நவீனத் தமிழிலக்கிய விவாதப் பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் இதழ் 'கவிதாசரண்'.
கவிதாசரண் என்கிற தனிமனிதனின் முயற்சியில் கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பல தலித்திய இதழ்களுக்கு முன்னோடி இதழ் இது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கவிதாசரண் முதலிதழ் முகிந்தது.
'தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்' எனும் முனைப்புடன் கதை, கவிதை, கட்டுரை என முழுக்க இலக்கியம் சார்ந்து மட்டுமே ஓராண்டுகாலம் வெளிவந்து கொண்டிருந்தது.
முதல் இதழ் தொடங்கப்பட்டபோது 44 பக்கங்களில் வெளிவந்தது. தனி இதழ் 3 ரூபாயும், ஆண்டு சந்தா 36 ரூபாயுமாகவும் இருந்தது. 3 ஆவது ஆண்டிலிருந்து படிப்படியாக 60 பக்கம், 80 பக்கம் எனப் பக்கங்கள் கூடிக் கொண்டே சென்றது. சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் (A8 size) 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து (46 ஆவது இதழிலிருந்து) பெரிய அளவில் (A4 size) இரு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது.
1992ஆம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் இலக்கியத்துடன் சமூகவியல் சார்ந்த பிரச்சனைகளையும் மையப்படுத்தி வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து இலக்கிய வெளியில் தலித்தியம், பெரியாரியம் சார்ந்து இயக்கங்கொள்ள தொடங்கி இன்றுவரை அந்நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் வந்து கொண்டிருக்கிறது.
"தமிழில் தலித் இதழ்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே தலித்தியம் பேசிய ஒரு இதழ் கவிதாசரண். இன்றும் கருத்தியல் அளவில் தலித்தியம் குறித்து அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதழ் இதுதான்" என்கிறார் ஆசிரியர் கவிதாசரண்.
மரபுகளையும், நீதிகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறது கவிதாசரண்.
அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, தொ. பரமசிவம், நா. மகம்மது, ஸ்டாலின் ராஜாங்கம், பாரி செழியன், சுகுணா திவாகர், வளர்மதி போன்றோர் இதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
விவாதத்திற்குரிய கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பெ.சு. மணி, தி.க.சி. போன்றவர்கள் தொடர்ந்து விரிவான கடிதங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது கவிதா சரண்.
விமர்சன ரீதியில் சிலருக்கு அதிர்ச்சியையும் திடுக்கிடுதலையும் கொடுத்த இதழ் கவிதா சரண். இத்தகைய அதிர்ச்சியும் திடுக்கிடுதலும் இன்றும் தொடர்கிறது. எந்த விஷயத்தையும் ஆழமாக விவாதிப்பது, எந்த தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் கருத்தியலின் பிரதிநிதியாக விமர்சிப்பது கவிதாசரணின் போக்காக அமைகிறது.
சுந்தர ராமசாமியின் படைப்பை முதன் முதலில் விமர்சித்து வந்த 'ராமசாமியின் சொந்த முகம்' எனும் கட்டுரையும் தலித்தியம், பிராமணியம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களும் குறிப்பிடத்தக்கன.
சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் இவ்விவாதங்களில் கலந்து கொண்டனர்.
"தயவு தாட்சண்யமின்றி அணுகுவதால் நண்பர்கள் கூட முரண்பட்டு பிரிந்திருக்கிறார்கள். சுய விளம்பரத்திற்காக எதையும் செய்வதில்லை" என்கிறார் கவிதாசரண்.
இதழ் தயாரிப்பதில் ஒளியச்சு தொடங்கி விற்பனை வரை கவிதாசரணும் அவரது துணைவியாரும் மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆசிரியர் கவிதாசரணைப் பற்றி:
கவிதாசரண், கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் ஒரே மகனையும் மூளைக் காய்ச்சல் நோயால் 1980இல் பறிகொடுத்தவர். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கவிதாசரணை ஆரம்பித்தார். 'கவிதாமணி' என்கிற பெயரில் 1957லிருந்து 1972 வரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான்கு நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 இலக்கியத் திறனாய்வு நூல்கள், 1 கவிதைத் தொகுப்பு என 12 நூல்களை 'பிறைமுடி' எனும் தமது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.
'கவிதாமணி' என்பது பட்டப் பெயரைப் போல் இருப்பதால் கவிதாசரண் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.
1970களில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் (ஜேக்டி) சென்னை மாநகரத் தலைவராக இருந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.
தற்போது 70 வயது ஆனாலும் ஓர் இளைஞனுக்குரிய உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
"பொருளாதார ரீதியாக இதழ் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான உடல் உழைப்பிலும் என் துணைவியார் பங்கு முக்கியமானது. இவர் தான் எனக்கு பக்கபலமாக, உந்துசக்தியாக இருக்கிறார். அதனால்தான் என்னால் இந்த வயது வரை பொருளாதார சிக்கல் இருந்தாலும் பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிகிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன் கவிதாசரண்.
அவருடன் சிறு நேர்காணல்:
கவிதாசரண் இதழை நடத்துவதற்காக நோக்கம் என்ன?
"சமூகத்தில் பேசப்படாத செய்திகளை விவாதிப்பதற்காகவும், மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன். சிந்திக்க வேண்டுமெனில் கேள்விகள் வேண்டும். அதனால்தான் கவிதாசரணில் நிறைய கேள்விகள் இடம்பெறுகின்றன.
வேறு வேலை இல்லை என்பதாலும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துவதும் மாற்றுக் கலாச்சாரம் மற்றும் மாற்றுக் குரல்களுக்கு முக்கியத்துவம் தருவதும் கவிதாசரணின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன்".
இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
"கவிதாசரண் இதழ் தொடர்ந்து தலித்தியம் பேசினாலும் தலித் இதழ் என தலித் அறிஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. தலித் அல்லாதவர்கள் கவிதாசரண் தலித்தியம் பேசுவதாக அவர்களும் ஒத்துக் கொள்வதில்லை. நான் தலித் அல்லாதவன் என்றாலும் சாதியற்ற மனிதனாக வாழ்கிறேன்.
நான் யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.
காலத்திற்குத் தேவையான கருத்தியலை முதன்மைப்படுத்தி பதிவு செய்து வருகிறேன். சில அரசியல் பெரும் புள்ளிகளும், பத்திரிகையாளர்களும் கவிதாசரணை தொடர்ந்து படித்துவருகின்றனர்.
இலக்கிய வாசகர்களின் ஆதரவும் இருக்கிறது. சிறு பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாகும் இதழ் கவிதாசரண்.
ஜனவரி 12, 2006