கள் சீத்தக்காவை பெரும்வெற்றி பெறவைத்தார்கள்.. முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி தனது அமைச்சரவையில் சீத்தக்காவை மலைவாழ் மற்றும் பழங்குடி-யினருக்-கான அமைச்சராக சேர்த்துக் கொண்டார்.

இதுதான் ஒரு மாவோயிஸ்ட் மந்திரியான கதை.  இன்றைக்கும் ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயுதம்தாங்கிய குழுக்கள்தான் அப்பகுதிகளைப் பாதுகாக்கின்றன எனச் சொல்லலாம். இல்லாவிட்டால் அந்த மக்களை விரட்டிவிட்டு, பன்னாட்டு பெரு நிறுவனங்கள் மலைகளைச் சூறையாடியிருக்கும்.

இதுபோன்ற இடங்களில் அரசே அக்குழுக்களிலிருந்து போராளி களைப்பிரித்து கும்கியானைகளை உருவாக்கி ஆயுதக்குழுக்களை அடக்கவும், அழிக்கவும் பயன்படுத்துவார்கள், அற்ப வசதிகளுக்காக இப்படி விலைபோய் எதிர்நிலைக்குச் சென்றவர்கள் நிறைய உண்டு.

ஆனால் சீத்தக்கா ஆயுதம் தாங்கியபோதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை.. எப்போதும் அவள் எங்கள் மக்களுக்காகத்தான் பணியாற்றினாள்.. அமைச்சராகவும் அதையேதான் செய்வாள் என்கிறார் அவரது தாயார் மக்கள் நலனுக்காக ஆயுதம் ஏந்திய சீத்தக்கா, இப்போது அதற்கான திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.. அவரது நோக்கங்கள் வெல்லட்டும்.. வாழ்த்துவோம்!