தொடர்கள்

புதுவிசை

சிற்றிதழ் அறிமுகம்-6

மு. யாழினிவசந்தி

" 'இன்றைக்கு நான் பூனை' என்று காலையில் தூங்கி எழுந்ததும் அப்பாவிடம் 'இங்ரிட்' சொல்லிவிட்டால் அன்று முழுக்க அவள் பூனையாகவேதான் இருப்பாள்.மனித பாஷையில் அவள் ஒரு வார்த்தைக் கூட பேசமாட்டாள். எல்லாமே 'மியாவ்..மியாவ்...' பாஷையில் தான். ஒரு நாள் பாட்டியாக இருப்பாள். அன்று முழுக்க வீல்சேரில் அமர்ந்தபடி நடுங்கும் கைகள் குழறும் வார்த்தைகளுடன் அப்பாவை வாடா போடா என்று பேசிக் கொண்டிருப்பாள். ஒருநாள் நாயாக இருந்தாள்.காலையில் அப்பா வாக்கிங் போகும் போது நாலுகால் பாய்ச்சலில் முன்னால் ஓடி வழியில் மரம் கண்ட இடத்தில் ஒரு காலை துக்கி ஒன்றுக்கு இருந்து.." என்று இரண்டு மணி நேர 'வாக்கிங்' பொழுதும் அப்பாவுக்கு முன்னும் பின்னுமாக நாய் ஓடிக் கொண்டிருந்தது,. அன்று சாயங்கால 'வாக்கிங்' போகும் போது அப்பா, ' வேண்டாம்மா உனக்கு கை கால் முட்டி எல்லாம் வலிக்குமே' என்று தடுத்த போது 'லொள் லொள்' என்று தலையை வேகமாக ஆட்டி மறுத்ததோடு கழுத்துக்கு பெல்ட்டும் சங்கிலியும் கட்டி கையில் பிடித்துக் கொண்டு போகும்படி அப்பாவை நாய் வற்புறுத்தி தரையைப் பிறாண்டி 'வாள்........வா.....ள்' என்று அடம் பிடித்தது.
கழுத்து பெல்ட்டையும் சங்கிலியையும் வாயில் கவ்விக் கொண்டு வந்து அப்பாவின் முன் போட்டது......"

உலகின் முன்னணி அப்பாவிகளில் ஒருவராக வாழ்ந்து நடிப்பதில் உலகைக் கட்டி தன் பின் இழுத்துச் சென்று மூன்று முறை ஆஸ்கார் விருது பெற்ற, ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த இங்ரிட் பெர்க்மென் சிறுமியாக இருந்த போதே நடிப்பின் மீது தீராத காதலைக் கொண்டு அப்பாவிடம் நடித்துக் காட்டிய காட்சிகள் தாம் மேலே குறிப்பிட்ட காட்சிகள். ஸ்வீடன் தேசம் கலை உலகுக்கு அளித்த கொடையான இங்ரிட் பெர்க் மென்னை பற்றிய இக் கட்டுரை (ஏப்-ஜூன் 05) புதுவிசை கலாச்சார காலாண்டிதழில் இடம் பெற்றிருக்கிறது. தமிழில் வெளி வந்து கொண்டிருக்கும் நவீன கலை இலக்கிய இதழ்களில் முக்கியமானது 'புதுவிசை'. உள்ளடக்க ரீதியிலும் வடிவமைப்பிலும் தனித்துவம் கொண்டது. வாசகர், எழுத்தாளர் பலரது பாராட்டைப் பெற்ற இதழ். எழுத்தாளர் கந்தர்வன் எண்ணத்தில் உருப்பெற்று ஆதவன்தீட்சண்யா, சா. தமிழ்ச் செல்வன், ஷாஜஹான், ஜா. மாதவராஜ் ஆகியோரின் முயற்சியில் வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் புதுவிசை.

முதல் இரண்டு இதழ் விசை என்ற பெயரில் வெளிவந்தது. மூன்றாவது இதழிலிருந்து 'புதுவிசை' என்ற பெயரில் வெளி வருகிறது.
ஆசிரியர் குழுவில்: ச. தமிழ்ச் செல்வன், நாறும்பூ நாதன், ஜா. மாதவராஜ், ஜே. ஷாஜஹான், உதயசங்கர், கமலாலயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.முதல் இதழ் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்தது. தொடர்ந்து ஏழு இதழ்கள் வெளிவந்தன. நிதிப்பற்றாக் குறையின் காரணமாக சில ஆண்டுகள் இதழ் வெளிவராமல் நின்று போனாலும் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. பிறகு மீண்டும் ஏப்ரல் 2005 முதல் இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

கலாச்சார ரீதியில் புதுச் செய்திகளை அறிமுகப்படுத்துவது, மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு 'புதுவிசை' வெளிவந்து கொண்டிருக்கிறது.புதுவிசையில் எழுதத் தொடங்கிய பலர் இன்று சிறந்த படைப்பாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் உருப்பெற்றுள்ளார்கள் என்று அதன் ஆசிரியர் கூறுகிறார். பேரா. மணிக்குமார், குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி, லட்சுமண பெருமாள், ஜெயராணி போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

சிற்றிதழ் சூழலில் நிலவும் தனிமனிதத் தாக்குதல் எதையும் புதுவிசை செயல்படுத்துவதில்லை. கொள்கை ரீதியாக மட்டுமே முரண்பாடு கொள்கிறது. ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் படைப்பாளிகளாக இருந்தும் தம்முடைய படைப்புகளால் இதழை நிரப்பி விடாமல் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது புதுவிசையின் சிறப்பாகும்.
புதிய ஆளுமைகளையும், ஆய்வுத் தளத்தையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுகிறது.

'புதுவிசையில்' உலகின் முக்கிய கலை ஆளுமைகளை தமிழ் வாசகர்களுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றும் இடம் பெறுகிறது. இதனை தமிழ்ச்செல்வன் எழுதி வருகிறார்.இத்தொடரில் ஓவியர்கள் 'ப்ரைடாகாலா', 'பால்காகின்', 'இகான் செல்' ஆகியோரை குறித்தும் ஹாலிவுட் நடிகையர் 'லீவ் உல்மன்' 'இங்ரிட் பெர்க்மன்' ஆகியோரின் ஆளுமைகளைக் குறித்தும் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பு கதைகளும், கவிதைகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

'தூரிகைத் தடங்கள்' எனும் தொடரில் ஓவியர் ட்ராஸ்கி மருது உலகின் முக்கிய ஓவியர்களைப் பற்றி எழுதி வருகிறார். பாவண்ணன், கே.ஏ. மணிக்குமார், கி. பார்த்திபராஜா போன்றோரும் தொடர் எழுதி வருகின்றனர். நாட்டுப்புறவியல் குறித்து இளம் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் புதுவிசையில் இடம்பெறுகின்றன.

ஆ. சிவசுப்பிரமணியத்தின் 'தர்கா:இந்து முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம்'. 'பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்', 'பிள்ளையார் அரசியல்' ஆகிய மூன்று நூல்களையும், டி.வி. வெங்கடேஸ்வரின் 'அறிவாளிகளா முட்டாள்களா', 'ஆதலினால்' மற்றும் சு. வெங்கடேசனின் 'மதமாற்றத் தடைச் சட்டம்: மறைந்திருக்கும் உண்மைகள்' எனும் நூலையும் புதுவிசை வெளியிட்டிருக்கிறது.

புதுவிசை தற்போது இணைய வாசகர்களுக்காக www.puthuvisai.comwww.pudhuvisai.com எனும் இணைய முகவரிகளில் வெளிவருகிறது.

ஆசிரியர் ஆதவண்தீட்சண்யாவிடம் இரண்டு கேள்விகள்:

இதழ் புதுவிசையின் நோக்கம் என்ன?

"தமிழில் ஏராளமான சிறு பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. சமூகத்தில் நிலவுகின்ற நிலைக்கு ஆதரவாக அவை செயல்படுகின்றன. சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி அவை பேசுவதில்லை. வெறும் படைப்புகளை மட்டும் வெளியிடுவது புதுவிசையின் நோக்கம் அல்ல.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும், முரண்பாடுகளைப் பற்றியும் விவாதிப்பதற்காகவும் புதுவிசையை நடத்திக் கொண்டிருக்கிறோம். வகுப்புவாதத்திற்கு இடமளிக்காமல் இடதுசாரிப் பார்வையோடு இதழை நடத்திக் கொண்டு வருகிறோம்.

ஒரு படைப்பாளியாக பத்திரிகை நடத்துவதை எப்படி உணர்கிறீர்கள்?

"இது போன்ற இதழை நடத்துவது முக்கியமான, பொறுப்பான விஷயமாக கருதுகிறோம். தொடர்ந்து நடத்த வேண்டுமென்று விரும்புகிறோம்"

ஜனவரி 12, 2006